Published:Updated:

`ஆழ்வார்பேட்டையில் முடிவு; அறிவாலயத்தில் சம்பிரதாயம்!’- விக்கிரவாண்டி தி.மு.க. தொண்டர்கள் அதிருப்தி

``6 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் வேட்பாளர் யார் என்று முடிவெடுத்த பிறகு, அடுத்த நாள் அறிவாலயத்தில் நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் எதற்கு? ” என தி.மு.க தலைமை மீது விமர்சனங்களை அடுக்குகிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்!

Pugazhenthi - Stalin
Pugazhenthi - Stalin

``6 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் வேட்பாளர் யார் என்று முடிவெடுத்த பிறகு அடுத்த நாள் அறிவாலயத்தில் நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் எதற்கு” என தி.மு.க தலைமை மீது விமர்சனங்களை அடுக்குகிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்.

அறிவிப்பு
அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க-வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. தி.மு.க கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அந்த தேர்தல் முடிவுகள் வெளியானபோதே நாங்குநேரி தொகுதியில் மீண்டும் தாங்களே போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது. இதனால் தி.மு.க-வின் கவனமும் விக்கிரவாண்டியைச் சுற்றியே இருந்தது. 2016-ம் ஆண்டு தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற ராதாமணி மறைவினால் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று கடந்த ஒரு மாதமாகவே மாவட்டச் செயலாளர் பொன்முடி யோசித்துவந்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயசந்திரன், மாவட்டப் பொருளாளர் புகழேந்தி ஆகிய இருவரில் ஒருவரை களத்தில் இறக்கத் திட்டமிருந்தார் பொன்முடி. ஆனால், ஜெயசந்திரனைவிட புகழேந்தி, பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். ம.தி.மு.க உருவானபோது பொன்முடிக்கு ஆதரவாக இருந்தவரில் புகழேந்தியும் ஒருவர். தனது நீண்ட நாள் விசுவாசிக்கு இந்த முறை எப்படியும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று பொன்முடி திட்டமிருந்தார்.

Stalin, Durai Murugan, TR Balu
Stalin, Durai Murugan, TR Balu

2011-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி உருவாக்கப்பட்டது. தி.மு.க சார்பில் 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளித் தொகுதியை சேர்ந்தவர்களே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார்கள். இது அந்தத் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளுக்கு அதிருப்தியாக இருந்தது. இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலிலாவது இந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் பொன்முடியிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதற்கு பொன்முடி ``மாவட்டச் செயலாளர் நான்தான் தேர்தல் செலவைப் பார்க்க வேண்டியுள்ளது. சீட் எதிர்பார்க்கும் நீங்கள் யாராவது செலவு செய்ய சக்தியிருந்தால் சீட் கேளுங்கள்” என்று நக்கலாகச் சொன்னதால் அமைதியாகிவிட்டார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

` யார் இந்தப் புகழேந்தி?' - விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி!

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பொன்முடி விழுப்புரத்தில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையின்போது மாவட்டப் பொருளாளர் புகழேந்தியை அழைத்த பொன்முடி ``நீதான் விக்கிரவாண்டியில் போட்டியிடப் போற, முதல் ரவுண்டு பூத் செலவுக்கு இருபது லட்சம் மட்டும் ரெடி பண்ணு” என்று சொல்ல, அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். கட்சித் தலைமை முடிவு செய்யவேண்டிய விஷயத்தை இவர் சொல்கிறார்; விருப்பமனுகூட கட்சியில் பெறவில்லை. அதற்குள் வேட்பாளரை இவர் முடிவு செய்கிறாரே என்று புலம்ப ஆரம்பித்தனர் தி.மு.க நிர்வாகிகள். தி.மு.க தலைமை விருப்பமனுவை பெறுவதற்கு முன்பாகவே வேட்பாளரை முடிவு செய்துவிட்டார் பொன்முடி.

Ponmudi
Ponmudi

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.சம்பத், புகழேந்தி, ஜெயசந்திரன், அன்னியூர் சிவா என்று 10-க்கும் மேற்பட்டோர் 25,000 பணம் கட்டி விருப்பமனு அளித்திருந்தனர். திங்கள் அன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் விக்கிரவாண்டி வேட்பாளர் குறித்தும் தேர்தல் செலவு குறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.பாலு, துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்தனர். பொன்முடி இந்தக் கூட்டத்துக்கு வரும்போதே நிர்வாகிகளிடமிருந்து வசூலித்த முரசொலி சந்தா தொகை 55 லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துவந்து ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் குறித்து பேச்சு எழுந்தபோது, பொன்முடி ``மாவட்டப் பொருளார் புகழேந்தியை நிறுத்தலாம். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மூத்தக் கட்சிக்காரர்” என்று சொல்லியுள்ளார். துரைமுருகன் அப்போது, ``அவர் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர் இல்லையே” என்று சொல்ல, ``பக்கத்துத் தொகுதியாக இருந்தால் என்ன? அவரை வெற்றி பெற வைப்பது என் பொறுப்பு. நீங்கள் வேறு நபர்களை வேட்பாளராக நிறுத்தினால் தேர்தல் வெற்றி தோல்விக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்” என்று செக் வைக்கும் விதத்தில் பேசியுள்ளார். இந்த காரசார விவாதம் முடியும்போதே புகழேந்தியே வேட்பாளர் என்பது முடிவாகிவிட்டது.

தி.மு.க வேட்பாளர் நேர்காணல்
தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

மறுநாள் செவ்வாய்கிழமை காலை ஜனநாயக முறையில் வேட்பாளர் தேர்வை நடத்தும்விதமாக அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. டி.ஆர் பாலு, துரைமுருகன், பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டார்கள். பதிமூன்று பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த புகழேந்தி இரண்டாவது நபராக ஸ்டாலின் இருந்த அறைக்குள் நுழைந்தார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டார். போட்டோகிராபரை அழைத்து புகழேந்தி நேர்காணலில் பங்கேற்கும் போட்டோவை எடுக்கச் சொன்னார் ஸ்டாலின். மொத்தம் பதிமூன்று நபர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் முடிந்த அடுத்த நிமிடம் தலைமைச் செயலாளர் பூச்சி முருகனிடம் அந்த பிரஸ் ரிலீஸை அனுப்பிவிடுங்கள் என்று ஸ்டாலின் சொல்ல, அனைத்து நிர்வாகிகளும் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர்.

அதாவது நேர்காணல் நடைபெறுவதற்கு முன்பாகவே வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யபட்டு அந்தச் செய்தி பத்திரிகைகளுக்கு அளிக்க, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி இருக்கும்போது இதுபோன்று நேர்காணல் நடைபெற்றால் வேட்பாளரை முடிவு செய்தால்கூட சில மணிநேரங்கள் கழித்தே பெயரை அறிவிப்பார்கள். ஆனால், ஸ்டாலின் நேர்காணல் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் பெயரை அறிவித்துள்ளார்.

Stalin
Stalin

``வேட்பாளர் யார் என்பதை மாவட்டச் செயலாளர் மூன்று நாளுக்கு முன்னாலே சொல்லிவிட்டார். உள்ளூரைச் சேர்ந்த ஒருவர்கூட தலைமைக்குத் தெரியவில்லையா? வெளியூரைச் சேர்ந்தவருக்கு கட்சி வாய்ப்பளித்தால் நாங்கள் எதற்கு கட்சியில் இருக்க வேண்டும். தான் சொல்லும் நபரை நிறுத்தாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தலைமையை பொன்முடி மிரட்டுகிறார். அதற்கு தலைவரும் அடிபணிந்து போகிறார். நாடகமாக ஒரு நேர்காணலை நடத்திவிட்டு, அவர்கள் தேர்வு செய்த வேட்பாளரை அறிவித்துவிட்டார்கள்” என்று புலம்புகிறார்கள் விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க உடன்பிறப்புகள்.