Election bannerElection banner
Published:Updated:

``ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள்!" - பதாகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர்

விழிப்புணர்வு பதாகை
விழிப்புணர்வு பதாகை

ஜனநாயக மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள வாக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை கிராமத்தைச் சேர்ந்த ஆர்.கே.வெங்கடேசன்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நிமிடத்திலிருந்து திருவிழாக் கோலத்தில் இருக்கிறது தமிழ்நாடு. கொள்கை, செயல்பாடு, சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்த காலம் மலையேறி விட்டது. `ஒருத்தரை ஏமாத்தணும்னா... ஆசை காட்டணும்' என்ற சதுரங்க வேட்டை வசனத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளன அரசியல் கட்சிகள். காந்தி நோட்டு இருக்க வரைக்கும் ஓட்டு பத்தி கவலையில்ல என்ற எண்ணத்தில் வேட்பாளர்களும் களமாடி வருகிறார்கள். `யார் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கங்க... ஆனா, ஓட்டை எங்களுக்குப் போட்டுங்க' என்ற விஜயகாந்த் பாணி வேட்பாளர்களும் ஒரு பக்கம் உலா வந்தபடியே இருக்கிறார்கள். மொத்தத்தில் ஜனநாயகம் பணநாயகமாகக் கரன்சி நோட்டுகளில் சிரித்துக்கொண்டிருக்கிறது.

பதாகை
பதாகை

இந்நிலையில், ஜனநாயக மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமுள்ள வாக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை கிராமத்தைச் சேர்ந்த ஆர்.கே.வெங்கடேசன். அமெரிக்காவிலிருந்து 2019-ம் ஆண்டு தாயகம் திரும்பியவர், பல்வேறு சமூகப்பணிகள் ஈடுபட்டு வருகிறார். பணத்தின் மூலம் ஜனநாயகம் விலைக்கு வாங்கப்படும் கலாசாரம் ஒழிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

`ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள்' என்ற வேண்டுகோளை முன் வைத்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பதாகைகளை வைத்து வருகிறார்.

இது தொடர்பாக, வெங்கடேசனிடம் பேசினோம். `` இயல்பாகவே சமூக அக்கறை அதிகம். அமெரிக்காவில் இருக்கும்போதுகூட கஜா புயல்ல பாதிக்கப்பட்டவர்களுக்காக 2,21,000 ரூபாய் நண்பர்களோடு சேர்ந்து வசூல் செய்து அனுப்பி வைத்தேன். 2019-ம் வருஷம் இங்க வந்த பிறகு, விதைக்கும் கரங்கள் அமைப்பு மூலமா, நந்தா, சுபாஷ், ராஜப்பா மூன்று பேருடனும் சேர்ந்து சமூகப் பணிகளைச் செய்துட்டு வர்றோம். கொரோனா காலத்துல சாப்பாடு இல்லாம கஷ்டப்ப சாலையோரத்துல இருக்கவங்களுக்கு 45 நாள் உணவு கொடுத்தோம்.

வெங்கடேசன்
வெங்கடேசன்

சாலையில அடிபட்டுக் கிடக்குற கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்து, உரிமையாளர்கள்கிட்ட சேர்க்குறது, காணாம போன பொருள்கள், ஆளுங்களைத் தேடிக்கொடுக்குறதுன்னு எங்களால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சிகிட்டே இருக்கோம். இப்ப நான் முத்துப்பேட்டை ரோட்டரி சங்க செயலாளராகவும் இருக்கேன்.

இந்த நிலையில தேர்தல் நேரத்துல ஜனநாயக உரிமையை விற்பனை செய்றது மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. நான் டாக்டர். அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை அமைப்புல உறுப்பினரா இருக்கேன். செங்கல்பட்டைத் தலைமையகமாகக் கொண்ட அந்த அமைப்பு 200 கிளைகளோட தமிழகம் முழுக்க சமூக பணிகளைச் செஞ்சிட்டு வருது.

அந்த அமைப்பு பெயர்ல, ஓட்டுக்கு நோட்டு வாங்காதீர்கள்னு மூணுக்கு ரெண்டு அடி சைஸ்சுல பதாகை அடிச்சு வீட்டுல மாட்டி வெச்சேன். அதைப் போட்டோ எடுத்து வாட்ஸ் அப், ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணுனேன். பலபேர் பாராட்டுனாங்க. சிலர் அதே மாதிரி எங்களுக்கும் போர்டு இருந்தா கொடுங்கன்னு கேட்டாங்க. நான் அவங்களுக்கும் பதாகை அடிச்சுக் கொடுத்தேன்.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்
களுக்கு உதவி
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவி

முத்துப்பேட்டையில கடைகள்ல தொங்கவிட்டேன். அதைப் பார்த்துட்டு ஒட்டுமொத்தமா மக்கள் மாறிட மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். 100 பேர் படிச்சா, அதுல 4 பேராவது பணம் வாங்காம ஜனநாயகத்தை காப்பாத்துவாங்கனு நம்புறேன். பதாகையை படிச்சுட்டு பல இளைஞர்கள் இதை அவங்க முகநூல் மூலமா பரப்பிட்டு இருக்காங்க. முத்துப்பேட்டை மக்களுக்காக நான் வெச்ச பதாகை, இன்னிக்கு தமிழகம் முழுக்க பரவியிருக்கு. அதுதான் நான் எடுத்த முயற்சிக்கான வெற்றியா நினைக்கிறேன்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு