Election bannerElection banner
Published:Updated:

`தொகுதி மக்களுக்காக அப்பாவை அர்ப்பணித்துவிட்டோம்!’ -கவனம் ஈர்க்கும் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரசாரம்

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

``எங்கள் குடும்பத்தினர் என் தந்தையை திருமங்கலம் தொகுதி மக்களுக்காக அர்ப்பணித்துவிட்டார்கள்" என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி சென்டிமென்ட்டாக பிரசாரம் செய்துவருவது அனைவராலும் கவனிக்கப்பட்டுவருகிறது.

இரண்டாவது முறையாக திருமங்கலத்தில் போட்டியிடும் ஆர்.பி.உதயகுமார் கிராமத்து வீடுகளில் டீ குடிப்பது, டீக்கடைகளில் மாஸ்டராகி டீ போடுவது, முதியோர் காலில் விழுவது எனத் தீவிரமாக வாக்கு சேகரித்துவருகிறார்.

இந்தநிலையில், பல்வேறு ஊர்களில் பிரசாரம் செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் பிரியதர்ஷினி, ``கடந்த சட்டமன்றத் தேர்தலில் என் தந்தை இங்கு போட்டியிட்டார். அவரை 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக நீங்கள் அளித்த கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்.

பிரசாரத்தில் பிரியதர்ஷினி
பிரசாரத்தில் பிரியதர்ஷினி

24 மணி நேரமும் தொகுதி மக்களின் நலனைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருப்பார். எங்கள் குடும்பத்தினர் திருமங்கலம் தொகுதி மக்களுக்காக எனது தந்தையை அர்ப்பணித்துவிட்டார்கள். திருமங்கலம் தொகுதியில் அனைத்து கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அதேபோல் இந்தப் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்பட்டிருக்கிறது. 33 கோடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. திருமங்கலம் தொகுதி உச்சப்பட்டியில் துணைக்கோள் நகரம் உருவாக்கப்பட்டுவருகிறது.

திருமங்கலம் தொகுதியிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் கொரோனா காலத்தில் அரிசித் தொகுப்பு, காய்கறித் தொகுப்பு, கோதுமைத் தொகுப்பு, கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலம் வேட்பாளராக எனது தந்தையை முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளில், ஐம்பது ஆண்டுக்காலம் செய்ய வேண்டிய பல திட்டங்களை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

மக்கள் நலனே தன் நலம் என்று இரவு பகல் பாராமல் தன்னை அர்ப்பணித்து உழைத்துவரும் என் தந்தைக்கு வாக்களித்து மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடியாரை அரியணையில் அமர்த்தும் வகையில் திருமங்கலம் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்ற தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கித் தர வேண்டும்" என்றார்.

பிரியதர்ஷினியின் பிரசாரம் திருமங்கலம் தொகுதியில் அனைவராலும் கவனிக்கப்பட்டுவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு