Published:Updated:

அடடே ‘அன்னபோஸ்ட்’ கிராமம்... சமூகநீதி காக்கும் பனங்காட்டுப்பாக்கம்!

பனங்காட்டுப்பாக்கம் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
பனங்காட்டுப்பாக்கம் மக்கள்

படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா.ஜ

அடடே ‘அன்னபோஸ்ட்’ கிராமம்... சமூகநீதி காக்கும் பனங்காட்டுப்பாக்கம்!

படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா.ஜ

Published:Updated:
பனங்காட்டுப்பாக்கம் மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
பனங்காட்டுப்பாக்கம் மக்கள்

தேர்தல் அரசியல் விந்தையானது. அது ஒன்றுபட்டிருக்கும் ஒரு நாட்டின் மக்களை, வெவ்வேறு குழுக்களாக அணிதிரளவைக்கும். சாதி, மதம், இனம், மொழி, கட்சி, கருத்தியல் எனத் தனித்தனி முகங்களாகச் செயல்படவைக்கும். அவ்வளவு ஏன், அண்ணன் - தம்பி என ரத்த உறவுகளையே எதிரெதிராக நிற்கவைக்கும்!

இவை எல்லாவற்றுக்கும் விதிவிலக்காக, இருக்கிறது தமிழக கிராமம் ஒன்று. தேர்தல் இந்த ஊர் மக்களை ஒன்று சேர்க்கிறது. ஒன்றுபோல சிந்தித்து, ஒருசேர செயல்படவைக்கிறது. சாதி, மதம், கட்சி என எந்தப் பிரிவினைக்கும் ஆட்படாமல், `ஊர் ஒற்றுமை’ எனும் ஒற்றைப்புள்ளியில் இணைகிறார்கள் அந்தக் கிராம மக்கள். இதனாலேயே கடந்த 35 ஆண்டுகளாக அந்தக் கிராமத்துக்கு உள்ளாட்சித் தேர்தலே நடைபெறாமல், போட்டியின்றி மக்களால் தலைவர்கள் சுழற்சிமுறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்படியொரு தகவல் கிடைக்கவே உடனடியாக அந்தக் கிராமத்துக்கு விசிட் அடித்தோம்.

பனங்காட்டுப்பாக்கம்
பனங்காட்டுப்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி. அனைத்துச் சமூகத்தினரும் வசிக்கும் இந்த ஊராட்சியில் 1,575 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதில்லை. அந்தத் தேவையும் அவர்களுக்கு இருக்கவில்லை. காரணம், தேர்தல் தேதிக்கு முன்பாகவே ஊர் மக்களெல்லாம் ஒன்றுகூடி, தங்களுக்கான தலைவரையும், உறுப்பினர்களையும் தாங்களே பேசித் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அதற்காக விதிமுறைகளை இவர்கள் மீறுவதில்லை... ஊர் மக்களால் முடிவுசெய்யப்பட்டவர்கள் முறைப்படி மனுத்தாக்கல் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்வதில்லை. இறுதியில், ஊர்மக்கள் இறுதி செய்தவர்களே போட்டியின்றி தலைவர்களா கிறார்கள். இந்தத் தேர்வு முறையில் சுழற்சிமுறையில் அனைத்துச் சமூகங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதும், ஒரு முறை தேர்வானவர்கள் மறுமுறை தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் சிறப்பு!

தனசேகரன்
தனசேகரன்
பார்வதி
பார்வதி

‘‘திருப்போரூர் ஒன்றியத்துல இருக்குற 52 ஊராட்சிகள்ல ஒண்ணுதான் பனங்காட்டுப்பாக்கம். 35 வருஷமா தலைவர்களைச் சுழற்சிமுறையில அன்னபோஸ்டாத்தான் தேர்ந்தெடுக்குறோம். ஊர்க் கூட்டம் கூடிருச்சுன்னா இங்க சாதி, மதம், கட்சி பேதமெல்லாம் கிட்ட நெருங்க முடியாது. நாட்டார், ஊர் தர்மகர்த்தா, பெரியவங்க, இளைஞர்கள்னு வயது வித்தியாசம் இல்லாம எல்லாரும் ஒண்ணு சேர்ந்து, யார் இந்த முறை ஊராட்சித் தலைவர், உறுப்பினருனு ஒருமனசா பேசி முடிவு பண்ணிருவாங்க. கட்சி, சாதி மட்டுமல்ல... வயசு பேதமும் இங்க இல்லை. எல்லாரும் சரிக்குச் சமம்’’ என்றார் இம்முறை வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜானகிராமன்.

ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பா.தனசேகரனோ, ‘`1986-ல அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சட்டத்தைக் கொண்டுவந்ததுல இருந்து நடந்த எல்லா உள்ளாட்சித் தேர்தல்கள்லயும் எங்க ஊர்த் தலைவர்கள், வார்டு உறுப்பினர்களை இப்படித்தான் மக்களே ஒண்ணுசேர்ந்து தேர்ந்தெடுத்துக்குறாங்க. அதுல 2001-ல மட்டும் மாற்று வேட்பாளரா நின்னவரு, மனுவை வாபஸ் வாங்க லேட் பண்ணிட்டதால, அந்த ஒரு வருஷம் மட்டும் தேர்தல் நடந்துச்சு. அப்பவும், கிராம மக்கள் முடிவுசெஞ்ச வேட்பாளர்தான் வெற்றிபெற்றார்.

ஒரு முறை பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுட்டாங்கனா, இன்னொரு முறை அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டோம். இப்ப பாருங்க... நான் ஆயுசுக்கும் திரும்பத் தலைவராக முடியாது... இப்படித் தலைவர் பதவி மட்டுமல்ல... வார்டு உறுப்பினராகக்கூட ரெண்டாவது முறையா போட்டியிட முடியாது. சுழற்சிமுறையில புதுசா இன்னொருத்தருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும். எங்க ஊரோட ஒற்றுமையை மீறி யாரும் எதுவும் பண்ண முடியாது... பண்ணவும் மாட்டாங்க. அந்த முறையிலதான் இப்ப என்னையும் ஊர்த் தலைவரா தேர்ந்தெடுத்துருக்காங்க’’ என்றார் பெருமிதமாக.

பனங்காட்டுப்பாக்கம்
பனங்காட்டுப்பாக்கம்

இந்த ஊர் ஒற்றுமைக்கு அடித்தளமாக இருப்பதே, அந்த கிராமத்தினர் இயல்பாகவே சமூகநீதியைப் பின்பற்றுவதுதான். அனைத்துச் சாதியினரும் அங்கு வாழ்ந்துவரும் சூழலில், ஊராட்சித் தலைவராக ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், துணைத் தலைவர் பதவி பொது சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல, பொது சமூகத்தைச் சேர்ந்தவர் ஊராட்சித் தலைவர் என்றால், துணைத் தலைவராகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்படுவார். மொத்தமுள்ள ஆறு வார்டுகள், அனைத்துச் சமூகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பட்டியல் சமூகத்துக்கு இரண்டு அல்லது மூன்று வார்டுகள் ஒதுக்கப்படுகின்றன.

ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பார்வதி. ‘‘86-லிருந்து இதுவரைக்கும் ஆறு உள்ளாட்சித் தேர்தலை பார்த்துட்டோம். பதவிகள் பட்டியல் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டாலும், பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டாலும் நாங்க எங்களுக்குள்ள விட்டுக்கொடுத்து, இப்படித்தான் ஒற்றுமையா சேர்ந்து முடிவு பண்ணிப்போம்’’ என்றார்.

ஊர்க்காரர் நாகரத்தினம் நம்மிடம், ‘‘தேர்தல்னு மட்டுமில்லை... கோயில் திருவிழா, ஊர்ப் பிரச்னை எதுவா இருந்தாலும், நாங்களே பேசித் தீர்த்துக்குவோம். இப்ப இங்க தேர்ந்தெடுக் கப்பட்டிருக்குறவங்க வெவ்வேறு சாதிதான்... ஆனாலும், நாங்க அண்ணன் தம்பியாத்தான் பழகிட்டு வர்றோம்’’ என்றபடி அருகிலிருக்கும் ஊர்த் தலைவரின் தோள்மீது கைபோட்டு அணைத்துக்கொண்டார்.

பொதுவாக கிராமம் என்றாலே சாதி வேற்றுமையும், பிற்போக்குத்தனமும் நிறைந்திருக்கும் என்ற பொதுப்புத்தியைப் பொய்யாக்கி, தமிழ்நாட்டிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் முன்னுதாரணமாக நிமிர்ந்து நிற்கிறார்கள் பனங்காட்டுப்பாக்கம் மக்கள்!