அலசல்
Published:Updated:

மாறி வரும் அரசியல் களம்... இளைஞர்களுக்குச் சிவப்புக் கம்பளம்!

ஆஸ்பயர் ஸ்வாமிநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஸ்பயர் ஸ்வாமிநாதன்

ஆஸ்பயர் ஸ்வாமிநாதன் - தேர்தல் வியூக வல்லுநர்

சமீப ஆண்டுகளாக, அரசியல் பின்புலம் இல்லாதவர்கள்கூட அரசியலில் சாதிக்க முடியும் என்கிற புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதற்கு அடிப்படைக் காரணமே தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிதான். 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, நம்முடைய வங்கிக் கணக்கு விவரங்களை அறிய ‘பாஸ் புக்’ எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றால்தான் தரவுகள் கிடைக்கும் நிலை இருந்தது. இப்போது நிலைமை அப்படியல்ல. ஒருசில ‘க்ளிக்’குகளிலேயே மொபைல் மூலமாக நம்முடைய பணப் பரிவர்த்தனை தரவுகளைப் பெற்றுவிட முடியும். அதுபோலத்தான், கடந்த 40 ஆண்டுகளில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம், பூத் வாரியாக வேட்பாளருக்கு விழுந்த வாக்குகள், பலமான - பலவீனமான வார்டுகள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் ஒருசில ‘க்ளிக்’ மூலமாகவே நம்மால் திரட்டிவிட முடியும். தகவல் தொழில்நுட்பம் அதற்கான வசதியை ஏற்படுத்தித் தந்திருப்பதால், அரசியல் களமே முற்றிலுமாக மாறியிருக்கிறது. சுருக்கமாக, தகவல் தொழில்நுட்பம், அரசியலை வெகுவாக மாற்றியிருக்கிறது!

தமிழ்நாட்டில் மொத்தம் 5.75 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில், 52.5 சதவிகிதம் பேர் 40 வயதுக்குக் கீழானவர்கள். குறிப்பாக, 30 வயதுக்குக் கீழான இளைஞர்களின் எண்ணிக்கை மட்டும் 1.51 கோடி. இந்த இளைஞர்களின் தேடல் பெரிதாக இருக்கிறது. அரசியல் புரிதலோடு வாக்களிக் கிறார்கள். வேட்பாளர்களின் விவரங்கள், குற்றப் பின்னணி, கடந்தகாலச் சர்ச்சை என எல்லாவற்றையும் அலசி ஆராய்கிறார்கள். அதனால், இந்த இளம் வாக்காளர்களைக் கவர, ஒவ்வொரு அரசியல் கட்சியும் தகவல் தொழில்நுட்ப அணி, சமூக வலைதள அணிகளை பலமாகக் கட்டமைக்கின்றன. 1950-களில் செய்தித்தாள்கள் மூலமாகவும், 90-களில் டி.வி மூலமாகவும் நடந்த தேர்தல் பிரசாரம், இன்று சமூகவலைதளங்கள் மூலமாக நடைபெறுகிறது.

மாறி வரும் அரசியல் களம்...
இளைஞர்களுக்குச் சிவப்புக் கம்பளம்!

சில ‘சாஃப்ட்வேர்’கள் மூலமாக, தேர்தலில் வாக்களிப்பவர்களின் எண்ணவோட்டத்தை நம்மால் அறிய முடியும். வாக்காளர்கள் எதை விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள், எங்கேயெல்லாம் அதிருப்தி நிலை நிலவுகிறது என்பதை அறியலாம். எந்தெந்தத் தொகுதிகளில், சமூகம், வயது, பாலினம் வாரியாக யாருக்கெல்லாம் அதிருப்தி நிலவுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைக் களைந்தாலே தேர்தல் வெற்றிக்கு அருகில் சென்றுவிடலாம். அதற்குத் தகவல் தொழில்நுட்பம் பெரும் உதவியாக மாறியிருக்கிறது.

உதாரணத்திற்கு, 2016 சட்டமன்றத் தேர்தலில் 1.68 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்த வாக்கு சதவிகித வித்தியாசத்தை, தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே, மறைந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களிடம் நான் எடுத்துச் சொன்னேன்.

அ.தி.மு.க ‘வீக்’காக உள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்பட்டது. வெற்றி சாத்தியமானது. முன்பு, இந்த விவரத்தை அறிந்துகொள்ள பூத் ஏஜெண்டாக இருப்பவர்களும், கிளை, வட்டக் கழகத்தில் இருப்பவர்களும் பல மாதங்கள் கஷ்டப்பட்டு தரவுகள் சேகரிப்பார்கள். இப்போது, ஒரு ‘க்ளிக்’கிலேயே மொத்தத் தரவுகளும் கொட்டிவிடும்.

உதாரணமாக, தி.நகர் சட்டமன்றத் தொகுதியில், வழக்கமாக 70 சதவிகித வாக்குப்பதிவு இருக்கும். இங்குள்ள வாக்காளர்களில், 35 சதவிகிதம் பேர் இளைஞர்கள். இவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்று வதற்கான ‘Personalised Campaign’ முறையைக் கையாள வேண்டும். சமூக வலைதளங்கள், டிஜிட்டல் பிரசார உத்திகள், வார்டு வாரியாகக் கடந்த காலங்களில் கட்சிகளுக்கு விழுந்த வாக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை வைத்துப் பிரசார உத்தியைக் கட்டமைக்க வேண்டும். அதற்கான சில தரவுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டிலேயே கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் தரவுகளையெல்லாம் ஒருங்கிணைத்து, பிரசாரத் திட்டத்துடனும் தகவல் தொழில்நுட்ப வசதியுடனும் களமிறங்கினால், வெற்றிக்கனியைப் பறித்துவிடலாம். எந்தவிதமான அரசியல் பின்புலம், சிபாரிசுகள் இல்லாமல் அரசியலில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

2021 சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து, தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. முக்கியப் பதவிகளில் அப்பழுக்கற்ற அதிகாரிகளை முதல்வர் நியமித்தது பாராட்டைப் பெற்றது. தி.மு.க மீது அப்போதிருந்த ஈர்ப்பு, ஆட்சியமைத்து 500 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், இப்போது இல்லை. அரசு பல திட்டங்களை அறிவித்தும், நடைமுறைப்படுத்தியும் அது பேசப்படவில்லை. பொதுமக்களிடம் விவாதிக்கப்படவில்லை. அரசின் திட்டம் மக்களிடம் சென்றுசேர்வதில் எங்கே சறுக்குகிறது, மக்களிடம் ஏன் வரவேற்பைப் பெறுவதில்லை என்பதை செயற்கை நுண்ணறிவு மூலமாகக் கண்டறிந்துவிட முடியும். இதைச் செய்தாலே, தி.மு.க அரசின் மீதான இமேஜ் மாறும்.

மக்கள் மனநிலையைக் கணித்து, அதைக் கற்றறிந்தாலே தேர்தல் வெற்றி சாத்தியம். தகவல் தொழில்நுட்பம் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. இளைஞர்களுக்கு இது ஒரு பொற்காலம்தான். சிவப்புக் கம்பளத்தில் அவர்கள் வீறுநடை போடுவதற்குப் பாதைகள் திறந்திருக்கின்றன.