Published:Updated:

சி.வி.சண்முகமா... பொன்முடியா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் நேரடியாக மோதிக்கொள்ளும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

தேர்தல்
தேர்தல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். அதனால் இந்தத் தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது, தேர்தல் ஆணையம். அ.தி.மு.க சார்பில் காணை ஒன்றியத்தின் செயலாளர் ஆர்.முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தியும் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்குமான போட்டி என்பதைவிட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குமான பலப்பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது. அதனால் தொகுதிக்குள் பம்பரமாகச் சுழல்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

விவசாயத்தை மையப்படுத்தியிருக்கும் இந்தத் தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படியான தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்புகளோ இல்லை. இந்தத் தொகுதிக்கென்று தனி தீயணைப்பு வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கிறது. அதேபோல விக்கிரவாண்டி மற்றும் காணை ஒன்றியங்களைச் சேர்த்து சுமார் 40 கிராமங்களுக்குப் பயன்படக்கூடிய நந்தன் கால்வாய்த் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மேலும், நல்லாப்பாளையம், பனைமலைப் பேட்டையில் இருந்து விக்கிரவாண்டிக்குச் செல்வதற்குப் பேருந்து வசதிகள் இல்லை. தடையில்லாக் குடிநீர், தரமான சாலைகள் போன்றவை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தே.சிலம்பரசன்

2,23,387 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில், வன்னியர்களின் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராதாமணி அ.தி.மு.க வேட்பாளர் வேலுவைவிட 6,912 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். அப்போது தனித்துப் போட்டியிட்டு 41,428 வாக்குகள் வாங்கிய பா.ம.க தற்போது தங்கள் அணியில் இருப்பதால் வெற்றி உறுதி என்று கணக்குப்போடுகிறது, அ.தி.மு.க.

அதேசமயம், சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் கூடுதல் வாக்குகள் வாங்கியிருந்தார். இதை கவனத்தில் வைத்து காய் நகர்த்தும் அ.தி.மு.க தரப்பு, பா.ம.க மற்றும் தே.மு.தி.க தரப்பில் இருக்கும் அதிருப்தி வாக்குகளையும் எப்படியாவது அறுவடை செய்துவிட வேண்டும் என்று நினைக்கிறது. அதேபோல 2011 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு 78,656 வாக்குகள் பெற்று 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது தங்களுடன் இருப்பதைப் பலமாக நினைக்கிறது தி.மு.க.

``கட்சியில் எங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் 3 மாவட்டச் செயலாளர்களில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. எங்களை அழிக்க நினைக்கும் பொன்முடிக்கு நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?”

தொகுதியில் 45 சதவிகிதம் வன்னியர்கள், 32 சதவிகிதம் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தாலும் வெற்றியைத் தீர்மானிப்பது என்னவோ இதர சமுதாயத்தினர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள்தான். ஆனாலும், கணிசமாக இருக்கும் வன்னியர் சமூக வாக்குகளைப் பெறுவதற்காக அ.தி.மு.க மற்றும் தி.மு.க இருதரப்புமே காய் நகர்த்தி வருகின்றன.

``கட்சியில் எங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் 3 மாவட்டச் செயலாளர்களில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. எங்களை அழிக்க நினைக்கும் பொன்முடிக்கு நாங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?” என்று வெளிப்படையாகவே குமுறுகின்றனர் கட்சிக்குள் இருக்கும் வன்னியர் சமூகத்தினர்.

