Published:Updated:

கட்சியினரின் எதிர்பார்ப்பு... தேர்தல் நடக்கும் குஜராத்துக்குச் செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!

யாத்திரையில் ராகுல் காந்தி

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் குஜராத்தை நோக்கி ராகுல் காந்தி தனது ஜோடோ யாத்திரையைத் திருப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கட்சியினரின் எதிர்பார்ப்பு... தேர்தல் நடக்கும் குஜராத்துக்குச் செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் குஜராத்தை நோக்கி ராகுல் காந்தி தனது ஜோடோ யாத்திரையைத் திருப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
யாத்திரையில் ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவுக்குள் நுழைந்திருக்கிறது. இந்த யாத்திரை தேர்தலைக் கருத்தில்கொண்டு திட்டமிடப்படவில்லை. ஆனால் குஜராத், இமாச்சலப் பிரதேசத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குச் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. அதோடு ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி சூறாவளியாகப் பிரசாரம் செய்துவருகிறது. ஏற்கெனவே டெல்லி, பஞ்சாப்பை காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆம் ஆத்மி பிடுங்கிக்கொண்டது. இப்போது குஜராத்துக்குக் குறிவைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் களத்தில் தலைமை மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால் குஜராத் காங்கிரஸ் கட்சியினர் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் குஜராத்தில் தொடர்ச்சியாகப் பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

கட்சியினரின் எதிர்பார்ப்பு... தேர்தல் நடக்கும் குஜராத்துக்குச் செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!

அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் பாஜக-வைத் தோற்கடிக்க முடியாது என்றும், தங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கூறி முதல்வர் வேட்பாளரையும் அறிவித்து பிரசாரம் செய்துவருகிறார். குஜராத்தில் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலின்போது ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்ததால் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதோடு பிரதமர் பதவியில் மோடி இருந்தபோதும்கூட பாஜக-வால் 100 தொகுதிகளில் வெற்றிபெற முடியவில்லை. கடந்த முறை ராகுல் காந்தியின் கோயில் ஓட்டம் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. அதே போன்று ஜோடோ யாத்திரை குஜராத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த முறை ராகுல் காந்தி குஜராத் பிரசாரத்துக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

திட்டமிட்டபடி ராகுல் காந்தி தனது ஜோடோ யாத்திரையை மகாராஷ்டிராவில் முடித்துக்கொண்டு மத்திய பிரதேசத்துக்குள் செல்ல வேண்டும். அதன்படிதான் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தலையொட்டி ராகுல் காந்தி தனது திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து தனது யாத்திரையை குஜராத்தை நோக்கித் திருப்ப வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி, குஜராத்தை நோக்கி ஜோடோ யாத்திரையைத் திருப்பினால், அது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் எதையாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அது பாஜக-வுக்குத்தான் சாதகமாக அமையும் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஏற்கெனவே குஜராத்துக்கு எதிராகப் பேசியிருப்பதையும் அந்தத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு இமாச்சலப் பிரதேச தேர்தலுக்கும் ராகுல் காந்தி செல்வாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜோடோ யாத்திரையை சில நாள்கள் நிறுத்திவிட்டுத்தான் இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் அளித்திருந்த பேட்டியில், ``ராகுல் காந்தி பிரசாரத்துக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் வருவாரா என்று தெரியவில்லை. குஜராத் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமான மாநிலமாக இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு குஜராத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதமர் மோடியும் பம்பரமாகச் சுழன்று பிரசாரம் செய்துவருகிறார்.

கட்சியினரின் எதிர்பார்ப்பு... தேர்தல் நடக்கும் குஜராத்துக்குச் செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!

தலைவர்களின் வாரிசுகள் ராகுல் யாத்திரையில் பங்கேற்பு:

மகாராஷ்டிராவுக்குள் நுழைந்திருக்கும் ராகுல் காந்தியின் யாத்திரையில் ஆரம்பத்தில் சரத் பவார், உத்தவ் தாக்கரே கலந்து கொள்வதாக இருந்தது. உத்தவ் தாக்கரே ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர். சரத்ப வாரும் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் அவரால் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்சி நிர்வாகிகளுடன் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டார். இதே போன்று உத்தவ் தாக்கரேவுக்கு பதில் அவரின் மகன் ஆதித்ய தாக்கரே நேற்று மாலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டார். இருவரின் யாத்திரையில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். முதன்முறையாக இருவரும் இந்த யாத்திரையில் சந்தித்துக்கொண்டனர்.