Election bannerElection banner
Published:Updated:

`சித்தப்பானு பிரசாரத்துக்குப் போகாதனு சொன்ன மணி... அக்‌ஷராவுடன் டான்ஸ்!' - சுஹாசினி

சுஹாசினி
சுஹாசினி

கமலுடன் அவரின் மகள் அக்‌ஷராவும் சுஹாசினியும் பிரசாரக் களத்தில் நேரடியாக இறங்கியிருக்கிறார்கள். இந்தத் தேர்தல் அனுபவம் குறித்துப் பேச சுஹாசினியைத் தொடர்பு கொண்டோம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளும் நேற்றோடு முடிந்திருக்கின்றன. 'மக்கள் நீதி மய்யம்' கட்சித் தலைவர் கமலுடன் அவரின் மகள், அக்‌ஷரா மற்றும் சுஹாசினியும் நேரடியாக பிரசாரக் களத்தில் இறங்கியிருந்தார்கள். இந்தத் தேர்தல் பிரசார அனுபவம் குறித்துப் பேச சுஹாசினியைத் தொடர்பு கொண்டோம்.

சுஹாசினி
சுஹாசினி

கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமலுக்காக பிரசாரம் பண்ண களம் இறங்கின அனுபவம் எப்படி இருந்தது..?

``பிரசாரத்துக்குப் போவேன்னு நானே எதிர்ப்பார்க்கல. போன வருஷம் கமல் சாரோட 65வது பிறந்தநாள் அப்போ மேடையில இருந்த குடும்பத்தினரை அறிமுகப்படுத்தச் சொன்னாங்க. அப்போ நான் பேசினது வைரல் ஆச்சு. அதனால, கமல் சார் கட்சியிலேருந்து என்னை பிரசாரத்துக்கு வரச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா, அரசியல் தெரியாத காரணத்தால மறுத்தேன்.

`உன் சித்தப்பா அங்க களத்துல இருக்கும்போது நீ அவருக்கு சப்போர்ட் பண்ணாம இருந்தா எப்படி?’னு என் நண்பர்களும், திரைத்துறையில இருந்தவங்களும் என்கிட்ட சொன்னாங்க. அதுக்குப் பிறகு ரொம்ப யோசிச்சுதான் நான் போனேன். ஒரு நல்லவருக்கு, நேர்மையானவருக்கு, திறமையானவருக்கு, புத்திசாலிக்காக வாக்கு சேகரிக்கறதுல தப்பே இல்லை. களத்துலயும் மக்கள் வரவேற்பு நல்லா இருந்தது. எனக்கும் மக்கள்கூட பேசினது சந்தோஷமா இருந்தது.”

மக்கள் நீதி மய்யத்துக்கும் கமல்ஹாசனுக்கும் மக்கள் மத்தியில ஆதரவு எப்படி இருக்கு? கோவை மற்றும் தமிழகத்துல வெற்றி வாய்ப்பு பத்தி சொல்லுங்க?

``வெற்றியைக் கணிக்கிறதுக்கு நான் தேர்தல் கணிப்பாளர் ஒண்ணும் இல்லையே. மற்ற கட்சி ஆதரவாளர்கள் கட்சி சின்னத்தை மட்டும் காண்பிச்சுட்டு போய்ருவாங்க. ஆனா, நாங்க போனபோது எல்லாரும் எங்களை உன்னிப்பா கவனிச்சாங்க. படிச்சவங்க, இளைஞர்கள், பெண்கள் எல்லாருமே கமல்ஹாசனுக்குதான் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. நிச்சயமா அவர் ஜெயிப்பாருனு களத்துல பலரும் நம்பிக்கை தரும் விதமா சொன்னாங்க.”

அக்‌ஷரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷராவும் அப்பாவுக்காக களம் இறங்கியிருக்காங்களே? ஷ்ருதி என்ன சொல்றாங்க?

``சமீபத்துல கமல் சாருக்கு கால்ல ஒரு அறுவைசிகிச்சை நடந்தது இல்லையா? அதனால, இந்த நேரத்துல அக்‌ஷரா அப்பாவுக்காக வந்தாங்க. ஷ்ருதிக்கு மும்பைல இப்போ ஒரு பெரிய புராஜெக்ட் தொடங்கியிருக்கு. அந்த கமிட்மென்ட்டால ஷ்ருதியால இங்க வர முடியல. என்னைப் பார்த்துதான் அக்‌ஷராவும் களத்துல இறங்கினாங்க. பெரிய அக்காவுக்குத் துணையா ஒரு குட்டி தங்கை வந்தது எனக்கும் சந்தோஷம்.

கமல் என்ன செஞ்சாலும் நல்லா செய்வாருங்கிற நம்பிக்கை எங்க குடும்பத்துக்கு இருக்கு. எங்க குடும்பத்துல யார் எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அதுக்கு யாரும் முட்டுக்கட்டை போடாம முழு ஆதரவு கொடுப்போம்.''

நீங்களும் அக்‌ஷராவும் சேர்ந்து நேற்று கோவை பிரசாரத்துல டான்ஸ் ஆடின வீடியோ வைரல் ஆனதே..?

``நாங்க ரெண்டு பேரும் புரொஃபஷனல் டான்ஸர்ஸ்ங்கிறது எல்லாருக்குமே தெரியும். பிரசாரத்துக்குப் போன இடத்துல டிரம்ஸ் வாசிக்கறவங்க அங்க இருந்தாங்க. அவங்க வாசிட்டு இருக்கிறபோது பக்கத்துல சிலர் ஆட ஆரம்பிக்க, அக்‌ஷராவும் அப்படியே ஆட ஆரம்பிச்சாங்க. எங்களுக்குக் கிடைச்ச வரவேற்பும் அப்படி கொண்டாட்டமாதான் இருந்தது. நானும் அதுல கலந்துகிட்டேன். அந்த நேரத்துல அது அப்படி தோணுனதுதான். அதுமட்டுமில்லாம, பொண்ணுங்களுக்கு சாலையில் டான்ஸ் ஆடுற சுதந்திரம் இருக்கு. எதையும் தப்பா எடை போடக்கூடாது. பேசறவங்க பேசட்டும். இது வைரல் ஆனது பெரிய விஷயம்தான்.”

கமல்
கமல்

`மோடி மாதிரி கமலுக்கும் குடும்பத்தால எந்தப் பிரச்னையும் இல்ல’னு சமீபத்துல பேட்டி கொடுத்து இருந்தீங்க. மோடி - கமல் ஒப்பீடு, கமல் பி.ஜே.பி-யின் பி டீம் என்ற விமர்சனத்தை உறுதியாக்குதுனு நிறைய கமென்ட்ஸ் பார்க்க முடியுதே?

”நான் முன்னாடியே சொல்லிட்டேன். நான் அரசியல்வாதி கிடையாது. அதனால இந்த மாதிரியான கேள்விகள் என்கிட்ட பலிக்காது. நீங்க நேரடியா கேளுங்க. என்னுடைய பதிலும் நேரடியா இருக்கும். என்ன பேசினாலும் அதைத் திரிச்சு பேசறதுக்கு எல்லாம் இடம் கொடுக்கற அளவுக்கு நான் இளிச்சவாய் கிடையாது. கமல் சாருக்கு அவர் குடும்பம் என்னைக்குமே ஒரு பிரச்னையா இருக்காது. இந்த விஷயத்தை கம்பேர் பண்றதுக்கு நாட்டுடைய பிரதமர் பேரைதான் எடுத்தேனே தவிர, கட்சி பேரை எடுக்கல. அதனால, நீங்க இதை வெச்சு அரசியல் குழப்பம் பண்ணாதீங்க. மறுபடியும் சொல்றேன், எங்க குடும்பத்துல யாரும் ஏமாந்தவங்க கிடையாது, நீங்க யாரும் எங்களை பத்தி லேசாவும் எடை போடக் கூடாது”.

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசனுடைய அரசியல் என்ட்ரி பத்தி என்ன சொன்னார்?

``மணி சார் கமலுடைய மிகப்பெரிய ஃபாலோயர்னு சொல்லலாம். ரஜினி சாருக்கும் மணி நல்ல நண்பர்தான். ரஜினி சார் அரசியலுக்கு வரலைங்கிறது எல்லாருக்குமே ஏமாற்றம்தான். ஆனா, கமல் வந்துருக்காருங்கிறது எங்களுக்கு ஒரு பயம் கலந்த சந்தோஷத்தை கொடுத்தது. மணி சாரும் இதை கவனிச்சுட்டுதான் வந்தாரு.

நான் கமலுக்காக பிரசாரத்துக்கு போக முடிவு பண்ணின போது, `உன் சித்தப்பா, உனக்குத் தெரிஞ்சவர்... இதுக்காக எல்லாம் போகாத. அவருடைய தேர்தல் அறிக்கை, கொள்கைகள் இதெல்லாம் உனக்குப் பிடிச்சிருக்கா? அப்போ மட்டும் போ’னு எனக்கு அட்வைஸ் கொடுத்தாரு. எனக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கைகள், கொள்கைகள் பிடிச்சிருந்தது. கமல் என் சித்தப்பாங்கிறதால, அவருடைய குணங்கள் பத்தி எனக்கு நல்லா தெரியும். `எப்படி இருக்கு களம்?’னு மணி கேட்டபோது, ‘எல்லாரும் மாற்றத்தை எதிர்பாக்குறாங்க. அது கமல் ரூபத்துல வரும்’னு சொல்லியிருக்கேன்”.

கமல்
கமல்

உங்க பையன் நந்தனுக்கு அரசியல்ல ஆர்வம் அதிகம்னு பல பேட்டிகள்ல சொல்லியிருக்கீங்க. எதிர்காலத்துல அவரை மக்கள் நீதி மய்யத்துல எதிர்ப்பார்க்கலாமா?

``நந்தன் அரசியல்ல அதிகம் விருப்பம் உடையவர். ஆனா, இப்போ ஐரோப்பால கார்ப்பரேட் பிசினஸ் உலகத்துல இருக்குறதால மூணு வருஷங்கள் அவகாசம் கேட்டிருக்காரு. இந்தியா, சினிமா, குடும்பம் இதெல்லாம் விட்டு இப்போ விலகி இருக்காரு. அரசியல் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்தாலும் இப்போதைக்கு அவர் அரசியல் களத்துல இறங்குற மாதிரி இல்ல. ஆனா, நந்தன் அரசியலுக்கு வரணும்ங்கிறது என்னுடைய பெரிய விருப்பம்.”

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு