Published:Updated:

`ஒதுக்கியது ஸ்பேனர் சின்னம்; வாக்குச்சீட்டில் ஸ்குரூ சின்னமா?' - கொதித்த சுயேச்சை வேட்பாளர்

வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சின்னங்கள்
வேட்பாளருக்கு வழங்கப்பட்ட சின்னங்கள்

வாக்குச்சாவடிக்கு வெளியே வேட்பாளர் அட்டவணையில் ஸ்பேனர் சின்னம் போடப்பட்டிருக்கிறது. ஆனால்,உள்ளே வாக்குச்சீட்டில், ஸ்குரூ சின்னம் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோங்குடிப்பட்டி, பாக்குடி, பேராம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளை உள்ளடக்கிய 15வது வார்டில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 9 பேர் வேட்பாளராகக் களமிறங்கினர். இதில், சுயேச்சை வேட்பாளரான பாக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு மாநில தேர்தல் ஆணையம், ஸ்பேனர் சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இதையடுத்து, சேகர் பொதுமக்களிடம் ஸ்பேனர் சின்னத்தைக் காண்பித்து வாக்கு சேகரித்தார்.

ஸ்பேனர் சின்னம்
ஸ்பேனர் சின்னம்

இந்த நிலையில், தேர்தல் நாளான நேற்று வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், வாக்குச்சீட்டுகளில் ஸ்பேனருக்குப் பதிலாக ஸ்குரூ சின்னம் இருப்பதாகக் கூறி உடனே வாக்குப்பதிவை நிறுத்தக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சேகர் முறையிட்டார். ஆனால், தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவினை நிறுத்தவில்லை. இதையடுத்து, இதுபற்றி தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டு சேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மறு தேர்தல் இந்தப்பகுதியில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல்களில் ஏலம் விடுவது சரியா?... வாசகரின் கேள்விக்குப் பதில்!#DoubtOfCommonMan

இதுகுறித்து பேசிய சேகர், ``எனக்கு எதிராக, மிகப்பெரிய சதியே நடந்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளேன்" என்று கொதித்தார்.

ஸ்குரூ சின்னம்
ஸ்குரூ சின்னம்

இதுபற்றி பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி,``வேட்பாளருக்கு ஸ்பேனர் சின்னம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாக்குச்சீட்டில் அவரது சின்னம் தவறுதலாக வந்துள்ளது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை இருக்கும். அதன்பின்பு மாற்று நடவடிக்கையும் இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு