Published:Updated:

பாகிஸ்தான் எதிர்ப்பு பி.ஜே.பி... ஷீலா தீக்‌ஷித் இல்லாத காங்கிரஸ்... டெல்லியை வெல்வாரா கெஜ்ரிவால்?

அமித் ஷா, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி
அமித் ஷா, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி

ஆளும்கட்சியான ஆம் ஆத்மி டெல்லியில் தனது ஆளுமையைக் காட்டுவது, தேசிய அரசியலை முன்வைத்து டெல்லி மக்களின் வாக்குகளை பி.ஜே.பி கைப்பற்றுவது, இழந்த செல்வாக்கைக் காங்கிரஸ் மீண்டும் பெறுவது என மும்முனைப் போட்டியாக டெல்லியின் தேர்தல் களம் இருக்கிறது.

தேர்தலுக்குத் தயாராகி வருகிறது நாட்டின் தலைநகரம். வரும் பிப்ரவரி 8-ம் தேதியன்று டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லி மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர்களை 1.43 கோடி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11 அன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய ஆளும்கட்சியான பி.ஜே.பி, டெல்லி மாநில ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மாநிலத்தைக் கோட்டையாகப் பல ஆண்டுகளாக ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சி ஆகிய மூவருக்குமிடையிலான மும்முனைப் போட்டியாக டெல்லி களம் மாறியிருக்கிறது.

டெல்லி சட்டமன்றத்தில் 70 இடங்கள் இருக்கின்றன. 36 இடங்களை வெல்லும் கட்சி, டெல்லி மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றி, ஆட்சி செய்யும். ஆம் ஆத்மி கட்சியினர் ஆட்சியில் இருப்பதால், தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அந்தக் கட்சியின் முகமாகத் தேர்தல் பிரசாரங்களில் முன்னிறுத்தப்படுகிறார். முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத பி.ஜே.பி, ஷீலா தீக்‌ஷித் மறைவுக்குப் பின் தேர்தலைச் சந்திக்கும் காங்கிரஸ் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான பி.ஜே.பி - காங்கிரஸ் போட்டியாகவே, இந்தத் தேர்தல் களம் பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் பி.ஜே.பி - காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளை மையப்படுத்தியே இருந்தன. 1993-ம் ஆண்டில் பி.ஜே.பி டெல்லி சட்டமன்றத்தை வென்றது. அதன் முதல்வராக மதன் லால் குரானா இருந்தார். அதன்பிறகு, 1998-ம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று, ஷீலா தீக்‌ஷித் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவரே 2003-ம் ஆண்டுத் தேர்தலிலும், 2008-ம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றிபெற்றார்.

மத்தியில், காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது, ஊழல் முதலான விவகாரங்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் கட்சி தொடங்கி, டெல்லி தேர்தலை வென்று முதல்வரானார். அவரது ஆம் ஆத்மி கட்சி தனி மெஜாரிட்டியைப் பெற முடியாததால், 49 நாள்களில் ஆட்சி கவிழ்ந்தது. குடியரசுத் தலைவரின் ஆட்சியில் இருந்த டெல்லி சட்டமன்றம், 2015-ம் ஆண்டு மீண்டும் தேர்தலைச் சந்தித்தது. 70 இடங்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில், 67 இடங்களை வென்று வரலாறுகாணாத மெஜாரிட்டியோடு ஆட்சியமைத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த முறை அவர் வென்றால், இது அவருக்கு ஹாட்ரிக்காக அமையும்.

`சர்ச்சைப் பேச்சு; 5 மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு!' - ஜே.என்.யூ மாணவர் சஜ்ரீல் இமாமைத் தேடும் போலீஸ்
சுபாஷ் சோப்ரா
சுபாஷ் சோப்ரா

ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. டெல்லி பி.ஜே.பி தலைவர் மனோஜ் திவாரி, பி.ஜே.பி முதல்வர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறியுள்ளார். ஷீலா தீக்‌ஷித் கடந்த ஆண்டு மறைந்ததையொட்டி, அவர் இல்லாத முதல் தேர்தலைச் சந்திக்கவுள்ளது காங்கிரஸ். அந்தக் கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சுபாஷ் சோப்ரா முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

இந்தியாவின் தலைநகரமாக இருந்தபோதும், டெல்லி மாநிலம் தனியாகப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னைகள் தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. டெல்லி நகரத்தின் மையப் பிரச்னைகளான வீட்டு வசதி, சுத்தமான குடிநீர் முதலானவற்றின் வரிசையில், புதிதாக இணைந்திருக்கிறது டெல்லியின் காற்று மாசுப் பிரச்னை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நிகழும் நகரங்களின் வரிசையில் முதலிடம் வகிக்கிறது டெல்லி. காற்று மாசுப் பிரச்னையோடு தொடர்புடைய மற்றொரு பிரச்னை, வாகன நெரிசல். டெல்லியின் சாலைகளில் நாள் ஒன்றுக்கு மூன்றரை லட்சம் கார்கள் பயணிப்பதாகப் பொதுப்பணித்துறை அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்தப் பிரச்னைகளை மையப்படுத்தியே டெல்லி மக்கள் தேர்தலைச் சந்திக்கின்றனர்.

டெல்லி காற்றுமாசு
டெல்லி காற்றுமாசு

டெல்லி முழுவதும் ஏறத்தாழ 1,700 குடியிருப்புப் பகுதிகள் அங்கீகாரம் பெறாதவை. இவற்றில் ஏறத்தாழ 40 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அங்கீகாரம் பெறாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் எந்நேரம் வேண்டுமானாலும் தங்கள் இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்படலாம். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லி தேர்தலை மனதில் கொண்டு மத்திய பி.ஜே.பி அரசு 'டெல்லி தேசியத் தலைநகர் சட்டம் 2019' என்ற சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி, அங்கீகாரம் பெறாத குடியிருப்புப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் ஆவணங்களைக் காட்டி, இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது இந்தத் தேர்தலில் கவனம் ஈர்க்கும் ஒன்றாக மாறியுள்ளது.

டெல்லி தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள கட்சியாக ஆம் ஆத்மி இருக்கும் எனக் கருத்துகணிப்புகள் கூறுகின்றன. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. தேசிய அளவிலான அரசியலைக் கைவிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மாநிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அரசுப் பள்ளிகளின் தரத்தைக் கூட்டியது, பெண்களுக்கு இலவச பஸ் வசதி அளித்தது, மின்சாரத்தை மானிய விலைக்கு வழங்கியது, ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிக்கும் 'மொஹல்லா க்ளினிக்' என்ற பெயரில் சிறிய அரசு மருத்துவமனைகள் அமைத்தது முதலான திட்டங்கள் கெஜ்ரிவாலுக்கு நற்பெயரை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
`பெண் வதைக்கு மரண தண்டனைதான் தீர்வா!?’ - நிர்பயா வழக்கின் விவாதங்கள்

'கேஜ்ரிவாலின் கேரண்டி கார்ட்' என்ற பெயரில் வெளியாகியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லி மாநிலத்தின் தனி நலன்களை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதாகக் கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. 70 வேட்பாளர்களுள் 8 பெண்கள், 5 முஸ்லிம்கள், 3 சீக்கியர்கள் ஆகியோர் ஆம் ஆத்மியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு வந்தவர்களும் தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் நிலை இப்படியிருக்க, தேசிய அரசியலைப் பேசித் தேர்தலை எதிர்கொள்கிறது பி.ஜே.பி. டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முதலானவற்றில் நிகழும் போராட்டங்கள், தற்போது டெல்லி ஷஹீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் முதலானவை பி.ஜே.பி-யின் கவனத்தைத் தேசியம் நோக்கிக் குவித்துள்ளன.

பிப்ரவரி 8 அன்று, வாக்கு எந்திரத்தில் உங்கள் விரல்கள் அழுத்துவதன் மூலம், உங்கள் கோபத்தை ஷஹீன்பாக் உணர வேண்டும்.
அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்.
கபில் மிஷ்ரா
கபில் மிஷ்ரா