அமைச்சர் சி.வி.சண்முகம் - மருத்துவர் ராமதாஸ்
அமைச்சர் சி.வி.சண்முகம் - மருத்துவர் ராமதாஸ்
தே.சிலம்பரசன்

அதேசமயம், ``அ.தி.மு.க-வை வெற்றிபெற வைத்தால் உள்ளாட்சித் தேர்தல் பதவிகளில் உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்ற அஸ்திரத்தை பா.ம.க-வினர் மற்றும் வன்னியர்களை நோக்கிச் செலுத்தி, அதிருப்தியை அறுவடை செய்ய காய் நகர்த்தி வருகிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் இதைத் தெரிந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் சமுதாயத்துக்காக இட ஒதுக்கீடு கேட்டுப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமிக்கும் விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் வலைவிரித்து அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு, ``தேர்தலின்போது மட்டும் தி.மு.க கொண்டாடுவதற்கு வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் இழப்பது உறுதி என்ற பயம்தான் ஸ்டாலினை இப்படிப் பேச வைத்திருக்கிறது” என்று மருத்துவர் ராமதாஸ் வெகுண்டெழுந்தது தனிக்கதை.

இது ஒருபுறமிருக்க, `வேலூரில் கடைசி நேரத்தில் வெற்றி நழுவியதைப்போல இந்தத் தேர்தலில் நடந்துவிடக் கூடாது’ என்று முதல்வர் எடப்பாடி, சி.வி.சண்முகத்திடம் கூறிவிட்டதால், அந்தப் பொறுப்பை அப்படியே தன் அண்ணன் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
தே.சிலம்பரசன்

சி.வி.சண்முகம் அரசியலுக்கு வந்தது முதல் நிழல் அமைச்சராகவும், நிஜ அமைச்சராகவும் வலம் வந்துகொண்டிருக்கும் இவர்தான் அ.தி.மு.க-வின் முகமாகத் தொகுதிக்குள் வலம் வருகிறார். பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், சொந்தக் கட்சியின் நிர்வாகிகள் எனக் கட்டம்கட்டி வைட்டமின் ‘ப’வைப் பிரித்துக் கொடுக்கும் இவர், எதிரணியினரை வியூகம் அமைத்து வீழ்த்தும் பணியையும் கச்சிதமாக முடிப்பதால் உற்சாகத்தில் இருக்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

வாக்கு கேட்க உடன் வருபவர்களுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுக்கும் தி.மு.க தரப்பு, பிரியாணிக்கு 100 ரூபாயும், கார்களில் வருபவர்களுக்கு 2,000 ரூபாயும், இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு பெட்ரோல் நிரப்பி 500 ரூபாயும் வழங்குகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
தே.சிலம்பரசன்

அதேசமயம், விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கும் அனைத்துத் திருமண மண்டபங்களையும் இலவச உணவுக்கூடங்களாக மாற்றியிருக்கும் அ.தி.மு.க தரப்பு, ஆரத்தி எடுப்பவர்களுக்கு 100 ரூபாயும், வாக்கு கேட்க வருபவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாயும், கார்களில் வருபவர்களுக்கு 500 ரூபாய் + டீசலுக்கு 2,000 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி 500 ரூபாயும் கொடுக்கிறது.

அ.தி.மு.க-வின் அமைச்சர்கள் பட்டாளம், `நானும் இருக்கிறேன்’ என்று அட்டென்டண்ஸ் மட்டும் போட்டுவிட்டுப் போகிறார்கள், எதிர் தரப்பினரைப்போல இறங்கி வேலை செய்யவில்லை என்று கட்சிக்காரர்கள் மத்தியிலேயே பேச்சு அடிபடுகிறது. அதேபோல வெளிமாவட்டங்களில் இருந்து தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டிருக்கின்றனர்.

ஆனால், ``கட்சிக்காக கணக்கு பார்க்காமல் செலவு செய்கிறோம். பொன்முடி செலவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்களை அகதிகளைப்போல நடத்தாமல் இருந்தால் போதும்” என்று அவர்கள் தலைமையிடம் நொந்துகொண்டிருக்கிறார்களாம். அந்த அளவுக்கு உள்ளூர் நிர்வாகிகள், அவர்களுடன் நெருங்குவதற்குத் தடைபோட்டு வைத்திருக்கிறார் என்கிறார்கள்.

தி.மு.க vs பா.ம.க மோதலாக மாறியிருக்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம்!