Published:Updated:

`நாங்கெல்லாம் எப்படி சார் ஓட்டு போடுறது?' - தவிக்கும் ஊழியர்கள்... ஆக்‌ஷனில் இறங்குமா ஆணையம்?

அரசாங்கத்தின் உத்தரவு மதிக்கப்படாமல் இருக்கிறது என்பது உறுதியாகவே தெரிகிறது. எனவே, புகார்களை எதிர்பார்க்காமல் அதிகாரிகள் களத்தில் குதிப்பதுதான் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் வர்த்தக வளாகம் ஒன்றின் அருகே இருக்கும் டீக்கடையொன்றில் நின்றிருந்தபோது...

``என்ன எலெக்ஷனுக்கு ஊருக்குப் போக ரெடியாகிட்டியா?" கடைக்காரர் கேட்க,
``அட நீ வேறப்பா... `ஓட்டுப்போட போ... இல்ல எங்க வேணாலும் போ. லீவு போட்டா சம்பளம் கிடையாது'னு கம்பெனியில சொல்லிட்டாங்க. நான் பாக்கற செக்யூரிட்டி வேலையில கிடைக்கிறதே தம்மாத்தூண்டுதான். அப்புறம் எப்படி ஊருக்குப் போறது?" என்றார் சீருடையுடன் நின்றிருந்த செக்யூரிட்டி ஒருவர்.

``அதான், தேர்தலுக்கு சம்பளத்தோட லீவுனு அரசாங்கத்துலயே சொல்லியிருக்காங்களே" என்று இடையில் நாம் புகுந்தோம்.

``அட நீங்க வேற... இதையெல்லாம் போய் கம்பெனியில சொன்னா, இருக்கற வேலையும் போயிடும். நான் கிளம்பறேன்" என்று நடையைக் கட்டினார்.
வேறு சில செக்யூரிட்டிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று பலரிடமும் பேச்சுக் கொடுத்தோம்.

Election commission of india
Election commission of india

``ஒவ்வொரு தடவையும் தேர்தலப்ப இப்படித்தான் அரசாங்க தரப்புல சொல்லுவாங்க. ஆனா, வேலை பாக்குற இடத்துல சம்பளம் கிடையாது. உனக்கு விருப்பம் இருந்தா போ. சம்பளம் வேணும்னா வேலைக்கு வந்துடுனு சொல்லிடுவாங்க. மேற்கொண்டு பேசினா, வேலையைவிட்டே நின்னுடுனு சொல்லிடுவாங்க. நமக்கு பொழப்பு முக்கியமுங்க" என்பதே பலரிடமும் இருந்து கிடைத்த பதிலாக இருந்தது.

``ஏற்கெனவே நான் வேலை பார்த்த கம்பெனியில ஒரு தேர்தலப்ப லீவு கொடுக்கல. ஒரு வேகத்துல தேர்தல் ஆபீஸுக்கு புகார் பண்ணிட்டேன். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல. கடைசியில என் வேலை போனதுதான் மிச்சம்" - இப்படியும் ஒரு பதில் கிடைத்தது.

நம்மிடம் பேசியவர்களின் அடையாளங்களை மறைத்தே இதை இங்கே வெளியிடுகிறோம். காரணம்... அவர்கள் கையிலிருக்கும் சொற்ப சம்பள வேலையும் பறிபோய்விடக் கூடாது என்கிற எச்சரிக்கைதான்.

சென்னை என்பது ஓர் உதாரணமே... கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி என்று தமிழகம் முழுக்கவே இதுதான் நிதர்சனம்.

மாதச் சம்பளக்காரர்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் பிரச்னை இருப்பதில்லை. அதாவது, அரசாங்க சட்டதிட்டங்களுக்குட்பட்டு மாதம்தோறும் விதிமுறைகளின்படி சம்பளத்தைத் தரும் நிறுவனங்களில் பிரச்னைகள் இருப்பதில்லை. ஆனால், எந்தவித சட்ட திட்டங்களையும் மதிக்காமல் நடத்தப்படும் வணிக மற்றும் சேவை நிறுவனங்களில் பணியாற்றுவோர், அமைப்புசாரா தொழிலாளர்கள் என்கிற வகையில் வரும் கட்டடத் தொழிலாளர்கள், மூட்டைத் தூக்குவோர், வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் போன்றவர்களுக்குத்தான் பாதிப்பே. ஜனநாயக கடமையாற்றச் செல்வது முக்கியமா... அன்றாட வாழ்வாதாரத்தைப் பார்ப்பது முக்கியமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படும் அவர்களில் பலரும், வாக்களிப்பதில்லை என்பதுதான் பரிதாபம்.

``அனைவரும் வாக்களிக்க வேண்டும்... வாக்குரிமை உங்களுடைய அடிப்படை உரிமை. வாக்களிப்பதற்கு வசதியாக அன்றைய தினம் சம்பளத்துடன்கூடிய விடுமுறை" என்று அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது தேர்தல் ஆணையம்.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தங்களின் சொந்த...

Posted by Aval Vikatan on Saturday, March 27, 2021

`ஏப்ரல் 6-ம் தேதியன்று முழு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும்' எனத் தனியார் அலுவலகங்களுக்கு உயர் நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆனால், இவற்றையெல்லாம் பெரும்பாலான நிறுவனங்கள் பொருட்படுத்துவதே இல்லை. இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

இது குறித்து, அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்குமாரிடம் கேட்டபோது, ``பிரச்னைகள் இருப்பது உண்மையே. பல இடங்களிலும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு வழங்காத நிலை நீடிக்கவே செய்கிறது. அரசுத் துறையினர் இதிலெல்லாம் எந்த அளவுக்குக் கவனத்தைச் செலுத்துகின்றனர் என்று தெரியவில்லை. எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை, எங்களின் கவனத்துக்கு வரும்போது நேரடியாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேசி, தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருகிறோம். ஆனால், எங்கள் கவனத்துக்கு வராமலே போய்விடுபவைதான் அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால்தான், அமைப்புசாரா தொழிலாளர்களிடம், `சம்பளத்துடன் விடுப்பு அளிக்கவில்லை' என்றால் நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் சட்டரீதியான தீர்வைத் தேடித் தருகிறோம் என்று கூறியுள்ளோம். அவர்களுக்கான உரிமையை ஒருபோதும் இழக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறோம். அந்த வகையில் அவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் சங்கம் மேற்கொள்ளும் என்கிற நம்பிக்கையையும் வழங்கி வருகிறோம்“ எனத் தெரிவித்தார்.

சங்கத்தின் தொடர்பு எண்: 9444116342

இதுகுறித்து அரசாங்கத் தரப்பின் கருத்தறிவதற்காகத் தமிழகத் தொழிலாளர் துறை துணைஆணையர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டபோது, ``தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் வருகிறது. தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ் அல்ல. இருந்தாலும், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு இடையூறு வராமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எல்லா தேர்தல் நேரங்களிலும் எடுத்து வருகிறோம். விழிப்புணர்வை ஏற்படுத்த, செய்தித்தாள்களில் விளம்பரம் செய்கிறோம். தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம். வருவாய்த் துறையின் தொழிலாளர் நலஆய்வாளர்கள் மூலம் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்“ என்றார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான பிரகாஷிடம் கேட்டபோது, ``சட்டரீதியான வழிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவாக வெளியிட்டுள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது அபராதம் மட்டுமல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து புகார் அளிக்க விரும்பினால், 1950 என்ற இலவச தேர்தல் உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்“ என்றார்.

ஆக, அரசாங்கத்தின் உத்தரவு மதிக்கப்படாமல் இருக்கிறது என்பது உறுதியாகவே தெரிகிறது. எனவே, புகார்களை எதிர்பார்க்காமல் அதிகாரிகள் களத்தில் குதிப்பதுதான் நல்லது. தேர்தல் நாளில் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக அதிகாரிகள் விசிட் அடித்தாலே... அத்தனையும் தெரிந்துவிடப் போகிறது.

இதுக்கு ஒரு ஆக்‌ஷன் செல் உருவாக்குங்களேன் ஆபீஸர்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு