புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வைத்திலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பியாகிவிட்டதால் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி. தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தைத் துவக்கிவிட்டன அரசியல் கட்சிகள்.
ஆனால், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வேட்பாளர்களையும், கூட்டணியையும் இறுதி செய்வதற்கே திணறிக்கொண்டிருக்கின்றன கட்சிகள். 30,659 வாக்காளர்களைக்கொண்ட இந்தத் தொகுதியில் முதலியார் சமூகம் பெரும்பான்மையாக இருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 11,618, அ.தி.மு.க 6,512, என்.ஆர்.காங்கிரஸ் 3,642, பி.ஜே.பி 764 வாக்குகள் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 5,106 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமுதல்வர் நாராயணசாமியுடன் மோதலில் இருக்கும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தனது ஆதரவாளரும், முன்னாள் நியமன எம்.எல்.ஏ அண்ணாமலை ரெட்டியாரின் மகன் ஜெயக்குமாரை இந்தத் தொகுதியில் களமிறக்கிவிட முயற்சி செய்கிறார். இதன் மூலம் முதல்வர் நாராயணசாமிக்கு `செக்’ வைப்பதுடன், கட்சி பேதமின்றி அனைத்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்கும் அளவுக்குப் பொருளாதார பலம் மிக்கவர் என்பதால், ஜெயக்குமார் எளிதில் வெற்றிபெறுவார் என்பது அமைச்சர் நமச்சிவாயத்தின் கணக்கு.
அதேசமயம் அரசியலில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டு டெல்லி அரசியலிலேயே கோலோச்சியதால் முதல்வர் நாராயணசாமிக்குச் சொந்தத் தொகுதி என்று ஒன்று இல்லை. அதனால் தனக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜான்குமாரை வேட்பாளராக நிறுத்த நினைக்கிறார் முதல்வர் நாராயணசாமி. அதன்மூலம் 2021 தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியை மீண்டும் ஜான்குமாருக்கே கொடுத்துவிட்டால் காமராஜர் நகர் தொகுதியை தனக்கான தொகுதியாக தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும் நினைக்கிறார் நாராயணசாமி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒருவேளை மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து தான் டெல்லி சென்றுவிட்டால், தன் மகள் விஜயகுமாரியைக் களமிறக்கிவிடலாம் என்றும் கணக்கு போடுகிறார். நாராயணசாமியின் இந்த எண்ணத்துக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ வைத்திலிங்கம். டெல்லியில் நடந்த இந்தப் பஞ்சாயத்தில் முதல்வர் நாராயணசாமி முன்னிறுத்திய ஜான்குமார் பெயரை டிக் அடித்திருக்கிறது கட்சித் தலைமை.
அதேபோல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி-யில் யார் போட்டியிடுவது என்ற குழப்பம் நீடித்துவந்தது. உட்கட்சிப் பூசல், வேட்பாளர் மற்றும் நிதி தட்டுப்பாடு போன்றவற்றால் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விலகியிருந்தார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. அதனால் உற்சாகமான பி.ஜே.பி தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளரைத் தயார் செய்துகொண்டிருந்தது. ஆனால், தடாலடியாக சென்னைக்குச் சென்று முதல்வர் எடப்பாடியைச் சந்தித்த ரங்கசாமி அ.தி.மு.க ஆதரவுடன் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்க, நொந்து போனது பி.ஜே.பி.
ரங்கசாமியின் இந்தச் செயல் ஒன்றும் புதிது இல்லை. இடதுபக்கம் கையைக் காட்டி, வலதுபக்கம் இண்டிகேட்டரைப் போட்டு நேராகச் சென்று போலீஸைக் குழப்புவது என்ற சினிமா டயலாக்கைப் போலத்தான் ரங்கசாமியின் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது ராஜ்யசபா எம்.பி தேர்தல் நடந்தது.
கூட்டணியில் இருந்த பி.ஜே.பி அதைக் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்த அதேசமயம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்களே எதிரணியான தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க விலை போனார்கள். யாரும் எதிர்பாராத வகையில் இரவோடு இரவாக தன்னை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க-வுக்கு அந்தச் சீட்டை விட்டுக்கொடுத்து, தன் நண்பரையே எம்.பியாக்கி அதிரடி கொடுத்தது அரசியல் வரலாறு.
கூட்டணியில் இருக்கும் தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை மீறிவிட்டது என்று துள்ளிக் குதித்த புதுச்சேரி பி.ஜே.பி தலைமை, தனியாகப் போட்டியிடப் போகிறோம் என்று நேர்காணலை நடத்தி விருப்ப மனுக்களைப் பெற்றதோடு, ``எங்கள் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கூறியதால்தான் நாங்கள் வேட்பாளர்களைத் தயார் செய்தோம். ஆனால், இப்போது எங்களிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் அ.தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீடு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து தலைமையிடம் தெரிவித்திருக்கிறோம். தலைமையின் உத்தரவுப்படி தனித்துப் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம்” என்று காரசாரமாகப் பேட்டி கொடுத்தார் பி.ஜே.பி-யின் புதுச்சேரி தலைவரும், நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன்.

இது ஒருபுறமிருக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இவர்தான் என்று முறையாக அறிவிக்காத நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ நேரு, ``நான்தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்'' என்று கூறிக்கொண்டு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் இறங்கிவிட்டார்.
அதற்கு, ``முன்னால் எம்.எல்.ஏ நேரு கூட்டணி தர்மத்தை மீறி தனியாக வாக்கு சேகரிப்பில் இறங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது செயல் அரசியம் அநாகரிகம். இதுகுறித்து எங்கள் கட்சித் தலைமையிடம் புகார் அளிப்போம்” என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் முத்தியால்பேட்டையின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன்.

ஆனால், ``புதுச்சேரியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வின் சட்டமன்றக்குழு உறுப்பினர்களின் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏதான். அவரிடம் நாங்கள் தகவல் தெரிவித்தால் போதும். உங்களுக்குத் தனியாக சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கள் கட்சிக்குள் நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம்” என்று சமூக வலைதளத்தில் அவருக்கு காட்டமான பதிலடி கொடுத்துவருகின்றனர் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள்.