Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

போடி நகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
போடி நகராட்சி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீரின் சொந்தத் தொகுதியான போடியைச் சேர்ந்தவர் முனியம்மாள்

உள்ளாட்சி உய்யலாலா!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீரின் சொந்தத் தொகுதியான போடியைச் சேர்ந்தவர் முனியம்மாள்

Published:Updated:
போடி நகராட்சி
பிரீமியம் ஸ்டோரி
போடி நகராட்சி
உள்ளாட்சி உய்யலாலா!

கரூர்... ஆறு வார்டுகள் சரண்டர் - தி.மு.க-விடம் திருப்பிக் கொடுத்த காங்கிரஸ்!

கரூர் மாவட்டத்தில் வார்டுகள் பிரிப்பதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கும் இடையே பிரச்னை வெடித்து, ‘நான் ஒண்ணும் உங்க வீட்டு விருந்துக்கு வரவில்லை’ என்று ஜோதிமணி பொங்கியது வரை விவகாரம் சென்றது. இந்த நிலையில், “கரூர் மாவட்டத்தில் தி.மு.க சார்பில் காங்கிரஸுக்கு ஒதுக்கிய வார்டுகளில், ஆறு வார்டுகளை தி.மு.க-வுக்குத் திருப்பித் தந்துவிட்டோம்” என்று கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார். விசாரித்தால், ‘‘கரூர் மாவட்டத்தின் எட்டு பேரூராட்சிகளில் தலா ஒன்று வீதம் எட்டு வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கியது. ஆனால், அவற்றில் ஆறு பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லை. செல்வாக்கான நபர்கள் வசிக்கும் வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை. இதனால், அந்த ஆறு வார்டுகளையும், தி.மு.க-விடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். இப்போது, அங்கே தி.மு.க தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

போடி நகராட்சியில் பன்னீர் பேச்சுவார்த்தை... - முனியம்மாள் ரிட்டர்ன்!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீரின் சொந்தத் தொகுதியான போடியைச் சேர்ந்தவர் முனியம்மாள். போடி நகராட்சியின் கவுன்சிலராக இருந்த இவருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியடைந்தவர், தி.மு.க-வில் இணைந்து 22-வது வார்டில் சீட்டும் பெற்று, வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். இதையறிந்த பன்னீர், முனியம்மாளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார். இதனால், தி.மு.க சார்பில் தாக்கல் செய்த வேட்புமனுவை முனியம்மாள் வாபஸ் பெற.... மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த கல்பனா என்பவர் தி.மு.க வேட்பாளராகியிருக்கிறார்!

உள்ளாட்சி உய்யலாலா!

வாபஸ் வாங்கிய வேட்பாளர்... நெல்லையில் அப்செட்டான எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் நெல்லை, தென்காசி மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி தலைமையில் நெல்லையில் நடந்தது. கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கூட்டத்துக்கு வந்திருந்த நிலையில், நெல்லை மாநகராட்சி 10-வது வார்டு வேட்பாளர் விஜி என்பவர் மட்டும் வரவில்லை... அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது விஜி தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கிக்கொண்டிருந்தார். இந்தத் தகவல் தெரிந்து எடப்பாடி கடும் அப்செட் ஆகியிருக்கிறார். இதையடுத்து, “தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாகத்தான் விஜி வாபஸ் வாங்கிவிட்டார்” என்று கடுகடுக்கிறார்கள் நெல்லை அ.தி.மு.க-வினர்!

உள்ளாட்சி உய்யலாலா!

கட்சி விதிமீறிய தம்பதியருக்கு சீட்... கடலூர் தி.மு.க கலாட்டா!

கடலூர் மாநகராட்சித் தேர்தலுக்கான தி.மு.க-வின் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியாத நிலையில், அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலும் வெளிவராமலேயே, கட்சித்துண்டுடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் தி.மு.க-வின் கடலூர் நகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி. இதையடுத்து, “நகரச் செயலாளரே கட்சி விதிகளை மீறலாமா?” என்று பொங்கிய உடன்பிறப்புகள், தலைமைக்குப் புகார் கடிதத்தை அனுப்பினார்கள். ஆனால், நடவடிக்கைக்கு பதிலாக கணவன், மனைவி இருவருக்குமே சீட் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தலைமை. ‘‘கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே சீட் கொடுத்துட்டா, மத்த 43 வார்டுகள்ல நகரச் செயலாளர் எப்படித் தேர்தல் பணியைச் செய்வார்?’’ என்று குமுறுகிறார்கள் எதிர்க் கோஷ்டியினர்!

திருப்பூர் மேயர் பதவி... செல்வராஜ் ஆதரவாளருக்கு கல்தா!

கடந்த 30 ஆண்டுகளாக திருப்பூர் மாநகர தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்தியவர் செல்வராஜ். இவர் தற்போது திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் இருக்கிறார். இவர் தனது அரசியல் எதிரியான அமைச்சர் சாமிநாதனுக்கு செக் வைக்க, மேயர் பதவிக்குத் தன் வலதுகரமான மாநகரச் செயலாளர் டி.கே.டி.நாகராஜனைக் களமிறக்கத் தீவிரமாகக் காய்நகர்த்தினார். ஆனால், தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் நாகராஜன் பெயரே இல்லாமல் போனதோடு, செல்வராஜ் ஆதரவாளர்கள் பலருக்கும் சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து, “அண்ணனுக்கு ஸ்கெட்ச் போட நினைச்சாங்க... கடைசியில அவங்களுக்கே ஸ்கெட்ச் போட்டுக்கிட்டாங்க” என்று கலாய்க்கிறார்கள் அமைச்சர் சாமிநாதனின் ஆதரவாளர்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

நெல்லை மேயர் கனவு... ஏமாற்றத்தில் மாலைராஜா!

நெல்லை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு மேயராகும் கனவில் இருந்தார், முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜா. ஆனால், மாலைராஜாவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்தவர், சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததுடன், நீண்டகாலமாக மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருந்த 25 லட்சம் ரூபாயையும் உடனே கட்டினார். இனியாவது, கட்சி மேலிடம் தனக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சென்னைக்குச் சென்று தலைமையிடம் முறையிட்டார். எதுவும் நடக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பியவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதுடன், “மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க வெற்றிக்கு உழைப்பேன்” என்று அறிவித்தார். எது எப்படியோ... நீண்டகாலமாகக் கிடப்பில் கிடந்த வரி பாக்கி கிடைத்ததில் மகிழ்ந்து போயிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism