Published:Updated:

`போலியாக சாதிச் சான்றிதழ் வாங்கிவிட்டார்!' -ஊராட்சித் தலைவருக்கு எதிராகக் கொதிக்கும் தேனி கிராமம்

தேனி கலெக்டர் அலுவலகம்
தேனி கலெக்டர் அலுவலகம்

போலி சாதிச் சான்றிதழ் மூலம் பெண் ஒருவர், ஜி.கல்லுப்பட்டியின் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டுடன், இன்று கலெக்டரை சந்தித்து சிலர் முறையிட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது ஜி.கல்லுப்பட்டி. 4,191 வாக்காளர்களைக் கொண்ட இக்கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில், சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், `பழனிச்சாமி என்பவரின் மனைவி மகேஷ்வரி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஆனால், போலியான சாதிச் சான்றிதழ் மூலமாக தேர்தலில் போட்டியிட்டு, ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவியேற்றுள்ளார்' என்ற குற்றச்சாட்டுடன், கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவைச் சந்தித்து சிலர் முறையிட்டனர்.

தேர்தல்
தேர்தல்
`விலைபோகும் ஒன்றியக் கவுன்சிலர்கள்!' - பெரும்பான்மை கிடைத்தும் தேனி தி.மு.க திணறல்

கலெக்டரிடம் புகார் கொடுத்த சின்னத்தாயிடம் பேசினோம். “ ஊராட்சிமன்றத் தலைவராக வெற்றிபெற்ற மகேஷ்வரி, தன்னை ஒரு இந்து - குறவன் (SC) பிரிவைச் சேர்ந்தவராகக் கூறி, அதற்கான சாதிச் சான்றிதழை சமர்ப்பித்து, தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர், இந்து - உப்பிலியா என்ற வகுப்பைச் சேர்ந்தவர். இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் (BC) பிரிவின்கீழ் வருவார்கள். இதனைக் குறிப்பிட்டு, தேர்தல் நடக்கும் நேரத்தில் அதிகாரிகளிடம் முறையிட்டோம்.

சின்னத்தாய்
சின்னத்தாய்
`ஹெச்.ராஜாவுக்கு எதிராக கலெக்டரிடம் முறையிட வந்த தேனி கல்லூரி!' -என்ன நடந்தது?

ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தேர்தலில் வெற்றியும் பெற்று, ஊராட்சி மன்றத்தலைவராகிவிட்டார். இதன்பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தோம். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. தற்போது, மகேஷ்வரி தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, கலெக்டரிடம் புகார் கூறியிருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து நம்மிடம் பேசுகையில், “ மகேஷ்வரியின் மகன் கண்ணன் மற்றும் அவரது மகள் சண்முகப்பிரியா ஆகியோர் படித்த ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் நகலைப் புகார் மனுவுடன் இணைத்துள்ளோம். அதில், இருவரது சான்றிதழ்களிலும், இந்து - உப்பிலியா (BC) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், மகேஷ்வரி எப்படி இந்து - குறவன் (SC) என்று சான்றிதழ் பெற்றார் என விசாரித்தோம்.

பட்டியலின மக்களுக்குக் கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டைப் பறித்தது மட்டுமல்லாமல், போலிச் சான்றிதழ் மூலம் மோசடி செய்து, ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
சின்னத்தாய்

அவரது மகன் தீபக் சந்தியனுக்கு, ஈரோட்டில் உள்ள ஒரு முகவரியின்கீழ், அங்குள்ள வட்டாட்சியரிடம் இந்து - குறவன் (SC) என்று கடந்த 2016-ம் ஆண்டு சாதிச் சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து, கடந்த 2017-ம் ஆண்டு, பெரியகுளம் வட்டாட்சியரிடம் இந்து - குறவன் (SC) சாதிச் சான்றிதழை வாங்கியுள்ளார் மகேஷ்வரி. இது மிகப்பெரிய மோசடி. பட்டியலின மக்களுக்குக் கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டைப் பறித்தது மட்டுமல்லாமல், போலி சான்றிதழ் மூலம் மோசடி செய்து, ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுள்ளார். அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் கொதிப்புடன்.

புகார் கொடுத்தவர்களுக்குப் பதில் அளித்த கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ், “வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளை அனுப்பி, நேரடியாக ஜி.கல்லுப்பட்டியில் விசாரிக்கச் சொல்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு