Published:Updated:

`சுடுகாடு இல்லை; லஞ்சம் கொடுக்கணும்!' - உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் தூத்துக்குடி கிராமம்

தூத்துக்குடியில் 150 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடுகாடு இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர் கே.குமாரபுரம் கிராம மக்கள்.

கே.குமாரபுரம் கிராம மக்கள்
கே.குமாரபுரம் கிராம மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள ஊத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கே.குமாரபுரம். இந்த கிராமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குருமலை வனச்சரகத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கிராம மக்களின் முக்கியத் தொழில் மானாவாரி விவசாயம்தான். இப்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக சுடுகாடு இல்லை. அதனால், இக் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அருகிலுள்ள வனத்துறை பகுதியில்தான் பல ஆண்டுகளாக புதைத்தும், எரியூட்டியும் வருகிறார்கள்.

குமாரபுரம்
குமாரபுரம்

ஆனால், தற்பொழுது வனத்துறையின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதால் உடல்களைப் புதைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், இறந்தவர் உடலைப் புதைக்கவோ, எரிக்கவோ வேண்டுமென்றால் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை வனத்துறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன், பலதடவை மனு கொடுத்தும் சுடுகாடு பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர் இக்கிராம மக்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ``எங்க கிராமத்துல 500-க்கு மேற்பட்ட வீடுகளும், 1,200 மக்களும், 600 ஓட்டுகளும் இருக்கு. 150 வருசமா சுடுகாடு இல்லை. கிராமத்துல ஒருவர் இறந்து போயிட்டா, இறந்தவர் உடலைப் பார்த்து அழுவதை விட, அதை அடக்கம் செய்வதற்கு என்ன செய்யலாம்னு புலம்ப வேண்டிய நிலைமை இருக்கு. இதுவரைக்கும் வனத்துறை இடத்துல புதைத்தும், எரியூட்டியும் வந்தோம்.

குருமலை வனப்பகுதி
குருமலை வனப்பகுதி

ரெண்டு வருசமா ரொம்ப கெடுபிடியா இருக்கு. எரிக்கணும்னாலும், புதைக்கணும்னாலும் ரூ.5,000-த்தில் இருந்து 10,000 ரூபாய் வரைக்கும் அதிகாரிகளுக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டியதிருக்கு. எங்க கிராமத்திற்கு தனியா சுடுகாடு அமைச்சுத் தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

Vikatan

தேர்தல் நேரத்துல வாக்குக் கேட்க வருபவர்கள், `சுடுகாடு அமைக்கப்படும்'னு அந்த நேரத்துல சொல்லிட்டுப் போறதோட சரி. அதற்குப் பிறகு கண்டுகொள்வதில்லை. இதுவரைக்கும் பொறுத்துட்டோம். இனிமேலும் பொறுக்க மாட்டோம். உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செஞ்சிருக்கோம்” என்றனர். மக்களின் இக்குற்றச்சாட்டு குறித்து கோவில்பட்டி வனச்சரகர் சிவராமனிடம் பேசினோம்.

ஊர் மக்கள்
ஊர் மக்கள்

``வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் நுழைவு என்பதே விதிமீறல். இதுவரை மனிதாபிமான அடிப்படையில் உடல்கள் புதைக்க அனுமதிக்கப்பட்டு வந்திருக்கலாம். வனத்துறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. மக்களிடம் எவ்வித பணமும் பெறவில்லை. அப்படி குற்றச்சாட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதோடு முடித்துக் கொண்டார்.