Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

நான்தான் பேரூராட்சித் தலைவர்
பிரீமியம் ஸ்டோரி
நான்தான் பேரூராட்சித் தலைவர்

தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குற்றாலம், `தென்னகத்தின் ‘ஸ்பா’ என்று வர்ணிக்கப்படுகிறது

உள்ளாட்சி உய்யலாலா!

தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குற்றாலம், `தென்னகத்தின் ‘ஸ்பா’ என்று வர்ணிக்கப்படுகிறது

Published:Updated:
நான்தான் பேரூராட்சித் தலைவர்
பிரீமியம் ஸ்டோரி
நான்தான் பேரூராட்சித் தலைவர்

போட்டி போட்டு வசூல்... கலக்கத்தில் கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர்கள்!

சர்வதேச சுற்றுலாத்தலம் என்பதால், மாநகராட்சிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி. ஏற்கெனவே நான்கு முறை தொடர்ச்சியாகப் பேரூராட்சியை அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. ‘இம்முறையும் நாங்கள்தான் பொறுப்புக்கு வருவோம்’ என்று அ.தி.மு.க முக்கியப் பிரமுகர் ஒருவர், அனைத்து லாட்ஜ்களிலும் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார். அதேசமயத்தில், ‘ஆளுங்கட்சியாக இருப்பதால் நாங்கள் இம்முறை எப்படியும் பேரூராட்சியைக் கைப்பற்றுவோம்’ என தி.மு.க முக்கிய நிர்வாகி இன்னொரு பக்கம் லாட்ஜ்களில் ஏறி இறங்குகிறாராம். லாட்ஜின் வருமானத்தைப் பொறுத்து 25,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்களாம். ‘நாங்களே கொரோனா லாக்டெளனால் பிசினஸ் இல்லாமல் போய் கடன் வாங்கிவெச்சுருக்கோம். இந்த லட்சணத்தில் ஆளாளுக்கு வந்து எங்களிடம் வசூலிக்கிறார்கள்’ என்று புலம்புகிறார்கள் லாட்ஜ் உரிமையாளர்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

குற்றாலத்தில் அருவியாகக் கொட்டுது பணம்!

தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் குற்றாலம், `தென்னகத்தின் ‘ஸ்பா’ என்று வர்ணிக்கப்படுகிறது. சீஸன் காலங்களில் அருவிகளில் குளித்து மகிழ, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகைதருகிறார்கள். இந்தப் பேரூராட்சியில் எட்டு வார்டுகள் இருக்கின்றன. சுற்றுலா மையம் என்பதால், பராமரிப்புக்காகக் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தப் பேரூராட்சியைக் கைப்பற்ற போட்டி கடுமையாக இருக்கிறது. எட்டு வார்டுகளில், மொத்தம் 17 பேர் போட்டியிடுகிறார்கள். இந்தப் பேரூராட்சியில், வாக்காளர் எண்ணிக்கையும் சொற்பமாகவே உள்ளது. ஒரு வார்டுக்கு 250 வாக்காளர்கள் முதல் 500 பேர் வரை மட்டுமே இருப்பதால், வெற்றியைக் கைப்பற்ற 15,000 ரூபாய் வரை நீட்டுகிறார்களாம். களமிறங்கியிருக்கும் வேட்பாளர்கள், கரன்சியையும் பரிசுப்பொருள்களையும் வாரி வாரி இறைப்பதால், வாக்காளர்களின் காட்டில் அடைமழை என்கிறார்கள்!

‘பழைய பகை...’ பள்ளப்பட்டியை ஒதுக்கிய அண்ணாமலை!

கரூர் மாவட்டத்தில் இதுவரை பேரூராட்சியாகச் செயல்பட்டுவந்த பள்ளப்பட்டி, தற்போது நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் கணிசமான இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க., பள்ளப்பட்டியில் 27 வார்டுகள் இருந்தும் ஒரே ஒரு வார்டில் மட்டுமே போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பள்ளப்பட்டிக்குப் பிரசாரத்துக்குச் சென்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடுப்பான அண்ணாமலை தனது பிரசாரத்தில், ‘பள்ளப்பட்டி ஒன்றும் பாகிஸ்தானில் இல்லை’ என்று பேச, விஷயம் மேலும் சர்ச்சையானது. எனவே, அங்கு பா.ஜ.க-வுக்கு வாக்கு கிடைக்காது என்ற அச்சத்தில், இம்முறை பள்ளப்பட்டி நகராட்சியைத் தவிர்த்திருக்கிறார் அண்ணாமலை. பேருக்கு ஒரே ஒரு வார்டில் மட்டும் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். கரூர் மாவட்டத்திலுள்ள மற்ற பகுதிகளில் பிரசாரம் செய்த அண்ணாமலை, பள்ளப்பட்டி நகராட்சிக்குச் சென்று பிரசாரம் மேற்கொள்ளாமல் தவிர்த்தார். ‘இப்படி தலைமையே ஈகோவோடு முறுக்கிக்கொண்டு நின்றால், பள்ளப்பட்டி மக்களை எப்படிச் சமாதானம் செய்வது?’ என்று அங்கலாய்க்கிறார்கள் பா.ஜ.க-வினர்!

உள்ளாட்சி உய்யலாலா!

“நான்தான் பேரூராட்சித் தலைவர்..!” - அமைச்சர் மஸ்தானின் மகன் ஓப்பன் டாக்…

பேரூராட்சித் தேர்தல் முடிந்ததும், பேரூராட்சித் தலைவர் வேட்பாளரைக் கட்சித் தலைமைதான் அறிவிக்கும். ஆனால் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் 7-வது வார்டில் போட்டியிடும் அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, தன்னிச்சையாகவே தன்னைப் பேரூராட்சித் தலைவர் என்று கூறிக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அதுமட்டுமல்லாமல், “நான் பேரூராட்சித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டால்…” என்று பக்கம் பக்கமாக வாக்குறுதிகள் வேறு கொடுத்துவருகிறாராம். பிரசாரத்தின்போது “பேரூராட்சித் தலைவரே... வருங்கால அமைச்சரே…” என்று குரல் கொடுக்கும் உடன்பிறப்புகளுக்குக் கூடுதல் பேட்டா வழங்கப்படுகிறதாம். “அமைச்சரின் மகன் என்றால், என்ன வேண்டுமானாலும் பேசுவதா?” என்று புலம்புகின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்.

உள்ளாட்சி உய்யலாலா!

வாக்கு கேட்பது சின்னத்துக்கா... வேட்பாளருக்கா? - ‘உதயசூரியன்’ குழப்பத்தில் நீலகிரி வாக்காளர்கள்!

நீலகிரி மாவட்டத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஒருவர், ‘உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று மக்களிடம் கேட்க முடியாத விசித்திரமான சிக்கலில் இருக்கிறார். நெல்லியாளம் நகராட்சியின் 2-வது வார்டில் தி.மு.க தரப்பில் களமிறங்கினார் முரளிதரன். அதே வார்டில் அதிருப்தி வேட்பாளர் உதயசூரியன் என்பவர் சுயேச்சையாகக் களமிறங்கினார். இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் முரளிதரனுக்காக அவரின் ஆதரவாளர்கள், ‘உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கச் சொல்கிறார்களா, வேட்பாளர் உதயசூரியனுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்களா என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்டு முரளிதரன் கடும் அப்செட்டில் இருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism