Election bannerElection banner
Published:Updated:

திமுக 76%, பாஜக 75% - குற்ற வழக்குகளைக்கொண்ட வேட்பாளர்கள்: ஆய்வறிக்கை

தேர்தல்
தேர்தல்

`கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் போன்ற கொடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்களை நிரந்தரமாகத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என தன்னார்வ அமைப்பான `சோக்கோ' தெரிவித்துள்ளது.

``தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3559 வேட்பாளர்களில் 466 பேர் மீது, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன'' என்ற தகவலை தன்னார்வ அமைப்பு வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேட்பாளர் விவர அறிக்கை வெளியீடு
வேட்பாளர் விவர அறிக்கை வெளியீடு

மதுரை `சோக்கோ' அறக்கட்டளை நிர்வாகிகள் மகபூப் பாட்சா, செல்வகோமதி முன்னிலையில் நீதியரசர் கிருஷ்ணய்யர் அரங்கில் நடந்த நிகழ்வில் வேட்பாளர் விவரங்களை வெளியிட்டுப் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், ``தற்போது நடைபெறும் தேர்தலில் 202 தேசியக் கட்சி வேட்பாளர்கள், 489 மாநிலக் கட்சி வேட்பாளர்கள்,1,001 பதிவுபெற்ற அங்கீகாரம் பெறாத கட்சி வேட்பாளர்கள், 1,867 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் 3,559 வேட்பாளர்களில் 466 பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மொத்த வேட்பாளர்களில் இது 13 சதவிகிதம்.

அவர்களில் 207 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராகக் கடுமையான குற்றப்பிரிவுகளில் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில், தி.மு.க-வில் போட்டியிடும் 178 பேரில் 136 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது அவர்களின் வேட்பாளர்களில் 76 சதவிகிதம். அ.தி.மு.க-வில் 191 வேட்பாளர்களில் 46 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது 24 சதவிகிதம்.

ஜோசப் விக்டர் ராஜ்
ஜோசப் விக்டர் ராஜ்

பா.ஜ.க-வின் 20 வேட்பாளர்களில் 15 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் 75 சதவிகிதமும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 21 பேரில் 15 பேர் மீது வழக்கு உள்ளதால் 71 சதவிகிதமும், தே.மு.தி.க-வில் 30 சதவிகிதமும், பா.ம.க-வில் 44 சதவிகிதம் என குற்றவழக்கு உள்ள வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க வேட்பாளர்கள் உட்பட ஏழு பேர் மீது கொலை வழக்கும், ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது" என்றனர்.

வேட்பாளர்களின் சொத்து மற்றும் கடன், கல்வித்தகுதி, வயது, பாலின விவரத்தையும் வெளியிட்டார்கள்.

தேர்தல்
தேர்தல்

மேலும், ``கொலை, பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் போன்ற கொடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வேட்பாளர்களை நிரந்தரமாகத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளிக்கும் வேட்பாளர்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்" போன்ற பரிந்துரைகளையும் இவ்வமைப்பினர் முன்வைத்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு