`பேரக்குழந்தைகள் பெற்ற பிறகும் இளைஞரணிச் செயலாளராகவே இருந்தவர் ஸ்டாலின்’ - முதல்வர் விமர்சனம்

வாரிசு அரசியலை தக்கவைக்கவே பேரக் குழந்தைகள் பெற்ற பிறகும் ஸ்டாலின் தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளராகவே இருந்தார் என குன்னூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கூடலூர் மற்றும் குன்னூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
குன்னூரில் பேசிய முதல்வர் பழனிசாமி,``மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த மாவட்டம் நீலகிரி மாவட்டம். அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்த மாவட்டம். அதே போன்று எனக்கும் நீலகிரி மாவட்ட மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை அ.தி.மு.க கோட்டையாக மாற்ற மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். 2011-ம் ஆண்டு தேர்தலின் போது ஜெயலலிதா பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு தொழில் முதலீடு மாநாடு நடத்தப்பட்டது. இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் வந்தன.இதன் மூலம் 304 தொழிற்சாலைகள் தமிழகத்தில் வரஇருக்கின்றன. இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கொரோனா பாதித்த காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோன்று பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டது. அத்துடன் ரூ.2500 வழங்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. நாம்தான் வாரிசு. எனவே மீண்டும் அவரது ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர நாம் பாடுபடவேண்டும்.

ஆனால் தி.மு.க ஸ்டாலினின் குடும்ப நலனுக்குகாவே செயல்பட்டு வருகிறது. கருணாநிதிக்குப்பின் ஸ்டாலின். ஸ்டாலினுக்குப்பின் உதயநிதி, கனிமொழி என வாரிசுகளே தொடர்கின்றனர். அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டனும் முதல்வராக முடியும். வாரிசு அரசியலை தக்கவைக்கவே, பேரக்குழந்தைகளைப் பெற்ற பிறகும் ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகவே இருந்தார். பொய் சொல்வதற்கென்று நோபல் பரிசு ஒன்று வழங்கினால். அதை ஸ்டாலினுக்கே கொடுக்கலாம்" என்றார்.