Published:Updated:

உற்சாகத்தில் தி.மு.க... உணர்ந்துகொண்ட அ.தி.மு.க- உள்ளாட்சித் தேர்தல் சொல்லும் கணக்கு என்ன?

உள்ளாட்சித் தேர்தல்
News
உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகே அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று அமைச்சர்களிடம் ஆலோசனை செய்ய இருக்கிறார் எடப்பாடி. அதற்குப் பிறகுதான் நகர்ப் புறத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கிறது ஆளும் தரப்பு.

``நாம் எதிர்பார்த்ததை விட உண்மையில் நல்ல முடிவை மக்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள்” என்று அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் “சரிவு ஏற்படுவது பிரச்னையல்ல. ஆனால் முழுமையான தோல்வி என்பது நமக்கு இருந்துவிடக்கூடாது” என்று மாவட்டந்தோறும் அமைச்சர்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இந்த உள்ளாட்சித் தேர்தலில்தான், வடமாநிலங்களைப் போன்று ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகம் பதிவாகி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2016-ம் ஆண்டு ஜெயலலிதா இரண்டாவது முறையாகத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஏற்ற நான்கு மாதங்களில் தமிழகத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அ.தி.மு.க ஒருபுறம் சோர்ந்திருந்த அந்த நேரத்தில் உள்ளாட்சியில் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்று தி.மு.க போட்ட வழக்கு அ.தி.மு.கவுக்கு அப்போது கைகொடுத்தது. உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்குப்பின் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடும் வேலையைத் தொடர்ந்து கச்சிதமாகச் செய்துவந்தது. உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டபோதே அ.தி.மு.க தரப்பு பல்வேறு கணக்குகளைப் போட்டது. குறிப்பாக ஒரே நேரத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால், இப்போது உள்ள சூழ்நி்லையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் போல் ஆகிவிடும் என்று முடிவு செய்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன்தொடர்ச்சியாக கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கும் நகர்ப் பகுதிகளுக்கும் தனித் தனியாக தேர்தலை நடத்தலாமென எடப்பாடி கணக்கு போட்டார். சீட் விசயத்தில் உள்குத்துகள் வருவதைச் சமாளிக்க, அந்தந்த மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் வேட்பாளர்களை முடிவு செய்துகொள்ளுங்கள் என்றார். அதேபோல் தேர்தல் செலவும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பில் விடப்பட்டது. ஆரம்பத்தில் சீட் கிடைக்காத அ.தி.மு.க வினரே களத்தில் நிற்க முடிவு செய்தனர். ஆனால், அதைச் சரிகட்ட வேண்டிய அ.தி.மு.க அமைச்சர்கள் அதிகாரபோதையில் இருந்துவிட்டார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

தி.மு.கவிலோ நிலை வேறு மாதிரியாக இருந்தது. குறிப்பாக கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல்தான் அங்கு அதிகம் இருந்தது. தி.மு.க தரப்பில் விருப்பமனு தந்தவர்களிடம் ``தேர்தல் செலவை நீங்களே பார்த்துக்கொள்ளவேண்டும்'' என்று ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட்டார்கள். காரணம் கடந்த சில காலமாகவே தி.மு.க தரப்பு கடும் பணநெருக்கடியில் இருந்துவருகிறது. அப்படியும் தி.மு.க வில் பலரும் ஆர்வத்துடன் விருப்பமனு அளித்தனர். முதல்கட்ட தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி தரப்பு மாவட்ட நிர்வாகிகளிடம் முடிந்த அளவு கரன்சியைக் களத்தில் இறக்குங்கள். தேர்தல் முடிவுகள் நமக்குச் சாதகமாக மாற அது ஒன்றே வழி என்றார். மற்றொரு புறம் அந்தக் கூட்டணிக்குள் உள்குத்துகளும் அதிகம் நடந்தேறின. அ.தி.மு.க கூட்டணியில் வலுவான கட்சியாக விளங்கும் பா.ம.க கட்சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு சீட் வழங்கவில்லை. ஆனால், அவர்களைவிட கூடுதலாக பி.ஜே.பி நிர்வாகிகளுக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் பல இடங்களிலும் கூட்டணிக் கட்சியினர் அவர்கள் சார்பிலே வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேர்தல் நடந்துமுடிந்த போது எதிர்பார்த்த அளவுக்கு உங்களுக்கு வெற்றிகிடைக்காது. ஆட்சி மீதான அதிருப்தி ஒருபுறம் என்றால் சி.ஏ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்கள் மீது மக்களுக்கு இருக்கும் பெரும் அதிருப்தி மறுபுறம் என உளவுத்துறை உண்மையைச் சொல்லியது. மற்றொருபுறம் தி.மு.க மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக கடும் பிரசார வியூகத்தை முன்னிறுத்தியது. இதற்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததை அப்போதே தி.மு.க உணர்ந்தது. தேர்தல் முடிவுகளும் கிட்டத்தட்ட அதுபோன்றே வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆளும்கட்சியாக அ.தி.மு.க இருந்தும் அந்தக் கட்சியால் முழுமையாக இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அதே நேரம் எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் கடந்த 2-ம் தேதி ஆலோசனை மேற்கொண்டார். ``பல இடங்களிலும் நமக்கு சாதகமான நிலை இல்லை. முடிந்த அளவு முயற்சி செய்யலாம்” என்று மட்டும் சொல்லியுள்ளார். வாக்குப்பதிவு தொடங்கியது முதலே தி.மு.க கூட்டணி அனைத்து இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல முடிவுகள் வேறு மாதிரியாக வரவே, நேராகத் தேர்தல் ஆணையரைச் சந்திக்கப் புறப்பட்டார் ஸ்டாலின். அதற்குப் பிறகு சில இடங்களில் சில மாற்றங்கள் நடந்தன. இது ஆளும் தரப்பை மேலும் எரிச்சலாக்கியது.

கூட்டணிக் கட்சிகள் சொதப்பியதை அ.தி.மு.க தலைமை உணர்ந்துள்ளது. குறிப்பாக வடமாவட்டங்களில் வலுவாக இருந்த பா.ம.க தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற கடுப்பில் பட்டும்படாமலேயே அ.தி.மு.கவுடன் பயணித்தது. மற்றொருபுறம் பி.ஜே.பி, அ.தி.மு.க-வை நம்பியே பல இடங்களில் தேர்தல் பணியைச் செய்ய வேண்டியிருந்தது. இதைத்தாண்டி அ.தி.மு.க-வில் மிகப்பெரும் ஆளுமையாக எடப்பாடியை மக்கள் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இதில் இன்னொரு கணக்கு அ.தி.மு.க வுக்குச் சாதகமாக இருக்கிறது. ஊரகப் பகுதிகளில் அ.தி.மு.க வின் வாக்கு வங்கியில் இப்போது பெரிய சரிவு ஏற்படவில்லை. அதாவது இரட்டை இலை இப்போதும் கிராமப்பகுதிகளில் துளிர்ப்போடு இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
ம.அரவிந்த்

அதே நேரம் தி.மு.க தரப்பில், ``அ.தி.மு.க வின் அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது வெற்றி, உறுதி செய்யப்பட்ட வெற்றி'' என்று உற்சாகத்தோடு இருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க தரப்பில் கொங்கு மண்டலத்தில் கணிசமான வெற்றியை இப்போது பெற்றிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் அ.தி.மு.க வின் வாக்குகளை அ.ம.மு.க பிரித்துள்ளது என்கிற கணக்கீட்டை இப்போது எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார் வேலுமணி. இனி தென் மாவட்டங்களில் நமது செயல்பாடுகள் வேகமெடுக்க வேண்டும். அதைச் செய்துவிட்டுதான், இனி நகர்ப் புறத் தேர்தலுக்கான அறிவிப்பை நடத்தலாம் என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் முடிவுகளின் இரண்டாம் நாள் மதியம் வரை, மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் தி.மு.கவுக்கு இணையான அளவுக்கு அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஒன்றியப் பகுதிகளில் தி.மு.க வின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாக இருப்பதையும் அ.தி.மு.க கவனித்துள்ளது.

இந்தத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பிறகே, அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று அமைச்சர்களிடம் ஆலோசனை செய்ய இருக்கிறார் எடப்பாடி. அதற்கு பிறகுதான் நகர்ப் புறத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கிறது ஆளும் தரப்பு.