Published:Updated:

`தலைவர் பதவி; செட்டில்மென்ட்?' -புதுக்கோட்டை அருகே வாக்குப்பெட்டியைத் தூக்கிச் சென்ற இளைஞர்கள்

தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டி
தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டி

வாக்குச்சாவடி மையத்திற்குள் திடீரெனப் புகுந்த இளைஞர்கள் சிலர், அங்கிருந்த வாக்குப் பெட்டியை எடுத்துக்கொண்டு, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரைத் தள்ளிவிட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே, வெம்மணி ஊராட்சிக்குட்பட்ட பெரிய மூலிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேர்தல் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்குள்ள 150-வது வாக்குச்சாவடி மையத்தில், காலையிலிருந்து மாலை வரையிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென வாக்குச்சாவடி மையத்திற்குள் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்தனர்.

மாதிரி வாக்குப்பெட்டி
மாதிரி வாக்குப்பெட்டி

அப்போது, சீல் போட்டு வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டி ஒன்றை தூக்கிக்கொண்டு அங்கிருந்த தப்ப முயன்றனர். அவர்களை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தூக்கிச் செல்லவிடாமல் தடுத்தனர். தடுத்த போலீஸ்காரர்களைத் தள்ளிவிட்டு, அந்த இளைஞர்கள் வாக்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அங்கிருந்து காட்டுப்பகுதியை நோக்கி ஓட்டம்பிடித்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். உடனே, இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போலீஸாருக்குப் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையிலான போலீஸார் வாக்குப்பெட்டியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பெட்டியை காட்டுப்பகுதிக்குள்ளே அந்த இளைஞர்கள் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, காட்டுப்பகுதிக்குள் கிடந்த வாக்குப் பெட்டியை போலீஸார் பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்பி அருண்சக்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்றதாக, பெரியமூலிப்பட்டியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் மூர்த்தியை (23) போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டி
தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பெட்டி

மூர்த்தியின் அப்பா துரை, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு செய்ததாகவும், எதிர்த் தரப்பினர் அவருக்கு செட்டில்மென்ட் கொடுப்பதாகக் கூறி வாபஸ் வாங்க வைத்ததாகச் சொல்கிறார்கள். இதனிடையே, வாபஸ் வாங்கிய துரைக்கு செட்டில்மென்ட் சென்று சேரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், எதிர்த் தரப்பினரின் தோல்விக்காக, மூர்த்தி வாக்குப் பெட்டியைத் தூக்கிச்செல்ல முயன்றிருக்கலாம் என்று அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர். இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``வாக்குப்பெட்டியைத் தூக்கிச்சென்ற முக்கிய நபரைப் பிடித்துவிட்டோம். மற்றவர்களையும் தேடிவருகிறோம். கைப்பற்றப்பட்ட வாக்குப் பெட்டி தற்போது பாதுகாப்பாக உள்ளது. அதன் சீல் ஏதும் உடைக்கப்படவில்லை. மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே, என்ன காரணத்திற்காக தூக்கிச் சென்றார்கள் என்பது தெரியவரும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு