Published:Updated:

`ஆதரவு கொடுக்காவிட்டால்...!' - மிரட்டலால் பூச்சிமருந்து குடித்த தி.மலை வார்டு உறுப்பினர்

ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்குப் போட்டியிட்ட அர்ஜுனன் என்பவர், சுயேச்சை வார்டு உறுப்பினர் திரைவாணன் என்பவரிடம் தனக்கு ஆதரவு தரும்படி மிரட்டியதால் திரைவாணன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரைவாணன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரைவாணன்

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டகுளம் கிராம பஞ்சாயத்துத் துணைத் தலைவர் பதவிக்கு, அக்கிராம வார்டு உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவிவந்துள்ளது. 9- வார்டுகள் கொண்ட கொட்டகுளம் கிராமத்தில் 9-வது வார்டு உறுப்பினராக அர்ஜுனன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அர்ஜுனன் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளார்.

திரைவாணன்
திரைவாணன்

5 வார்டு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அர்ஜுனன் வெற்றி பெற முடியும். இந்நிலையில், 1-வது வார்டு உறுப்பினரான திரைவாணன் என்பவர், அர்ஜுனனுக்கு ஆதரவு தரமுடியாது எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த அர்ஜுனன், திரைவாணனை தனி அறைக்கு அழைத்துச் சென்று கொலை மிரட்டல் விட்டதாகச் சொல்லப்படுகிறது. மிரட்டலுக்குப் பயந்துபோன திரைவாணன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதுகுறித்து கொட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். ``அர்ஜுனன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு 5 வார்டு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் திடீரென 1-வது வார்டு உறுப்பினர் திரைவாணன் ஆதரவு அளிக்கமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன், திரைவாணனைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை
மருத்துவமனை

மிரட்டலுக்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அர்ஜுனனுக்கு ஆதரவு அளிக்க திரைவாணனுக்கு முதலில் 1 லட்சம் கொடுக்கப்பட்டது. அதை வாங்கிக்கொண்ட திரைவாணன், பிறகு என்ன நினைத்தார் என்றே தெரியவில்லை 1 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆதரவு அளிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனால்தான் அர்ஜுனன் மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன திரைவாணன் பூச்சு மருந்து குடித்துவிட்டார்” என்றனர்.