Published:Updated:

களமிறங்கும் வாரிசுகள்... களைகட்டும் உள்ளடி... உள்ளாட்சி உறியடி!

வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு பிரசாரம்...
பிரீமியம் ஸ்டோரி
வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு பிரசாரம்...

நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா, மாநகராட்சியின் 11-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

களமிறங்கும் வாரிசுகள்... களைகட்டும் உள்ளடி... உள்ளாட்சி உறியடி!

நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா, மாநகராட்சியின் 11-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

Published:Updated:
வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு பிரசாரம்...
பிரீமியம் ஸ்டோரி
வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு பிரசாரம்...

அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் அனல் தெறிக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நாளுக்கு நாள் உஷ்ணம் ஏறுகிறது. ‘தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை’ என அ.தி.மு.க-வினர் களத்தில் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்கள். ‘நல்லாட்சி தொடர்ந்திட வாக்களியுங்கள்’ என முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் செய்கிறார். வீடியோ கால் மூலமாக வாக்கு சேகரிக்கும் புதிய உத்தியை நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்படிப் பிரசாரம் களைகட்டும் சூழலில், கழகங்களில் சகட்டுமேனிக்கு வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கியிருப்பது ஆதங்கத்தைக் கிளப்பியிருக்கிறது.

அமைச்சர்கள் மஸ்தான், ஆவடி நாசர் ஆகியோர் தங்கள் வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கியிருந்தது ஏற்கெனவே சர்ச்சையாகியிருந்தது. இந்நிலையில், முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் முதல், நகரச் செயலாளர்கள் வரை தங்கள் குடும்பத்து வாரிசுகளைத் தேர்தல் களமிறக்கியிருப்பதால், கட்சிக்குள் உள்ளடி வேலைகள் களைகட்டுகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள சூழலில், உள்ளடி வேலைகளால் தேர்தல் களத்தில் திகுதிகு காட்சிகள் அரங்கேறுகின்றன. இது குறித்து விசாரித்தோம். கிடைத்த தகவல்களெல்லாம் ‘தெறி’ ரகம்!

வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு பிரசாரம்...
வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு பிரசாரம்...

“நாங்க போஸ்டர் மட்டும்தான் ஒட்டணுமா?” - ரணகளமாகும் வாரிசு அரசியல்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், 26 வார்டுகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது தி.மு.க. விருத்தாசலம் நகரச் செயலாளரான தண்டபாணி 21-வது வார்டில் போட்டியிடுகிறார். 28-வது வார்டில் அவரது மனைவி ராணியும், 23-வது வார்டில் அவரது சித்தப்பா மகன் அரசகுமாரும் போட்டியிடுகின்றனர். “அமைச்சர் சி.வி.கணேசனின் ஆதரவாளராக தண்டபாணி இருக்கலாம். அதற்காக தன் குடும்பத்துக்கே மூன்று சீட்டை ஒதுக்கிக்கொண்டால் எப்படி? கடைசி வரை நாங்களெல்லாம் போஸ்டர் மட்டும்தான் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?” என்று கொந்தளிக்கிறார்கள் சீனியர் உடன்பிறப்புகள். அதேபோல, கடலூர் மாநகராட்சியில் நகரச் செயலாளர் ராஜாவும் அவருடைய மனைவி சுந்தரியும் வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர். பண்ருட்டி நகராட்சியில், நகரச் செயலாளர் ராஜேந்திரனும், அவருடைய மனைவி கஸ்தூரியும் தி.மு.க சார்பாகப் போட்டியிடுகிறார்கள். தொரப்பாடி, பெண்ணாடம் பேரூராட்சிகளிலும் இதே கதைதான்.

