Published:Updated:

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

மாநகராட்சித் தேர்தல் மல்லுக்கட்டு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இரண்டு மாத கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தை நாடவிருக்கிறது திமுக. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் விருப்ப மனுக்களைக் கொடுத்து, பெறத் தொடங்கிவிட்டன. வார்டு வரையறைகள் முடிவடையவில்லை. மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தலா, மறைமுகத் தேர்தலா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகள் குறித்து முடிவுசெய்யப்படவில்லை. ஆனாலும், அத்தனைக் கட்சிகளும் தேர்தல் திருவிழாவுக்குக் கச்சைகட்டி நிற்கின்றன. அடாத மழைக்கு நடுவேயும் ஒவ்வொரு கட்சியினரும் எப்படித் தயாராகிவருகிறார்கள், என்ன வியூகம் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய, ஒரு ரவுண்ட் வந்தோம்...

‘ஆபரேஷன் சக்ரா’ புது வியூகத்தில் பா.ஜ.க!

தமிழக பா.ஜ.க-வின் புதிய வியூகங்கள் குறித்துக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் நம்மிடம் விவரித்தார். “இரண்டு வகைகளில் தமிழகத்தில் பா.ஜ.க-வை வலுவாக்க வியூகம் வகுத்திருக்கிறது டெல்லி. முதலாவது, திராவிடக் கட்சிகளுக்கு இணையாக அமைப்புரீதியாகக் கட்சியை வலுவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, கொள்கை பரப்பு செயலாளர் பதவியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்வதற்குச் சரியான அமைப்புமுறை கட்சியில் இல்லை என்பதால், இது போன்ற புதிய பதவிகளை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர். 2024-க்கு முன்னதாக கிராமப்புறங்களில் 10,000 கிளைப் பிரிவுகளைப் புதிதாக அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த சோழவந்தான் மாணிக்கம் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்ததுபோல அ.தி.மு.க-வில் மேலும் சிலருக்கு வலை வீசப்பட்டிருக்கிறது. அதேபோல், அ.ம.மு.க., தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளிலுள்ள அதிருப்தியாளர்கள், அக்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ள சமூகத்தினரை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த வியூகத்துக்கு ‘ஆபரேஷன் சக்ரா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது” என்றார். அதேவேளையில், தேர்தலில் தனித்து நிற்பதில் பா.ஜ.க-வுக்குத் தயக்கம் உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு இணையாகக் கீழ்மட்டத்தில் கட்சி இன்னும் வலுவடையவில்லை என்பதால், இந்த முறையும் அ.தி.மு.க குதிரைமீது சவாரி செய்யவே பா.ஜ.க திட்டமிடுகிறது.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

‘உணர்ச்சியைத் தூண்டு... புது ஆளை இறக்கு...’ - பரபரக்கும் பா.ம.க!

அக்டோபரில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியது பா.ம.க. ஒன்பது மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் தங்களின் செல்வாக்கு மிகுந்த பகுதிகள் என்ற நம்பிக்கையில், தனித்துப் போட்டியிட்டு கையைச் சுட்டுக்கொண்டது. இந்நிலையில், நகர்ப்புறத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டோம். “தேர்தல் தோல்வியிலிருந்தே இன்னும் மீளவில்லை. அதற்குள் மீண்டும் தனித்துப் போட்டி என்றதும் கட்சி நிர்வாகிகளிடம் உத்வேகம் போய்விட்டது. கடந்த தேர்தலில் லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் செய்துகொண்டதால் அவமானமே மிஞ்சியது. ராமதாஸும் கோபமாகிவிட்டார். நிர்வாகிகளின் தற்போதைய மனநிலையை அறிந்துகொண்டதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் அவர் பேசிய காட்டமான பேச்சு. ‘நகர்மன்றத் தேர்தல் வரப்போகுது... அதில் போட்டியிட ஆள் கிடைக்கலேன்னு சொல்லப் போறீங்களா? வாக்காளன் கால்ல கைல விழுந்தாவது, அவன் ஓட்டுப்போடுறேன்னு சத்தியம் பண்ணதுக்கு அப்புறம்தான் அந்த வீட்லருந்தே வெளியில வரணும். யாரும் விலைபோகக் கூடாது...’ என்றெல்லாம் அவர் பொங்கியதன் காரணம் அதுதான். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இரண்டே உத்திகள்தான்... ஒன்று, சமூகரீதியான உணர்ச்சியைத் தட்டியெழுப்புவது. இரண்டாவது, பழைய நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு, புதிய இளைஞர்களை அதிக அளவில் களமிறக்குவது. புதிதாக வருபவர்கள், தேர்தலில் தங்களை நிரூபிக்கவும் வெற்றிபெறவும் முயல்வார்கள். அது கட்சிக்குச் சாதகமாக அமையும்” என்றார்கள். அதேசமயம், “அவர் கோபப்பட்டு ஆவேசமாகப் பேசிட்டுப் போயிடுவாரு. தேர்தல் செலவுகளை யார் பாக்குறது?” என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் பாட்டாளிகள்.

‘ஆஃபர்’ எதிர்பார்ப்பில் அ.ம.மு.க நிர்வாகிகள்!

புயல் கடந்த பூமியைப்போலக் கிடக்கிறது அ.ம.மு.க கூடாரம். மண்டலச் செயலாளர் இருவரை ஓரங்கட்டினோம். “சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தினகரன், ‘சசிகலா வேறு, நாம் வேறு’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அதன்படிதான் கட்சியும் செல்கிறது. நாங்க ஜெயிக்கிறோமோ இல்லையோ அ.தி.மு.க தோற்க வேண்டும், அவ்வளவுதான். தினகரனைப் பொறுத்தவரை டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமாவது நகராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், தேர்தல் செலவுக்கு ஒரு பைசா தலைமையிலிருந்து எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டுவிட்டதால், விருப்ப மனுக்களைப் பெறுவதிலேயே நிர்வாகிகள் சுணக்கம் காட்டுகிறார்கள். அ.தி.மு.க-வையும் சசிகலாவையும் பகைத்துக்கொண்டு, செலவு செய்து தோற்க வேண்டுமா என்று நிர்வாகிகள் அச்சப்படுகிறார்கள். இன்னும் சிலரோ, தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க-விலிருந்து நல்ல ஆஃபர் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார்கள்” என்றார்கள்.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

‘இரண்டாம் இடம் இலக்கு’ நாம் தமிழர்; ‘கமல் வரட்டும்’ காத்திருக்கும் மய்யம்!

இம்முறையும் தனித்துக் களம் காணத் தயாராகிவிட்டது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “திராவிட, தேசியக் கட்சிகளைப்போல விருப்ப மனு வைபவமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. மாவட்டரீதியாக அமைக்கப்பட்டிருக்கும் குழு, வேட்பாளர்களைத் தேர்வுசெய்து அனுப்பும். சீமான் அதற்கு ஒப்புதல் கொடுப்பார். முந்தைய தேர்தல்களில் அதிக வாக்குகள் வாங்கிய ஆவடி போன்ற புதிய மாநகராட்சிகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தவிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்றனர்.

மக்கள் நீதி மய்ய வட்டாரத்திலோ ரொம்பவே சோர்ந்துபோயிருக்கிறார்கள். “தொடக்கத்திலிருந்தே கிராமப்புறங்களில் எங்களுக்குச் செல்வாக்கு இல்லாததால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தோற்றோம். ஆனால், ‘நகரப் பகுதிகளில் நமக்குச் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. எனவே, கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும்’ என கமல் கூறியிருக்கிறார். கொரோனா சிகிச்சை முடிந்து கமல் மீண்டு வந்த பிறகுதான், விருப்ப மனு கொடுக்கும் படலமே தொடங்கும். போட்டியிடப் போகிறோம் என்பதை மட்டுமே இப்போதைக்கு எங்களால் சொல்ல முடியும்” என்றனர் மய்ய நிர்வாகிகள்.

‘தனித்துப் போட்டி’ எனவும், டிசம்பர் 1 முதல் 7 வரை விருப்ப மனு வழங்கப்படவிருப்பதாகவும் தே.மு.தி.க அறிவித்திருக்கிறது. ஆனால் நிர்வாகிகளோ, “கேப்டனையும் கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார்கள். அண்ணியாரையும் பார்க்க முடிவதில்லை. சுதீஷ் எங்கே போனார் என்றே தெரியவில்லை. யாரிடம் பேசுவதென்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று விரக்தியானார்கள்.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

ஆளை விடுங்க... அ.தி.மு.க!

பொன்விழா கண்டிருக்கும் அ.தி.மு.க-வுக்கு இது போதாத காலம். ஒன்பது மாவட்டத் தேர்தலில் அடைந்த தோல்வி, தீராத இரட்டைத் தலைமை பிரச்னை, எடுக்க முடியாத நிதி, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள், ஆளுங்கட்சியின் தீவிரமான கண்காணிப்பு, சசிகலாவின் குடைச்சல் எனப் பல்முனைத் தாக்குதல்களால் கதிகலங்கிப்போயிருக்கிறது அ.தி.மு.க. கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “வேண்டா வெறுப்பாகத்தான் விருப்ப மனு வாங்கும் படலத்தையே ஆரம்பித்தார்கள். அதிலும் எதிர்பார்த்த அளவில் மனுக்கள் வரவில்லை. காரணம், தலைமையில் ஏற்பட்டுள்ள குழப்பமே. அ.தி.மு.க ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில், திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராகத் தன் மகளை அமரவைக்க ஒரு முக்கியப் புள்ளி கடுமையாகப் போராடினார். தேர்தல் நடக்காததால், அப்செட் ஆனார். ‘சரி, இப்போதுதான் தேர்தல் நடக்கப்போகிறதே... இப்போது உங்கள் மகளை நிறுத்துங்கள்’ எனத் தலைமையிலிருந்து சொல்லப்பட்டது. ‘கையில இருக்கிற காசை காலி பண்ணிட்டுப்போக நான் தயாரில்லை. ஆளை விடுங்க’ என விருப்ப மனுகூட வாங்க மறுத்துவிட்டார். இது ஒரு சாம்பிள்தான். இதுபோலத்தான் பல மாவட்டங்களிலும் நிலைமை இருக்கிறது. பதவி கிடைத்தால் பாதுகாப்பு இருக்கும் என்று நினைக்கும் சிலர் மட்டும் சொந்தக் காசைப்போட்டு தேர்தலில் நிற்க விரும்புகிறார்கள்” என்றனர்.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

தேர்தல் வியூகங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் சிலரும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்... “மாநில மற்றும் மாவட்ட அளவில் பெரிய பொறுப்பிலிருப்பவர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கும் வழக்கம் கட்சியில் இருக்கிறது. அதுதான் தேர்தல் முடிவுகளைக் கடுமையாக பாதிக்கிறது. எனவே, தங்களுக்குப் பிடிக்காத நபராக இருந்தாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியினரை இம்முறை நிறுத்துங்கள் என நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பா.ஜ.க-வைக் கழற்றிவிட்டால் மட்டுமே ஓரளவாவது ஜெயிக்க முடியும் என்பதையும் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போது பெய்துகொண்டிருக்கும் மழையால் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தி.மு.க அரசால் கையாள முடியவில்லை. முதல்வர், அமைச்சர்களைத் தவிர தி.மு.க எம்.எல்.ஏ-க்களோ, நிர்வாகிகளோ களத்தில் இறங்கவே இல்லை. அந்த வகையில் தி.மு.க அரசு தோற்றுவிட்டது. மேலும், டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் செயற்குழுவில், பல முக்கிய விஷயங்களைத் தலைவர்கள் கூடிப்பேசி அறிவிப்பார்கள்” என்றார்கள்.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க!

“கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை” என்று ஒருமுறை பூரிப்புடன் சொன்னார் ஜெயலலிதா. அந்த மாதிரியான ஒரு மனநிலையில்தான் தி.மு.க இந்த நகர்ப்புறத் தேர்தலை எதிர்கொள்கிறது. சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாரியம் கேட்டு காத்திருந்தவர்கள் எனப் பலரும் பதவிக்காகக் குறிவைத்திருப்பது இந்தத் தேர்தலைத்தான். சில அமைச்சர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளை எந்த கோட்டாவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையைத் தலைமைக்குக் கொடுத்துவருகிறார்கள். சென்னைக்கு அருகே புதிதாக உருவாகியுள்ள ஒரு மாநகராட்சியைப் பொதுப்பட்டியலில் கொண்டுவர முயல்கிறார் அந்தப் பகுதியின் அமைச்சர். அதற்குக் காரணம், அந்த மாநகராட்சியின் மேயராக, தனது வாரிசைக் களமிறக்க திட்டமாம். இதேபோல், சென்னைக்கு மிக அருகிலுள்ள மற்றொரு புதிய மாநகராட்சியை ‘பெண்களுக்கு ஒதுக்கிவிட வேண்டாம்’ என்று ஆளும்கட்சியின் கஜானா பிரமுகர் தலைமைக்கு வலியுறுத்தியுள்ளார். அவரது உறவினரை மேயராக்கும் திட்டமாம்.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

மத்திய மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களுமே, தங்களுக்கு வேண்டியவரை மாநகராட்சி மேயர் பதவிக்கு கொண்டுவரத் துடிக்கிறார்கள். இதனால், அந்த மாநகராட்சியைப் பெண்களுக்கு ஒதுக்கி ஷாக் கொடுக்க நினைக்கிறது தலைமை. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில், பாதி இடங்களைப் பெண்களுக்கும், குறிப்பிட்ட இடங்களைப் பட்டியலின கோட்டாவிலும் ஒதுக்கீடு செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே, ஆளும்கட்சியில் மேயர் பதவிக்கான போட்டி கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியைக் குறிவைத்து, பலரும் காய்நகர்த்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், ‘இந்த முறை மேயர் பதவியைப் பெண்களுக்கு ஒதுக்க முடிவெடுத்துள்ளது அரசு’ என்கிற கருத்து உலாவுவதால், பெண் நிர்வாகிகள் பலர் குஷியாக இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் ‘வாஷ் அவுட்’ ஆன கோவை மற்றும் தருமபுரி மாவட்டங்களிலிருந்து அ.தி.மு.க ஆட்களை இழுக்க, செந்தில் பாலாஜியும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் களமிறங்கியிருக்கிறார்கள். கடைசிகட்டமாக, இறக்கவேண்டியதை இறக்கவும் ஆளும்தரப்பு தயாராக இருக்கிறதாம்.

‘தி.மு.க-வைப் பொறுத்தவரை, இந்த முறையும் மேயர் பதவிகளைத் தவிர, பிற இடங்களுக்கான பதவிகளில் கூட்டணி ஒதுக்கீட்டை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுமே பார்த்துக்கொள்வார்களாம். இது கூட்டணிக் கட்சிகளுக்குள் கடும் புகைச்சலைக் கொண்டுவரலாம். இதனால் தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளுக்குப் பெரிய அளவில் வாய்ப்பு இருக்காது. காங்கிரஸ் கட்சி இரண்டு மேயர் பதவிகளை எதிர்பார்க்கிறது. அதற்கான சிக்னல் கிடைக்காததால், ‘குறைந்த வார்டுகளை ஒதுக்குவது வேதனையளிக்கிறது’ என்று ஓப்பன் டாக் விட்டார் கே.எஸ்.அழகிரி. விடுதலைச் சிறுத்தைகள் ஒரு மேயர் இடத்தை எதிர்பார்க் கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் மதுரை மாநகராட்சியை எதிர்பார்க்கிறார்கள். மற்ற சிறிய கட்சிகள் குறைந்தது கவுன்சிலர் சீட்டையாவது கேட்கிறார்கள். ஆனால், எதையுமே காதில் வாங்கிக்கொள்ளவில்லை தி.மு.க தலைமை’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

‘ஆல் அவுட்’ அஸ்திர தி.மு.க - ‘ஆளை விடுங்க’ அ.தி.மு.க

ஆளும்கட்சியின் தேர்தல் வியூகம் என்ன எனத் தலைமைக்கு நெருக்கமானவர் களிடம் கேட்டால், “மக்கள் நலப்பணிதான் எங்கள் வியூகம். முதல்வரே நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களைச் சந்திக்கிறார். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றிவருகிறோம். மழைவெள்ள மீட்புப் பணிகளில் முதல்வரின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. எனவே, எங்கள் ரூட் க்ளியர். அத்தனை இடங்களிலும் மற்றவர்களை ‘ஆல் அவுட்’ செய்து, மொத்தமாக ஜெயிக்க வேண்டும் என்பதே கட்சித் தலைமை தந்திருக்கும் அசைன்மென்ட்” என்கிறார்கள் உற்சாகமாக.

தயக்கத்தில் தேர்தல் ஆணையம்!

`வார்டு வரையறைகளே முடிவடையாமல் இருக்கும் இந்த நேரத்தில், தேர்தல் நடத்துவது சாத்தியமா?’ என்று மாநிலத் தேர்தல் ஆணையத் தரப்பில் விசாரித்தோம். “தற்போதுள்ள நிலையில், 21 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சிகளுக்குத்தான் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. மீதி நான்கும் புதிய மாநகராட்சி என்பதால், வார்டு வரையறை பணிகள் முடியவில்லை. அதேபோல், 110 நகராட்சிகளிலும், 489 பேரூராட்சிகளிலும் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது. இதைத் தமிழக அரசிடமும் தெரிவித்துவிட்டோம்” என்கிறார்கள்.

ஆளுக்கொரு கணக்கு, கட்சிக்கொரு வியூகம் எனப் பரபரக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், களம் இன்னும் சூடாகும்!