Election bannerElection banner
Published:Updated:

``கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தைக் கொடுக்கலாமா?” ஸ்டாலின் ஆவேசம்!

பிரச்சார உரையாற்றும் ஸ்டாலின்
பிரச்சார உரையாற்றும் ஸ்டாலின்

ஆட்சி அதிகாரம் அவர்களிடத்தில் இருந்தாலும் மக்களுக்காகப் போராடும் உரிமை திமுகவுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் பல முறை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறோம். - ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் மற்றும் பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து ஸ்டாலின் பிரசார உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ``தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சி கிடையாது. அவர்கள் வெறும் தலையாட்டி பொம்மைகள். அவர்களை ஆட்டுவிப்பது மத்தியில் ஆட்சி செய்து வரும் பாசிச பாஜக அரசு தான். அதிமுக அரசின் அவல ஆட்சியில் தமிழக மக்கள் அனைவரும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆட்சி அதிகாரம் அவர்களிடத்தில் இருந்தாலும் மக்களுக்காகப் போராடும் உரிமை திமுகவுக்கு இருக்கிறது என்பதை நாங்கள் பல முறை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறோம்.

பிரச்சார  கூட்டம்
பிரச்சார கூட்டம்

கலைஞரின் பொற்கால ஆட்சியில் தான் இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்களுக்குத் திருமண உதவித்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தைச் சீரமைத்து கலைஞர் அவர்கள் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவர் செய்த சாதனைகளைப் பட்டியலிட நான் தயார். அதே போல் தமிழகத்தில் அதிமுக செய்த சாதனைகளைப் பட்டியலிட பழனிசாமி தயாராக இருக்கிறாரா?

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக உள்ள போதிலும், மக்களின் உரிமைகளுக்காகவும், பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒரு போதும் திமுக தவறியதில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறது. நான் தமிழக மக்களுக்கு என்னென்ன செய்வேன் என்று சொல்லியிருந்தேனோ, அதை அப்படியே பழனிசாமி அறிக்கையில் காப்பி அடித்திருக்கிறார். வாய்க்கு வந்ததை வாக்குறுதிகளாக கொடுத்திருக்கிறார்.

ஆளும் அதிமுக அரசு 2016 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின் நிலை என்ன என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கடந்த 4 வருடங்களாக விவசாயிகள் தங்கள் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி அதிமுக அரசிடம் கோரிக்கை வைத்த போது, போராட்டங்கள் நடத்திய போது, தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம் கண்டுகொள்ளாத எடப்பாடி தேர்தலை முன்னிட்டு விவசாயக் கடன் தள்ளுபடி என்று அறிவித்தார்.

அதையாவது முழுமையாகத் தள்ளுபடி செய்தார்களா?, 14,000 கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்து விட்டு வெறும் 5,000 கோடி ரூபாய் மட்டுமே பெயருக்குத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். திமுக ஆட்சி அமைத்ததும் உடனடியாக மீதமுள்ள 9,000 கோடி ரூபாய்க் கடனை தள்ளுபடி செய்வோம் என்று இங்கு நான் உறுதியாகச் சொல்கிறேன்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதே போல், கொரோனா காலத்தில் நாங்கள் சட்டசபையிலும், அறிக்கைகள் வாயிலாகவும் மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்க அதிமுக அரசை வலியுறுத்தினோம். ஆனால், அவர்கள் அப்போதெல்லாம் கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டு கடைசியாக 1,000 ரூபாயை மட்டும் கண்துடைப்புக்குக் கொடுத்தனர். அதில் மீதமுள்ள 4,000 ரூபாயையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உங்களுக்கு வழங்கி விடுவோம்.

நான் கலைஞரின் பிள்ளை, சொன்னதைச் செய்வேன்! செய்வதைத் தான் சொல்வேன்!. கும்மிடிப்பூண்டியில் களம் காணும் நமது வேட்பாளர் கோவிந்தராஜனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை நீங்கள் அனைவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கும்மிடிப்பூண்டியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்போம். மீஞ்சூரில் மக்கள் வசதிக்காகப் புறவழிச்சாலை அமைப்போம். ஏணாம்பாக்கம் பகுதியில் சிப்காட் அமைக்கப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும். கும்மிடிப்பூண்டி தொகுதியின் கள நிலவரத்தை ஆராய்ந்து மக்கள் தேவைகளை அறிந்து இந்த வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம். நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதற்கு நீங்கள் அடிமை அதிமுக அரசை வீழ்த்தி, அவர்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது, அவர் வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தை என்னைப் பற்றியோ, என் குடும்பத்தினரைப் பற்றியோ இல்லை. அவர் வாயிலிருந்து உதித்த கடைசி வாரத்தை 'அண்ணா' என்பது மட்டுமே. பேரறிஞர் அண்ணா அவர்களை தன் உயிரினும் மேலாக நேசித்த தலைவர் கலைஞர் அவர்களை அண்ணாவின் அருகிலேயே அடக்கம் செய்ய விரும்பினேன். அதற்காக எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கே சென்று அவரிடத்தில் கோரிக்கை வைத்தேன். ஆனால், அதிமுக அரசு மறுத்து விட்டது. பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கலைஞரை அண்ணா சமாதி அருகில் அடக்கம் செய்தோம்.

`அதிமுக தேர்தல் அறிக்கை, வில்லன் அல்ல, காமெடி வில்லன்’ - மதுரையில் ஸ்டாலின் பிரசாரம்!

கலைஞருக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த எடப்பாடிக்கு, தமிழகத்தை நீங்கள் கொடுக்கலாமா? அதிமுகவைத் தேர்தலில் தோற்கடித்து வாக்காளர்களாகிய நீங்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்" என்று ஆவேசத்துடன் பேசினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு