Published:Updated:

`பட்டியலில் இடம்மாறிய 800 வாக்காளர்கள்!' -தேர்தலையே புறக்கணித்த ராமநாதபுரம் கிராமங்கள்

வாக்காளர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய அறுவடைப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் வெகுதூரம் சென்று வாக்களிப்பதும் சிரமம் எனக் கருதுகின்றனர்.

தேர்தல் புறக்கணிப்பு
தேர்தல் புறக்கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட 3 கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குழப்பத்தால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 800 வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள சித்தப்பனேந்தல்
தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ள சித்தப்பனேந்தல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக போகலூர், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார் கோயில், பரமக்குடி ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 9 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கும் 89 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கும் 261 கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 1785 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கென 1,006 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

`இனப்பெருக்கத்துக்கு வந்த பறவைகள் அவை!' -ராமநாதபுரம் வனத்துறையைப் பதறவைத்த 5 பேர்

இந்த நிலையில், நயினார் கோயில் ஒன்றியத்துக்குட்பட்ட பந்தப்பனேந்தல் ஊராட்சி ஒன்றாவது வார்டைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர்களும் சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 3 வார்டுகளில் சுமார் 400 வாக்காளர் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் மாறியுள்ளன.

இதனால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாய அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வெகுதூரம் சென்று வாக்களிப்பதும் சிரமம் எனக் கருதுகின்றனர்.

தேர்தல் வாக்குசாவடி
தேர்தல் வாக்குசாவடி

இதைக் கண்டித்தும், ஏற்கெனவே கடந்த தேர்தல்களின்போது தாங்கள் வாக்களித்த மையங்களிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரியும் 3 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800 வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லாமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இதையடுத்து, இக்கிராமங்களுக்குச் சென்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தங்களது கோரிக்கை நிறைவேற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என 3 கிராம மக்களும் உறுதியாக உள்ளனர்.