தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக உள்ளாட்சி பதவிக்கு திருநங்கை ஒருவர் சுயேச்சையாக போட்டியிட விருப்ப மனு பெற்று மனுதாக்கல் செய்திருப்பது மாவட்ட அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து திருநங்கை ஆர்த்தியிடம் பேசினோம், ``தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கைகள் அதிக அளவில் போட்டியிடுகிறார்கள். பெரிய அரசியல் கட்சிகளும் திருநங்கைகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு பொதுப்பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே என்னுடைய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திருநங்கையான நான் விருப்பமனு பெற்று இன்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். எங்களது வார்டில் பருவ மழைக்காலங்களில் குடியிருப்புகளைச் சுற்றியும் மழைநீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தப் பிரச்னை இதுநாள் வரையிலும் தீர்க்கப்படவில்லை. நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து நிரந்தரத் தீர்வை எட்டும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். பல தெருக்களுக்கு சாலையும் கிடையாது. குடிநீர் வசதியும் கிடையாது. இதுதவிர எங்கள் பகுதியில் இருக்கும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரிக்க சரிவர மாநகராட்சி குப்பை வண்டிகள் வருவதில்லை என்பதால், எங்களது பகுதி ஆங்காங்கே குப்பை குவியல்களாகக் காணப்படுகிறது.

எனவே இதற்கு முடிவு கட்டும் வகையில் சுகாதாரமான வாழ்வியல் சூழலை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். ஒரு வேளை இந்த தேர்தலில் மக்கள் என்னை தேர்ந்தெடுக்காமல் புறக்கணித்தாலும் முழுமூச்சுடன் என்னாலான உதவிகளை செய்து எனது சமூக கடமையை மக்களுக்கு எடுத்து காட்டுவேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆழ் மனதிலிருந்தே எப்பவுமே உண்டு. திருநங்கையான எனக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது. எந்த இன வேறுபாடும் கிடையாது. குடும்பம் குழந்தைகளும் எனக்கு கிடையாது. எனது வார்டு மக்கள்தான் எனது குடும்பம். ஆகவே அவர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்ய முழுவீச்சுடன் பணியாற்ற என்நேரமும் என்னால் முடியும்.

தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு விருப்பமனு பெற்ற தகவல் அறிந்ததும், எங்கள் பகுதி மக்கள் பலரும் வீடு தேடி வந்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அரசியலைப் பொறுத்தமட்டில் தன்னலமற்று நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை தந்த பெருந்தலைவர் காமராஜர்தான் எனக்கு முன்னுதாரணம். அவரை போல் நானும் பல நல்ல திட்டங்களையும், முயற்சிகளையும் முன்னெடுக்க மக்கள் எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார்.