Published:Updated:

தாத்தா, தந்தை, மகன் - ஒரே குடும்பத்தால் 10-வது முறையாக கைப்பற்றப்பட்ட திருவாடானை!

காங்கிரஸின் முக்கியத் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம் திருவாடானைத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாத்தா, தந்தையைத் தொடர்ந்து திருவாடானைத் தொகுதியை கைப்பற்றியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரு.மாணிக்கம்.

வெற்றிச் சான்றிதழைப் பெற்றபோது...
வெற்றிச் சான்றிதழைப் பெற்றபோது...

ஆரம்பத்தில் திருவாடானைத் தொகுதி என்பது, சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை தாலுகாவும், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானைத் தாலுகாவும் இணைந்த சட்டமன்றத் தொகுதியாக இருந்தது.

தேவகோட்டை தாலுகாவில் செல்வாக்கு மிகுந்த கப்பலூர் நாட்டுத் தலைவராக இருந்த கரியமாணிக்கம் அம்பலம், 1957 சட்டமன்றத் தேர்தலில் திருவாடானைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அடுத்தடுத்த தேர்தல்களில் சுதந்திரா, காங்கிரஸ் என வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றிபெற்றார்.

அவரைத் தொடர்ந்து இதே தொகுதியில் அவரது மகன் கே.ஆர்.ராமசாமி 1989-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடத் தொடங்கினார். த.மா.கா., காங்கிரஸ் என மாறி மாறி ஐந்து முறை வெற்றிபெற்றார்.

கரு.மாணிக்கத்தின் தந்தை கே.ஆர்.ராமசாமி
கரு.மாணிக்கத்தின் தந்தை கே.ஆர்.ராமசாமி

2011-ம் ஆண்டு, தொகுதி சீரமைப்புக்குப் பின் திருவாடானைத் தொகுதி முழுமையாக ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வந்ததால், அதில் ஆர்வம் காட்டாமல், சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி தொகுதியில் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் அரசியல் பயணத்தை நிறுத்திக்கொண்டு, தன் மகன் கரு.மாணிக்கைத்தை அரசியலுக்குக் கொண்டு வர நினைத்த கே.ஆர்.ராமசாமி, அதற்கு காரைக்குடி ஒத்துவராது என்பதால், தம் பாரம்பஎயத் தொகுதியான திருவாடானையைத் தேர்ந்தெடுத்தார்.

திருவாடானைத் தொகுதியை குறிவைத்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க - காங்கிரஸ் கட்சியினர் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் சுலபமாக அந்தத் தொகுதியைத் தன் மகனுக்கு வாங்கினார் ராமசாமி .

கரு.மாணிக்கம்
கரு.மாணிக்கம்

தொண்டி, திருவாடானை, வட்டாரத்தில் இன்றும் கப்பலூர் நாட்டுத் தலைவர் என்ற பெருமை இருப்பதாலும், சிறுபான்மையின வாக்குகள் அதிகம் இருந்ததாலும், அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் அ.ம.மு.க வி.டி.என்.ஆனந்த் 32,074 வாக்குகள் பெற்றதால், அ.தி.மு.க வேட்பாளர் ஆணிமுத்துவைவிட 13,316 வாக்குகள் வித்தியாசத்தில் கரு.மாணிக்கம் 77,347 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இதன் மூலம் தாத்தா, தந்தையைத் தொடர்ந்து வெற்றிபெற்றதன் மூலம் மீண்டும் திருவாடானைத் தொகுதியைத் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார், கரு.மாணிக்கம் என்கிறார்கள் இந்தத் தொகுதி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு