Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

ஜல்லிக்கட்டுப் புரட்சியின்போது உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி, வேலூர் மாநகராட்சியிலிருக்கும் ஐந்து வார்டுகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது

உள்ளாட்சி உய்யலாலா!

ஜல்லிக்கட்டுப் புரட்சியின்போது உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி, வேலூர் மாநகராட்சியிலிருக்கும் ஐந்து வார்டுகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது

Published:Updated:
உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

“சட்டி நிறைய கறிக்குழம்பு...” துரைமுருகன் ரிப்பீட்டு!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், நகைச்சுவைக் கதைகளைச் சொல்லி அனைவரையும் சிரிக்கவைக்கிறார். பெண்கள் அதிகமாக இருந்தால் மட்டும் ஒரேயொரு கதையை பல இடங்களிலும் ரிப்பீட்டாக எடுத்துவிடுகிறார். ‘‘சட்டி நிறைய கறிக்குழம்புவெப்பீங்க. உங்க வீட்டுக்காரருக்குப் பிடிக்கும்னு சட்டியோட கறியைக் கொட்ட மாட்டீங்க... கிண்ணத்துல ஊத்தி, அகப்பையில அள்ளிப் போடுவீங்க. நல்ல அகப்பையா இருந்தா, நாலு துண்டு சேர்ந்துவரும். இதை ஏன் சொல்றேன்னா, நல்ல அகப்பை மாதிரிதான் எங்க வேட்பாளர்கள். அவங்களுக்கு ஓட்டுப்போட்டா நாலு நல்லதைச் சேர்த்துச் செய்வாங்க’’ என்று சொல்லிவிட்டு அவரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார்!

உள்ளாட்சி உய்யலாலா!

“ஆபீஸ்ல லீவு தரலைங்க!” புலம்பும் ஃபேஸ்புக் வேட்பாளர்கள்...

ஜல்லிக்கட்டுப் புரட்சியின்போது உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி, வேலூர் மாநகராட்சியிலிருக்கும் ஐந்து வார்டுகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது. ஃபேஸ்புக் அரசியலில் மட்டுமே தீவிரமாக இருந்த இந்த வேட்பாளர்கள், சற்றே முன்னேறி உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் அறிமுகக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். இதனால், கடுப்பான அந்தக் கட்சியின் நிர்வாகிகள், “வாட்ஸ்அப்பைத் தாண்டி களத்துக்கு வாங்கப்பா... நாம அடுத்த கட்டத்துக்குப் போக வேணாமா?’’ என்று டோஸ் விட்டதற்கு, ‘‘அண்ணே... ஆபீஸ்ல லீவு தரமாட்டேங்கிறாங்க’’ என்று புலம்பியிருக்கிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

இதென்ன புது காம்பினேஷன்! அ.ம.மு.க-வுடன் கரம்கோத்த காங்கிரஸ்...

தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சியில் வார்டுகளைப் பங்கீடு செய்வதில் தி.மு.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. தி.மு.க மொத்தமுள்ள 18 வார்டுகளிலும் போட்டியிட... காங்கிரஸ் கட்சியினரோ அ.ம.மு.க-வுடன் கரம்கோத்து, ஒன்பது வார்டுகளில் போட்டியிடுகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் இந்தக் கூட்டணி சார்பில் பொதுமக்களிடம் வழங்கப்படும் பிட் நோட்டீஸ்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா, டி.டி.வி.தினகரன் படங்களுடன் இந்திரா, சோனியா, ராகுல் காந்தி, கே.எஸ்.அழகிரி படங்களும் அச்சிடப்பட்டுள்ளன. இதைப் பார்க்கும் பொதுமக்களோ, “தி.மு.க-வும் காங்கிரஸும்தானே கூட்டணி... இதென்ன வித்தியாசமான காம்பினேஷனாக இருக்கிறது...” என்று குழம்புகிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

பின்வாங்கிய முக்கிய நிர்வாகிகள்! தனியாகச் செல்லும் வேட்பாளர்...

நெல்லை மாநகராட்சி 53-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் பெண் வேட்பாளர் தங்கம். தோல்வி பயத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் போட்டியிட மறுத்து ஒதுங்கிக்கொண்ட நிலையில், செலவுசெய்யப் போதுமான பணம் இல்லாதபோதிலும் களமிறங்கியிருக்கிறார் தங்கம். செலவுசெய்ய அவரிடம் பணமில்லை என்பதைக் கட்சியினரும் அறிந்துவைத்திருப்பதால், ‘அவரோட பிரசாரத்துக்குப் போனா காப்பித்தண்ணிகூட கிடைக்காது’ என்கிற நினைப்பில் அவருக்காக வாக்கு சேகரிக்க யாரும் உடன் வருவதில்லை. அதனால் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன் சைக்கிளில் சென்று வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்கிறார் தங்கம். ‘‘பெரிய கட்சியின் வேட்பாளரின் நிலைமையா இப்படி?” என வாக்காளர்களே முணுமுணுக்கிறார்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

நோ ரெஸ்பான்ஸ்... சுயேச்சைகளைக் களமிறக்கிய புத்திச்சந்திரன்!

சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரனின் நீலகிரி மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து, வினோத்திடம் கொடுத்தார் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. இதனால், மனம் வெறுத்துப்போன புத்திச்சந்திரன் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலின்போது மாவட்டச் செயலாளரிடமிருந்து தனக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்தார். ஆனால், மாவட்டச் செயலாளர் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லாததால் கடுப்பானவர் கீழ்குந்தா, பிக்கட்டி, அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளில் அவரின் ஆதரவாளர்கள் பலரை சுயேச்சையாகக் களமிறக்கியிருக்கிறார். அ.தி.மு.க வாக்குகளைச் சிதறடிக்கவும், வெற்றிபெறும் சுயேச்சைகளை வைத்து கட்சியில் இழந்த செல்வாக்கை மீட்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் புத்திச்சந்திரன். ‘‘வெற்றிபெறும் சுயேச்சைகளை அழைத்துக்கொண்டு தலைவரு எதிர்முகாமுக்குத் தாவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்கிறார்கள் அண்ணனின் விழுதுகள்!