Published:Updated:

தேர்தல் கிசுகிசு

தேர்தல் கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

தேர்தல் கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
தேர்தல் கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் கிசுகிசு

எதிர்க்கட்சியினரின் போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது உளவுத்துறையின் வழக்கமான வேலைதான். ஆனால், சமீபகாலமாக ஆட்சிக்கு உறு‘துணை’யாக விளங்குபவரின் பேச்சுகள் தொடர்ச்சியாக டேப் செய்யப்படுகின்றனவாம். குறிப்பாக, மன்னார்குடி வகையறாக்களிடம் பேசிய பேச்சு அப்படியே பதிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘வாய்ஸ்’ வெளியே விடப்படவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பே ‘அண்ணன்’ தலைவரைப் பற்றி அநாகரிகக் காணொலிகளை வெளியிட்டுக்கொண்டிருந்த சினிமா அம்மணி, அப்படியே கப்சிப் ஆனதில் பலருக்கும் ஆச்சர்யம். இது குறித்து விசாரித்தால், “மத்தவங்களோட ஆச்சர்யத்தை விடுங்க... அண்ணனுக்கே இது பெரிய ஆச்சர்யம்தான்” என்கிறார்கள் தம்பிகள். ஒருவேளை யாரும் ஏ.கே.74-ஐக் காட்டி மிரட்டியிருப்பாங்களோ?!

தேர்தல் கிசுகிசு

`தேர்தல் முடிவுகள் ஆளும்தரப்புக்குப் பெரிய அடியாக அமையும்’ என ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கும் ‘டோக்கன்’ தலைவர், அதன் பிறகு டெல்லி தலைமை தனக்கே தலையாட்டும் என உறுதியாக நம்புகிறாராம். வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட காலத்திலேயே டெல்லி போய்வர டிக்கெட் போடச் சொல்லிவிட்டாராம்.

`நீட்’டால் இறந்த மாணவி பேசுவதுபோல் வீடியோ தயாரித்த விவகாரத்தில், தாவல் அமைச்சரின் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனமாம். ‘நெகடிவ் கமென்ட்ஸ் கொடுக்கிறவங்களை பிளாக் பண்ணிடுங்க’ என சிலர் அட்வைஸ் சொல்ல, ‘லட்சக்கணக்கானவங்களை பிளாக் பண்ணணும்னா தனியா ஆள் போட்டாத்தான் உண்டு’ என நொந்துபோய்ச் சொன்னாராம் தாவல் அமைச்சர்.

சின்னத் தலைவி, பட்டுப் புடவைக்குப் பெயர்போன ஊரின் கோயிலுக்குப் போய், அங்கு சின்னவரிடம் ஒன்றரை மணி நேரம் உரையாடியது ஆளும்தரப்பின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. ஒருகட்டத்தில் சின்னவருக்கே போன் போட்ட போலீஸ் புள்ளி ஒருவர் சந்திப்பு குறித்துக் கேட்க, “கஷ்டங்களைச் சொன்னார். ஆசி கொடுத்து அனுப்பினேன். அவ்வளவுதான்” எனப் பட்டும்படாமல் பேசி ‘கப்சிப்’ காத்தாராம். மடங்கள் என்றாலே மர்மங்கள்தானே!

பணத்தையும் கண்ணீரையும் ஒருசேர இணைத்து ஹெல்த் புள்ளி செய்யும் பரப்புரை, பலரையும் திகைக்கவைத்திருக்கிறது. “நான் உடல் உறுப்புகளை தானம் செய்தவன். என்னால் 11 பேர் உறுப்புகளைப் பெறுவார்கள். என் உயிரே உங்களுக்காகத்தான்” என்றெல்லாம் வசனங்களை ஹெல்த் புள்ளி வாரியிறைக்க, பின்னாலேயே பசைப் பட்டுவாடாக்களைத் தாராளமாக நடத்துகிறார்கள் அவர் ஆதரவாளர்கள். ‘ஜெயிக்கிறதுக்காக இந்த மனுஷன் என்ன வேணும்னாலும் செய்வாரு’ எனப் புரிந்துவைத்திருக்கும் வாக்காளர்களால் ஹெல்த் புள்ளியின் கனவு புஸ்வாணம் ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

தான் போட்டியிடும் தொகுதியில் தோற்றாலும் பரவாயில்லை எனச் சொல்லும் நடுநாயகர், மாநில அளவில் மூன்றாவது இடத்தைத் தனது கட்சி பிடித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ‘கர்ஜிக்கும் அண்ணனின் கட்சி மூன்றாமிடத்துக்கு வந்துவிட்டால், நாம் போராடியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்’ என்கிறாராம் நெருங்கியவர்களிடத்தில்.

வாரிசுப் புள்ளி கல்லைக் காட்டி பரப்புரையில் செய்த சேட்டை, ஆளும்தரப்பை ரொம்பவே கடுப்பாக்கிவிட்டதாம். இதற்கு பதிலடியாக வாரிசுப் புள்ளிக்கு எதிரான சர்ச்சையை சம்பந்தப்பட்ட நடிகை மூலம் கிளப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ‘திமிரு பிடிக்காத’ நடிகை வாய் திறக்க மறுத்துவிட்டாராம்.

தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்புகளையெல்லாம் சட்டை செய்யாமல், யூடியூப் சேனல் நடத்தும் முன்னாள் டி.வி.காரர் ஒருவரிடம், “உண்மை நிலையைச் சொல்லுங்கள்” எனக் கேட்டதாம் டெல்லி. “கௌரவமான தோல்வியாக இருக்கும். நிறைய தொகுதிகளில் இழுபறி நீடிக்கும்” என முன்னாள் டி.வி.காரர் சொல்ல, கடைசிகட்ட பட்டுவாடாக்களைத் தீவிரமாக்கச் சொன்னதாம் டெல்லி. அடப்பாவிகளா, நள்ளிரவு நேரங்களில் கரன்ட் கட்டானதுக்கு அதுதான் காரணமா?

தேர்தல் கிசுகிசு

படத்துறையில் செழிப்பான ஃபைனான்ஸ் புள்ளி ஒருவரிடம் தேர்தல் நிதி கேட்டிருக்கிறது ஆளும் தலைமை. எப்போதும் அள்ளிக் கொடுப்பவர், இந்தமுறை கிள்ளிக்கூடக் கொடுக்கவில்லையாம். காரணம், இந்தமுறை நிச்சயம் தனக்கு ஆளும்கட்சியில் சீட் கிடைக்கும் என நம்பியிருந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் உதட்டைப் பிதுக்கிவிட்டார்களாம். “சீட்டு தராதவங்களுக்கு நான் நோட்டு தரணுமா?” என போனிலேயே சீறிவிட்டாராம்.

ஆட்சியின் துவார பாலகர்களாக இருந்த இரண்டு பெல் பிரமுகர்களுக்கும் இந்தமுறை வென்றால் அமைச்சர் பதவி கிடையாதாம். ஒருவர் சபாநாயகராம். இன்னொருவர் கட்சியில் கொறடாவாக நியமிக்கப்படுவாராம். “கட்சி, ஆட்சி இரண்டையும் தன் வசமாக்க முதன்மையானவர் போடும் திட்டம் இது” என்கிறார்கள் விஷயப்புள்ளிகள். முதல்ல ஜெயிக்கப் பாருங்கய்யா…

“தேர்தலில் தோற்றாலும், சீக்கிரமே நீங்கள் டெல்லிக்கு வர வேண்டியிருக்கும்” எனப் பரபரப்பு நடிகையிடம் நம்பிக்கை கூறிச் சென்றிருக்கிறார் ஹோம் புள்ளி. பரப்புரைக்கு வந்தவர், நடிகையின் சுறுசுறுப்பையும் திட்டமிடலையும் கண்டு வியந்துபோனாராம். ‘அம்மணிக்கு ராஜ்ய சபா சீட் உறுதி’ என்கிறார்கள் ஹோம் புள்ளியின் பூரிப்பைப் பக்கத்திலிருந்து பார்த்தவர்கள்.