Published:Updated:

`சிக்கலே இல்லாமல் சின்னத்தை ஒதுக்கினார்!' -மன்னார்குடி வேட்பாளர்களை அசரவைத்த தேர்தல் அலுவலர்

மன்னார்குடி அருகே தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஒருவரின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.

வேட்பாளருடன் தங்கபாபு
வேட்பாளருடன் தங்கபாபு

மன்னார்குடி அருகே உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவரின் செயல்பாடு வேட்பாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வேட்பாளர்களுக்கு எந்தக் குழப்பமும் வராமல் இருப்பதற்காக அவர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி டப்பாவில் வைத்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வரிசையாக சின்னங்களை ஒதுக்கியதுடன், அந்தச் சின்னத்தைத் தனித்தனி சார்ட் ஷீட்டில் வரைந்து கொடுத்து அசத்தினார்.

வேட்பாளர்களுடன் தங்கபாபு
வேட்பாளர்களுடன் தங்கபாபு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் பதவிகளுக்கு மனுத்தாக்கல் செய்துவிட்டு பிரசாரப் பணிகளை விறுவிறுப்பாகச் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்களுக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நேற்று சின்னம் கொடுக்கப்பட்டது. இதில் தாங்கள் எதிர்பார்த்த சின்னம் கிடைக்கவில்லை என்று பலர் வருத்தப்படுவது வழக்கம். இல்லையென்றால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுவதுண்டு.

இதைத் தடுக்கும்விதமாக மன்னார்குடி அருகே தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஒருவரின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது.

மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் கும்மட்டித்திடல் ஊராட்சியும் ஒன்று. இங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டிருப்பவர் தங்கபாபு. தலைமை ஆசிரியரான இவர், எப்போதும் தேர்தல் பணிகளில் மிக நேர்த்தியாகச் செயல்படுபவர்.

சின்னத்துடன் வேட்பாளர்கள்
சின்னத்துடன் வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலும் சின்னத்தைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அந்தச் சின்னத்தை சார்ட் ஷீட்டில் சின்னத்தை வரைந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

தங்கபாபுவிடம் பேசினோம். `` கும்மட்டித்திடல் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. 30 வேட்பாளர்கள் வேட்புமனு செய்திருந்த நிலையில் 5 பேர் வாபஸ் பெற்று 25 நபர்கள் களத்தில் உள்ளனர். வார்டு 8, 9-ல் இரண்டு வேட்பாளர்களும் மற்ற வார்டுகளில் தலா 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவர்கள் சின்னம் பெற வந்தபோது வார்டு வாரியாக வேட்பாளர்களை அழைத்து, அவர்களின் பெயர்களை பேப்பரில் எழுதி, டப்பாவில் வைத்துக் குலுக்கிப் போட்டேன். அதை எடுத்துக்கொண்டு முதலில் வரும் பெயர்களுக்கு முதலாவது சின்னமான திறவுகோல் சின்னத்தைக் கொடுத்தேன்.

தங்கபாபு
தங்கபாபு

இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே சீப்பு, கட்டில் ஆகிய சின்னங்களை ஒதுக்கி அந்தச் சின்னங்களை தனித்தனியாக சார்ட் அட்டையில் வரைந்து கொடுத்தேன். இதனால் சிறு குழப்பமும் இல்லாமல், வேட்பாளர்கள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லாமல் தேர்தல் சின்னங்களைப் பெற்றுக்கொண்டனர்" என்றார் உற்சாகமாக.