திருச்சி அ.தி.மு.க மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருவுக்கு மாநகராட்சியின் 20-வது வார்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் ஆசியோடு, மகனை திருச்சி மேயராக்கிவிட வேண்டும் எனத் தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார் வெல்லமண்டி. “அவரோட மகன் கட்சியில எந்தப் பொறுப்புலயும் இல்லை. இந்த லட்சணத்துல அவர் மேயர் வேட்பாளரா... கட்சிக்காக உழைச்சவங்க ஓரமாத்தான் நிக்கணுமா?” எனக் கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டில் கடந்த சில வருடங்களாக உலாவரும் சுபாஷ் என்பவர், திண்டுக்கல் மாநகராட்சியின் ஏழாவது வார்டு வேட்பாளராகியுள்ளார். அதேபோல், அமைச்சரின் மகனும், எம்.எல்.ஏ-வுமான செந்தில்குமார் வீட்டில் அதிகமாகத் தென்படும் ஜெயக்குமார், செந்தில் இருவரும் தங்கள் மனைவிமார்களை மாநகராட்சி வார்டு வேட்பாளர்களாக இறக்கியுள்ளனர். “அமைச்சர் வீட்டில் அடிக்கடி தலைகாட்டினாலே போதும். கவுன்சிலர் வேட்பாளர் ஆகிடலாம்போல...” என்று நொந்துகொள்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கருணாநிதி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கருணாநிதி

“உன் குடும்பம்தானேப்பா நிக்குது...” - திகுதிகு திண்டுக்கல்!

இதே திண்டுக்கல் மாநகராட்சியில், அ.தி.மு.க முகாமில் நடக்கும் கூத்து அதிரிபுதிரி ஆகியிருக்கிறது. மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மருதராஜ். தற்போது அவரின் மகள் பொன்முத்து, ‘அ.தி.மு.க மேயர் வேட்பாளர்’ என்கிற அடையாளத்துடன் பிரசாரத்தில் குதித்திருக்கிறார். மகன் வீரமார்பன் 8-வது வார்டிலும், மருதராஜின் சகோதரர் மகன் சுரேஷ்குமார் 12-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருப்பதால், துணை மேயர் பதவியைக் குறிவைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன். சமீபத்தில் தேர்தல் செலவு குறித்துப் பேச்சு எழுந்தபோது, மருதராஜிடம், “உன் குடும்பத்தைச் சேர்ந்தவங்கதானப்பா வளைச்சு வளைச்சு நிக்குறாங்க. உன் பொண்ணுதான் மேயர் வேட்பாளராகியிருக்கு. மொத்தச் செலவையும் நீதான் பார்க்கணும்” என்றிருக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன். இதில் ஆத்திரமடைந்த மருதராஜ் தரப்பு, “இவர் மகன் துணை மேயராகுறதுக்கு நாங்க ஏன் செலவு பண்ணணும்... மருதராஜ் மகன் வீரமார்பனைத் துணை மேயராக்கத் தெரியாதா?” என்று கொந்தளிக்கிறார்கள். இதற்கிடையே, ‘கோடீஸ்வர வேட்பாளர்’ என்கிற அடையாளத்துடன், ஒரு பணக்கார சுயேச்சை, துணை மேயர் பதவியை ‘வாங்கியே’ தீருவேன் எனத் தீவிரமாகியிருக்கிறார். இதனால், திண்டுக்கல்லில் `திகுதிகு’ காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வெங்கடாசலத்தின் மகன் ஜனார்த்தனனுக்கு, சேலம் மாநகராட்சி 21-வது வார்டில் சீட் வழங்கியிருப்பது சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. “எம்.எல்.ஏ தேர்தல்ல சீட் கிடைச்சும் வெங்கடாசலம் தோத்துட்டாரு. இப்ப தன் மகனுக்கு கவுன்சிலர் சீட் வாங்கியிருக்கிறார். அதோட மேயர் பதவியையும் மகனுக்காக எடப்பாடியார்கிட்ட பேசி முடிவு பண்ணியிருக்கார். ஒரே குடும்பத்துக்கே எல்லாப் பதவியும் கொடுத்தா, கட்சிக்காரன் எப்படி ஆர்வமா வேலை செய்வான்?” என்று அ.தி.மு.க-வுக்குள்ளேயே அதிருப்தி அலைகள் எழுந்திருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலின்போது, தனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார், கோவை தி.மு.க கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி. ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது, கோவை மேயர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், தன் மனைவியை மேயராக்க விருப்பப்பட்டார் சேனாதிபதி. ஆனால், வீட்டில் ரெட் கார்டு விழுந்ததால், பஞ்சாப்பில் படித்துக்கொண்டிருந்த தன் 22 வயது மகளை 97-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறார். சேனாதிபதியின் வேகம் கோவை தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தாம்பரம் மாநகராட்சி 17-வது வார்டை, தன் சகோதரர் ஜோசப் அண்ணாதுரைக்காகப் பெற்றுக்கொடுத்திருக்கிறார் பல்லாவரம் தி.மு.கழக எம்.எல்.ஏ கருணாநிதி. அதேபோல, மாநகராட்சியின் 49-வது வார்டு, தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் காமராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு தரப்புமே துணை மேயர் பதவிக்குக் குறிவைத்திருப்பதால் தாம்பரம் தி.மு.க-வில் ருத்ர தாண்டவம் அரங்கேறுகிறது. தாம்பரம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ தன்சிங்கின் மனைவி தனத்துக்கு 13-வது வார்டும், மகன் ஜெயப்பிரகாஷுக்கு 22-வது வார்டும் ஒதுக்கப்பட்டிருப்பது அ.தி.மு.க-வில் கடும் புகைச்சலை உருவாக்கியிருக்கிறது. இப்படி வாரிசுகள், உறவினர்களுக்கு என இரண்டு கழகங்களிலுமே சீட் ஒதுக்கீட்டில் தாராளம் காட்டப்பட்டிருப்பதால், கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கொதிநிலையில் இருக்கிறார்கள். இதனால், உள்ளடி வேலைகள் களைகட்டுகின்றன.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எஸ்.ஆர்.ராஜா
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எஸ்.ஆர்.ராஜா

வீதிக்கு வந்த நாத்தனார் சண்டை!

நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா, மாநகராட்சியின் 11-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். அவரை மேயர் வேட்பாளராகவும் கட்சி அறிவித்துள்ளது. அதேசமயம் நாஞ்சில் முருகேசனின் மகன் சிவராம் தன் மனைவி திவ்யாவை அதே 11-வது வார்டில் பா.ஜ.க சார்பில் களமிறக்கியிருக்கிறார். ‘நாஞ்சில் முருகேசன் ஒரு ஓட்டுக்கு இரண்டு விரல்களைக் காட்டினால், திவ்யாவை வெற்றிபெறவைக்க நாங்கள் மூன்று விரல்களைக் காட்டுவோம்’ என்று சூளுரைக்கிறது சிவராம் தரப்பு. ஒரே வார்டுக்குள் நடக்கும் இந்த உள்ளடி அரசியலால், காலை வாரிவிடும் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. ‘முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் நடந்துவந்த நாத்தனார் சண்டை, இப்போது வீதிக்கு வந்துவிட்டது’ என நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள் கழகத் தொண்டர்கள்.

39 வார்டுகள் கொண்ட நாமக்கல் நகராட்சியில், 16-வது வார்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தி.மு.க. ஷேக் நவீத் என்பவர் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனுவும் தாக்கல் செய்தார். இந்தச் சூழலில், டம்மி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த தி.மு.க நகரப் பொறுப்புக்குழு உறுப்பினர் டி.டி.சரவணன் என்பவரை, கடைசி நிமிடத்தில் 16-வது வார்டு வேட்பாளராக்கியிருக்கிறது தி.மு.க. இப்போது ஒரே வார்டில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள். இதில் கொதிப்படைந்த காங்கிரஸ் கட்சியினர், ‘இது, தி.மு.க கூட்டணி, அரசியலுக்குச் செய்திட்ட துரோகம்’ என நாமக்கல் நகராட்சி முழுக்கவும் பிரசாரம் செய்கிறார்கள். ‘தி.மு.க வேட்பாளர்களைத் தோற்கடிப்பதே எங்கள் பணி’ எனக் கதர்க் கட்சி குதித்திருப்பதால், உள்ளடி வேலைகள் உச்சத்துக்குப் போயிருக்கின்றன.

‘தட்கல் சீட்...’ - தடதடக்கும் சென்னை அ.தி.மு.க!

வாணியம்பாடி நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்கள் பொதுப்பிரிவுக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதவியைக் கைப்பற்றுவதற்காக, தன் தாய் உமாவுடன் களமிறங்கியிருக்கிறார் தி.மு.க நகரச் செயலாளர் சாரதிகுமார். மொத்தம் 36 வார்டுகள் உள்ள வாணியம்பாடி நகராட்சியில், முதலாவது வார்டைத் தன் தாய்க்கும், பத்தாவது வார்டை தனக்குமாக ஒதுக்கிக்கொண்டார் சாரதிகுமார். இதுவே, ‘ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சீட்டா?’ எனக் கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்தியது. அமைச்சர் துரைமுருகனின் ஆதரவாளர் என்பதால், சாரதிகுமாரை மாவட்டச் செயலாளர் தேவராஜியால்கூட கட்டுப்படுத்த முடியவில்லை. தன் தாய் உமாவை வீழ்த்துவதற்குக் கட்சிக்குள்ளேயே சிலர் உள்ளடி வேலையில் ஈடுபடுவதாகச் சந்தேகித்த சாரதிகுமார், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இரவு, மாவட்டச் செயலாளர் தேவராஜி அலுவலகத்துக்குச் சென்று தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையே, தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை மிரட்டி வாபஸ் பெறவைத்ததாக, காவல் நிலையத்தில் சாரதிகுமார் மீது புகாரளிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வினருடன் சாரதிகுமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவகாரத்திலும் சர்ச்சை என்கிறார்கள். இப்படியான ரணகளங்களால் வாணியம்பாடியே ‘வார்’ மூடுக்குச் சென்றிருக்கிறது.

தாம்பரம் மாநகராட்சியின் 52-வது வார்டு வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு தி.மு.க-வின் வட்டச் செயலாளர் பெரியநாயகம் என்பவர், சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். முதல்வர் ஸ்டாலின் படத்தைப் போட்டே அவர் பிரசாரம் செய்வதால், வி.சி.க தரப்பு கொந்தளிப்பில் இருக்கிறது. அதேபோல 54-வது வார்டில் தி.மு.க வேட்பாளரை எதிர்த்து மற்றொரு தி.மு.க பிரதிநிதி வெங்கடேசன் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க முகாமில் நிலைமை இன்னும் மோசம். சென்னையிலுள்ள அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் ஆகிய ஐவரணிதான் மாநகராட்சியின் முக்கால்வாசி வேட்பாளர்களைத் தேர்வுசெய்துள்ளது. “கட்சியில் உறுப்பினரே இல்லாதவர்களுக்குக்கூட கடைசி நிமிடத்தில் உறுப்பினர் அட்டை வழங்கி ‘தட்கல்’ முறையில் சீட் கொடுத்திருக்கிறார்கள்” என்று போர்க்குரல் எழுப்புகிறது சென்னை அ.தி.மு.க.

வெல்லமண்டி நடராஜன், ஐ.பெரியசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நாஞ்சில் முருகேசன், தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு,  பாலகங்கா, ராஜேஷ்
வெல்லமண்டி நடராஜன், ஐ.பெரியசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நாஞ்சில் முருகேசன், தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ்

மாநகராட்சியின் 131-வது வார்டில், அ.தி.மு.க சார்பாக ஆனந்திபிரபா வேலுமணி என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு தட்கல் ரூட்டில் சீட் வழங்கப்பட்டிருப்பதால், அவரை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க-வுக்குள்ளேயே பலரும் வேலை செய்கிறார்கள். 130-வது வார்டில் எம்.ஜி.ஆர் இளைஞரணியைச் சேர்ந்த சரவணனுக்கு சீட் ஒதுக்கியுள்ளார் தி.நகர் சத்யா. சீட் கிடைக்காத கட்சியின் சீனியரான சந்திரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வுக்குச் சாதகமான இந்த வார்டு, வாக்குகள் பிரிவதால் தி.மு.க-வுக்குச் சாதகமாகியிருக்கிறது. 138-வது வார்டில் அ.தி.மு.க சார்பில், விருகம்பாக்கம் தெற்குப் பகுதிச் செயலாளர் ஏ.எம்.காமராஜ் போட்டியிடுகிறார். தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் சித்தப்பாதான் இவர். குடும்பப் பாசம் காரணமாகக் கட்சியை மறந்துவிட்டு, காமராஜுக்கு எதிராக ஒரு டம்மி வேட்பாளரை தி.மு.க சார்பில் நிறுத்தியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. இதனால், விருகம்பாக்கம் தி.மு.க-வில் அனல் விசுகிறது.

இப்படி தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளிலுமே வாரிசுகளுக்கு சீட் ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துகளால், உள்ளடி வேலைகள் களைகட்டுகின்றன. தமிழகத்தின் அத்தனை மாநகராட்சிகளும் சிறிதும் பெரிதுமாக இந்தப் பிரச்னைகள் பற்றி எரிகின்றன. நாற்காலி ஆசை கண்ணை மறைக்க, உள்ளாட்சி உறியடியில் கம்பு சுற்றும் வாரிசுகளை மக்கள் ஆதரிப்பார்களா?