Published:Updated:

``இதையெல்லாம் தீர்ப்பதாக எழுதிக் கொடுப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு!"- 34 கிராம இளைஞர்கள்

கடவூரை வைத்து பிழைப்பதற்காக, அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கடவூர் வளர்ச்சிக்காக உழைப்பதற்காகவே தேர்ந்தெடுக்கின்றனர். இதை மனதில் வைத்து, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நினைக்கும் வேட்பாளர்களுக்கே இளைஞர்களாகிய நாங்கள் வாக்களிப்போம்.

கடவூர் மலை
கடவூர் மலை

தமிழக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 29 தேதிகளில் நடக்கவிருக்கிறது. வேட்பு மனுக்கள் கொடுப்பது ஒருபுறம் மும்முரமாக நந்துவரும் நிலையில், மறுபுறம் வேட்பாளர்கள் வேட்டையை ஜோராக நடத்திக் கொண்டிருக்கின்றன கட்சிகள்.

கடவூர்
கடவூர்

இந்த நிலையில், கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சுற்றியுள்ள 34 கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், "இதுவரை எங்களை ஏமாற்றியதைப்போல இந்தத் தேர்தலிலும் எங்களை அரசியல்வாதிகள் ஏமாற்றமுடியாது. நாங்க வைக்கும் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவதாகக் கூறி, உத்தரவாதம் கொடுத்து, கையெழுத்துபோட்டுத் தருகிறார்களோ, அவர்களுக்குதான் எங்கள் வாக்கு" என்று கூறி, அதிர வைத்திருக்கிறார்கள்.

Vikatan

கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கிறது, கடவூர். தனி ஒன்றியம் மற்றும் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கிராம ஊராட்சி, இந்தக் கடவூர். கடவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 34 கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. வெளியிலிருந்து கடவூர் மற்றும் இந்த 34 கிராமங்களுக்கும் வந்துசெல்ல, மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன.

கடவூர் மலை
கடவூர் மலை
நா.ராஜமுருகன்

இதனால் கடவூர் மற்றும் 34 கிராமங்களும் எந்த வித வளர்ச்சியையும் காணாமல், சவலைப்பிள்ளையாகக் கிடப்பதாக அந்தப் பகுதி இளைஞர்கள் குமுறிவந்தார்கள். இந்த நிலையில்தான், 'எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக, எழுதி கையெழுத்துப் போடுபவருக்கே எங்கள் ஓட்டு' என்று கூறி, அரசியல்வாதிகளுக்கு கடுக்காய் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கடவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரான பாலசுப்ரமணி,

"ஒருகாலத்தில் கடவூர் தனி சட்டமன்றத் தொகுதியாக இருந்திருக்கு. ஆனா, தொகுதி மறுசீரமைப்பில் அதை எடுத்துட்டாங்க. அப்போதும் சரி, இப்போதும் சரி, இங்கு மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசியல்வாதியும், கடவூர் பகுதிக்கு துரும்பையும் கிள்ளிப் போடலை. கடந்த 20 வருடங்களாக, கடவூர் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் இங்குள்ள சில அரசியல் புள்ளிகள்தாம். கடவூர் முதல் திண்டுக்கல் வரை 20 ஆண்டுகளாகப் பேருந்து வசதி இல்லை. இதனால் இங்கு விளையும் காய்கறிகளை, திண்டுக்கல்லுக்கு கொண்டுபோய் விற்பனை செய்ய முடியல.

பாலசுப்ரமணி
பாலசுப்ரமணி

பேருந்து வசதி கேட்டு நாங்க நடத்தாத போராட்டமே இல்லை. ஆனா, யாரும் அதை செஞ்சு தரலை. அதேபோல், கடவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நோயாளிகள் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. அதற்கும் போக்குவரத்து வசதி செய்து தரல. கடவூருக்கு வரவேண்டிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், இங்குள்ள அரசியல்வாதிகளின் கைங்கர்யத்தால், காணியாளம்பட்டிக்கு இடம் மாறிடுச்சு. ஆனால், கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15,000 மக்கள் பயன்படுத்தி வர்றாங்க. விபத்து மற்றும் மகப்பேறு கால அவசர சிகிச்சை காலத்தில், அவசர ஊர்திக்கு ஒரு மணி நேரம் காத்திருக்கவேண்டி இருக்கு. காரணம், கடவூரில் அவசர ஊர்தி இல்லை. இங்கே அதைக் கொண்டுவர எந்த அரசியல்வாதிக்கும் திராணி இல்லை.

இளைஞர்களாகிய நாங்க, கிராம சபைக் கூட்டங்களில் கிராமத்தின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கும்போதும், சில புள்ளிவிவரங்களைக் கேட்கும்போதும், நேரடியாகக் கொலை மிரட்டல் விடுறாங்க. கேள்வி கேட்டதற்காக, சில இளைஞர்கள்மீது பொய் வழக்கு போடுறாங்க.
பாலசுப்ரமணி

தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தில், சுமார் 20 சிறு அணைகளிலும், கடவூர் மகாணத்தில் உள்ள ஆறுகளிலும் சட்டவிரோதமாக மணல் திருடும் வேலையை அரசியல்வாதிகளே செய்கிறார்கள். கிராமங்களைச் சுற்றி இப்படி வட்ட வடிவில் மலை இருக்கும் பகுதிகள், உலகில் இரண்டே இரண்டு இடங்கள்தான் உள்ளன. இங்கிலாந்தில் பிறந்த பிரபல கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சொந்தக் கிராமம், மற்றொன்று எங்க கடவூர் பகுதி. ஆனால், அத்தகைய இயற்கை அரணை மண் திருடுவதன்மூலம் அரசியல்வாதிகள் சிதைத்துவருகிறார்கள்.

கடவூர் மலை
கடவூர் மலை

இங்குள்ள மக்கள் வீடில்லாத ஏழைகள். ஆனால், முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்தவர்கள், ஏழைகளுக்கு வீடு வழங்காமல், பணம் வாங்கிக்கொண்டு வசதி படைத்த செல்வந்தர்களுக்கே வீடு வழங்கினார்கள். இதுதான் அவர்கள் எங்களுக்கு செய்த சாதனை. அதேபோல், இங்குள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பில் ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகளின் துணையோடு, முன்பு ஊராட்சி மன்ற பொறுப்பில் இருந்தவர்கள், இன்னும் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

டிசம்பர் 15-க்குள் `ஃபாஸ்டேக்' கட்டாயம்... இத்திட்டத்தால் யாருக்கு லாபம்?

இளைஞர்களாகிய நாங்க, கிராம சபைக் கூட்டங்களில் கிராமத்தின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கும்போதும், சில புள்ளிவிவரங்களைக் கேட்கும்போதும், எங்களுக்கும் எங்க பெற்றோர்களுக்கும் நேரடியாகக் கொலை மிரட்டல் விடுறாங்க. இப்படி கேள்வி கேட்டதற்காக, சில இளைஞர்கள்மீது பொய் வழக்கு கொடுக்கிறாங்க. கஜா புயல் அடித்தபோது, கடவூர் பகுதியே கடுமையா பாதிச்சது. ஆனால், நிவாரணம் அனைத்தையும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளே அமுக்கிட்டாங்க. இப்படி இங்குள்ள அரசியல்வாதிகளால் நாங்கள் அடைந்த துன்பங்களை அடுக்கிக்கிட்டே போகலாம்.

கடவூர் மலை
கடவூர் மலை

அரசியல்வாதிகள் அடித்தட்டு மக்களுக்கு அல்லல் கொடுப்பதால், நாங்கள் வாரம்தோறும் 70 கிலோமீட்டர் தாண்டி உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுவும் கையுமா அலைய வேண்டியிருக்கு. ஆனா, வெட்கமே இல்லாம இங்குள்ள அரசியல் புள்ளிகள், அடுத்த தேர்தலுக்குத் தயாராகிட்டாங்க. கடவூர் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததோடு, தங்களது வளர்ச்சி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வச்சு செயல்பட்ட அவர்கள், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட முயல்வதாகத் தகவல் வருது.

முன்பு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, 34 கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களின் தலைகளில் மிளகாய் அரைத்த கதை இந்த முறை நடக்காது. மேலே குறிப்பிட்டுள்ள அவர்கள் செய்த அத்தனை தவறுகளையும் ஒத்துக்கொண்டு, வரும் காலத்தில் இதை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் கொடுத்து, அதை எழுதி கையெழுத்து போட்டுக்கொடுத்தால் மட்டுமே இளைஞர்கள் நாங்கள் வாக்களிப்போம். இல்லைனா, கடவூர் பகுதியில் உள்ள 34 ஊர்களிலும் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் அவர்களை இந்தத் தேர்தலில் புறக்கணிப்போம்.

கடவூர் மலை
கடவூர் மலை

இறுதியாக அவர்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். கடவூரை வைத்து பிழைப்பதற்காக அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. கடவூர் வளர்ச்சிக்காக உழைப்பதற்காகவே தேர்ந்தெடுக்கின்றனர். இதை மனதில் வைத்து, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நினைக்கும் வேட்பாளர்களுக்கே இளைஞர்களாகிய நாங்க வாக்களிப்போம்" என்றார் உறுதியுடன்.