டெல்லி பி.ஜே.பி வேட்பாளர் கபில் மிஷ்ரா, ஷஹீன்பாக் போராட்டத்தைக் குறிப்பிட்டு, "டெல்லியில் பல்வேறு மினி பாகிஸ்தான்கள் உருவாகிவிட்டன" என்றும், பி.ஜே.பி-யை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்ற ரீதியிலும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்ததால், தேர்தல் ஆணையம் கபில் மிஷ்ராவின் பிரசாரத்துக்கு 48 மணி நேரம் தடைவிதித்தது. டெல்லி தேர்தல் பிரசாரங்களில் களமிறங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரக் கூட்டம் ஒன்றில், "பிப்ரவரி 8-ம் தேதியன்று, வாக்கு எந்திரத்தில் உங்கள் விரல்கள் அழுத்துவதன் மூலம், உங்கள் கோபத்தை ஷஹீன்பாக் உணர வேண்டும்" என்று பேசினார். இவ்வாறாக பி.ஜே.பி-யின் பிரசார வியூகம் முழுவதுமாக மத அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான வாக்குகளை அறுவடை செய்ய, அதை எதிர்ப்பவர்களைப் பாகிஸ்தானோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி. அதே வேளையில், பெரிதாக எந்த வியூகமும் இல்லாமல், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது காங்கிரஸ். தேசியக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காக, தேசிய அடையாளத்தையும், மறுபக்கம் டெல்லியின் பிரச்னைகளையும் பேசி வந்தாலும், ஷீலா தீக்‌ஷித் இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய குறையாகவே பார்க்கப்படுகிறது.

மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித்
மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித்

டெல்லி மாநிலத் தேர்தலில் பிரதான வாக்காளர்கள் - பூர்வாஞ்சலிகள், பஞ்சாபிகள், முஸ்லிம்கள் ஆகியோர். கிழக்கு உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட் முதலான பகுதிகளிலிருந்து டெல்லியில் குடியேறியவர்கள் பூர்வாஞ்சலிகள். இவர்களே டெல்லி முழுவதும் ஏறத்தாழ 25 முதல் 30 சதவிகிதம் வரை மக்கள்தொகை உடைய சமூகம். ஷீலா தீக்‌ஷித் இருந்தபோது, பூர்வாஞ்சலிகளின் ஆதரவு முழுவதும் காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. பி.ஜே.பி தொடர்ந்து உயர்சாதிகளின் கட்சியாகவும் பனியாக்களின் கட்சியாகவும் கருதப்பட்டு வருகிறது.

2013-ம் ஆண்டுக்குப் பிறகு, பூர்வாஞ்சலிகளின் ஆதரவு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி பக்கம் திரும்பியது. பூர்வாஞ்சலிகளின் வாக்குகளைப் பெறும் கட்சி வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பூர்வாஞ்சலிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில் இடம் தரும் கட்சிகள் தற்போதைய தேர்தலில் அதிக இடங்களை அளித்திருக்கின்றன. பூர்வாஞ்சலிகளுக்கு அடுத்த இடத்தில் பஞ்சாபிகளின் மக்கள்தொகை இருந்தாலும், மாநிலம் முழுவதும் பரவலாக இருப்பதால், ஆட்சியைத் தீர்மானிக்கும் இடத்தில் பஞ்சாபிகள் இல்லை. எனினும், வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பஞ்சாபி சமூகம் மீது அதிக கவனம் குவிக்கப்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டு, இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, டெல்லிவாழ் சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து பிரசாரங்களில் பேசி வருகிறது பி.ஜே.பி.

பிரதமர் மோடி - அமித் ஷா
பிரதமர் மோடி - அமித் ஷா
வருமான வரிச் சலுகை... கடைசி நேர முதலீடுகள்... அவசரம் வேண்டாம்! #financialplanning #budget2020

டெல்லிவாழ் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் போட்டிபோட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, முஸ்லிம்களின் வாக்குகளைக் குறிவைக்க, ஆம் ஆத்மி கட்சியோ மாநிலப் பிரச்னைகளில் மட்டும் கருத்து சொல்வது என முடிவெடுத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பையும் முஸ்லிம்களுக்கு ஆதரவையும் வெளிப்படையாக அறிவித்தால் ஆம் ஆத்மி கட்சியை மத ரீதியாகத் தாக்க பி.ஜே.பி முயலும் என்பதற்காக இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அமைதிகாப்பதாகக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் முஸ்லிம் முகமான அமானத்துல்லா கான் முஸ்லிம்களிடம் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பைப் பதிவுசெய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

தற்போதைய சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆளும்கட்சியான ஆம் ஆத்மி டெல்லியில் தனது ஆளுமையைக் காட்டுவது, தேசிய அரசியலை முன்வைத்து டெல்லி மக்களின் வாக்குகளை பி.ஜே.பி கைப்பற்றுவது, இழந்த செல்வாக்கைக் காங்கிரஸ் மீண்டும் பெறுவது என மும்முனைப் போட்டியாக டெல்லியின் தேர்தல் களம் இருக்கிறது. மக்களின் முடிவுகளுக்காக, பிப்ரவரி 11 வரை காத்திருக்க வேண்டும்.

பின் செல்ல