Published:Updated:

``பெண்கள் பவருக்கு வரணும்!" - சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட பெண்கள்

பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகிணி பிரசாரம் செய்தபோது...

`` நான் ரோட்ல உட்கார்ந்து மைக் பிடிச்சுப் பேசுறதையும் போராட்டத்துல பங்கெடுக்கிறதையும் பார்த்துட்டு, `குடும்ப பேரை கெடுக்க வந்திருக்கா...'னு பேசினாங்க".

Published:Updated:

``பெண்கள் பவருக்கு வரணும்!" - சட்டமன்றத் தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட பெண்கள்

`` நான் ரோட்ல உட்கார்ந்து மைக் பிடிச்சுப் பேசுறதையும் போராட்டத்துல பங்கெடுக்கிறதையும் பார்த்துட்டு, `குடும்ப பேரை கெடுக்க வந்திருக்கா...'னு பேசினாங்க".

பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகிணி பிரசாரம் செய்தபோது...

தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது பெண் வாக்காளர்கள்தாம். அதிகளவில் இருப்பதால் மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கேற்ப ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி வாக்களிப்பதால் பெண்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களைக் கவரும் வகையில் ஏராளமான வாக்குறுதிகளை ஒவ்வோர் அரசியல் கட்சியும் அள்ளி வழங்குகிறது. பெண்களின் வாக்குகளைக் குறி வைக்கும் அரசியல் கட்சிகள் பெண்களை அதிகளவில் அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டு வருகின்றனவா என்றால் இல்லை.

நாம் தமிழர் கட்சி மட்டுமே 50 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி முன்மாதிரியாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் அரசியலெல்லாம் ஆண்களுக்கான ஏரியா என்று ஒதுங்கிக்கொள்ளும் பெண்களின் மனோபாவம் பெண்களின் அரசியல் பங்கேற்பைக் குறைக்கிறது. இப்படியான சூழலில் சட்ட மன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் சில பெண் வேட்பாளர்களிடம் அவர்களின் அரசியல் அனுபவங்கள் குறித்துப் பேசினோம்...

பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகிணி பிரசாரம் செய்தபோது...
பொன்னுத்தாயை ஆதரித்து நடிகை ரோகிணி பிரசாரம் செய்தபோது...

திருப்பரங்குன்றம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பொன்னுத்தாயிடம் பேசியபோது, ``நாலு பொண்ணுங்க. ரெண்டு பசங்கன்னு எங்க வீட்ல மொத்தம் ஆறு பிள்ளைக. நான்தான் மூத்த பொண்ணு. அப்பா சைக்கிள் கடை வெச்சிருந்தார். அம்மா தீப்பெட்டி தொழிற்சாலையில வேலை பார்த்தாங்க. எங்க வீட்ல யாருக்கும் எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. நான் பதினோறாவது படிச்சப்போ அறிவொளி இயக்கத்தின் மூலமா மாணவர்களுக்குப் பாடம் எடுக்கப் போனேன்.

அப்போதான் இந்திய மாணவர் சங்கத்தின் அறிமுகம் கிடைச்சது. மாணவர்களின் கல்விக் கட்டணங்கள், உரிமைகள் தொடர்பா அவங்க தொடர்ந்து போராடிட்டு வந்தாங்க. உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற அவங்களோட செயல்பாடு என்னை ரொம்பவே ஈர்த்தது. அவங்க கூட இணைஞ்சு நானும் பல போராட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். அதுதான் என்னோட அரசியல் பயணத்துக்கான முதல் அடி.

30 வருஷத்துக்கு முன்னாடி எல்லார் வீட்லயும் கழிப்பறை கிடையாது. பொதுக் கழிப்பிடம்தான். சாத்தூரிலிருந்த பொதுக் கழிப்பிடத்தை இடிச்சுட்டு அந்த இடத்துல மீன் மார்க்கெட் கொண்டு வர முயன்றது சாத்தூர் நகராட்சி நிர்வாகம். அதை எதிர்த்து போராட்டம் நடத்தியது, சிவகாசி, விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இயந்திரத்தை புகுத்த முயற்சி நடந்தபோது அதை எதிர்த்துப் போராடியதுன்னு என்னோட அரசியல் பயணம் வேகமெடுக்க ஆரம்பிச்சுருச்சு.

முதல்ல எங்க வீட்ல கடுமையா எதிர்த்தாங்க. நான் ரோட்ல உட்கார்ந்து மைக் பிடிச்சுப் பேசுறதையும் போராட்டத்துல பங்கெடுக்கிறதையும் பார்த்துட்டு, `குடும்ப பேரை கெடுக்க வந்திருக்கா...'ன்னு பேசினாங்க. ஆனா நான் அதையெல்லாம் பொருட்படுத்தலை. இதுக்கிடையில நான் போலீஸ் தேர்வுல பாஸாகிட்டேன். ஆனா, போஸ்டிங்குக்கு லஞ்சம் கேட்டதால வேணாம்'னு சொல்லிட்டேன். அதுக்கு கோபமாகி எங்கப்பா என்னை அடிச்சிட்டார். போகப்போக எங்களோட போராட்டங்களையெல்லாம் பார்த்து எங்க வீட்லயும் என்னை ஆதரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 1996-ல் சாத்தூர் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினேன்.

பத்மப்ரியா
பத்மப்ரியா

திருமணத்தால அரசியல் வாழ்க்கை பாதிச்சிடக் கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தேன். அதனால இந்திய வாலிபர் சங்கத்திலிருந்த தோழர் கருணாநிதியைத் திருமணம் செஞ்சுகிட்டேன். அவங்க வீட்லயும் நான் அரசியல்ல இருக்குறதுக்கு பயங்கர எதிர்ப்பு இருந்துச்சு. என் கணவர் தொடர்ந்து சப்போர்ட் பண்ணார். எங்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு.

அரசியல் பணி காரணமா நிறைய நாள் அவங்களை பிரிஞ்சிருக்க வேண்டிய சூழல் வரும். அதையெல்லாம் புரிஞ்சுகிட்டு அவங்களும் இருந்துப்பாங்க. என் கணவர், மகன், மகள்னு எல்லாரும் பாரபட்சமில்லாமல் குடும்ப வேலைகளைப் பகிர்ந்துக்குவாங்க. அதுதான் என் சுதந்திரமான அரசியல் செயல்பாட்டுக்கு அடிப்படையான காரணம்.

இந்தப் பயணத்துல திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைச்சதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பண பலம், அதிகார பலம் மிகுந்த முன்னாள் மேயர் விவி.ராஜன் செல்லப்பாவை எதிர்த்து சாதாரண ஆட்டோக்காரருடைய மனைவியான நான் போட்டியிட்டிருக்கேன். ஜெயிச்சுருவேன்னு நிறைய நம்பிக்கை இருக்கு. அந்தளவுக்கு களத்தில் நல்ல வரவேற்பு. `நீ நல்லா பேசுறம்மா... நீதான் ஜெயிப்ப'ன்னு எல்லாரும் சொன்னாங்க. பெண்கள் அரசியலுக்கு வந்தால்தான் சமுதாயத்திலிருக்கிற பிரச்னை பெண்கள் சந்திக்கிற பிரச்னை விலைவாசி உயர்வு இதையெல்லாம் சரி செய்ய முடியும். பெண்கள் அரசியலுக்கு வராம பெண்களுடைய பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்காது" என்றார் தீர்க்கமாக.

அடுத்ததாகப் பேசிய மதுரவாயல் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான பத்மப்ரியா, ``அம்மா, அப்பா, தம்பி, நான் என எங்க வீட்ல மொத்தம் நாலு பேர்தான். அப்பா மளிகைக் கடை வெச்சுருக்கார். அம்மா ஹவுஸ் வொய்ஃப்.

வாக்குசேகரிப்பின்போது பத்மப்ரியா..
வாக்குசேகரிப்பின்போது பத்மப்ரியா..

என்னை மாதிரி சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட அரசியல் பின்புலமில்லாத 25 வயசு பொண்ணுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்கிறதுங்கிறது ரொம்ப பெரிய விஷயம். மக்கள் நீதி மய்யத்தைத் தவிர வேறு எந்தக் கட்சியிலயும் இது சாத்தியம் இல்ல. மூணு நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் ஒரு ஸ்கூல் டீச்சர். இன்னைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் தொகுதி வேட்பாளர். எனக்கே ஆச்சர்யமா இருக்கு.

ஆரம்பத்துல எல்லோரும் என்னைப் பார்த்து, `நீங்கதான் வேட்பாளரா?'ன்னு புருவம் உயர்த்தினாங்க. காரணம், என்னை மாதிரியான ஓர் இளம் பெண் வேட்பாளரை இந்த மக்கள் இதுக்கு முன்பு பார்த்ததில்லை. வாக்கு கேட்டு நான் சந்திச்ச பலரும், `நாங்க வேற கட்சிதான். ஆனால், இந்த முறை எங்க ஓட்டு உனக்குத்தாம்மா'ன்னு சொன்னபோது, ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துச்சு. உண்மையா நாம இந்தச் சமூகத்துக்கு செய்யுற பணிகளை மக்கள் பெரியளவில அங்கீகரிக்கிறாங்க. அதுவும் பல்வேறு தடைகளை உடைச்சுகிட்டு ஒரு பெண் வரும்போது மிகப் பெரிய வரவேற்பு கொடுக்கிறாங்க.

என் தொகுதிக்குள்ள பிரசாரத்துக்காக நான் பயணிச்ச அளவுக்கு, வேறொரு வேட்பாளர் அவங்க தொகுதிக்குள்ள பயணிச்சு பிரசாரம் பண்ணியிருப்பாங்களான்னு தெரியலை. அந்தளவுக்கு பிரசாரத்துக்காகத் தொகுதி முழுக்க வலம் வந்திருக்கேன். மற்ற கட்சியினரைப் போல ஏராளமான நட்சத்திரப் பேச்சாளர்களை அழைச்சுட்டு வந்து நான் பிரசாரம் பண்ணல.

என் தொகுதிக்கு நான்தான் நட்சத்திரம். பெண் வேட்பாளர் என்பதால மக்கள்கிட்ட எளிமையா கனெக்ட் ஆக முடிஞ்சது. பெண்கள் அவங்களோட பிரச்னைகளை எந்தத் தயக்கமும் இல்லாம என்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்ங்கிறதுதான் என் மனசுக்குள்ள இப்போ ஓடிகிட்டிருக்கு. பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாதுங்கிற காலமெல்லாம் மலையேறிடுச்சு. நிறைய பெண்கள் அரசியலுக்கு வரணும். அப்போதான் மாற்றத்தை நிகழ்த்த முடியும்" என்கிறார்.

சிவசங்கரி
சிவசங்கரி

நாம் தமிழர் கட்சியின் தி.நகர் வேட்பாளர் சிவசங்கரி, ``அரசியலெல்லாம் நமக்கு எட்டாக் கனினுன்னு நினைச்சுகிட்டிருந்த நான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கேன். சொந்த ஊர் திருச்சி. 15 வருஷத்துக்கு முன்னாலயே சென்னை வந்துட்டோம். மிடில் கிளாஸ் குடும்பம். அப்பாவும் அம்மாவும் அரசுப் பணியிலிருக்காங்க இதைத் தவிர, எனக்கு வேறெந்தப் பெரிய பின்புலமும் கிடையாது.

பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பத்துப் பிள்ளைகளைப் போல, இன்ஜினீயரிங் படிச்சிட்டு ஐடி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அப்போ அரசியலையெல்லாம் நினைச்சுக்கூட பார்க்கலை. ஆனா, இங்க நடக்கிற பிர்சனைகளைக் கவனிப்பேன். அதைப் பார்த்து வருத்தப்படவும் கோபப்படவும் முடிஞ்சதே தவிர, என்னால வேறெதுவும் செய்ய முடியல. ஏன்னா அப்போ இருந்த அரசியல் களம் அப்படி.

அப்படியான சூழல்லதான், நாம் தமிழர் கட்சி எனக்கு ஒரு மாற்றா தெரிஞ்சது. எனக்கு என்னென்ன கோபங்கள் இருக்கோ அதையெல்லாம் சீமான் அண்ணன் அவருடைய பேச்சில் அப்படியே பிரதிபலிச்சார். அவருடைய பேச்சுகளைத் தொடர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். 2015-ல் இந்தக் கட்சியோட எதிர்காலம் எப்படி இருக்கும்... இவங்க தேர்தல்ல நிப்பாங்களா மாட்டாங்களான்னு எதுவுமே தெரியாது. ஆனா, இவங்க சரியானதைப் பேசுறாங்க. கண்டிப்பா மாற்றத்தைக் கொண்டு வருவாங்கன்னு தோணுச்சு. அதனாலதான் நான் நாம் தமிழர் கட்சியில இணைஞ்சு பயணிக்க ஆரம்பிச்சேன். 2016-ல் எந்தக் கூட்டணியும் இல்லாம தனியா போட்டியிட்டாங்க.

சிவசங்கரி
சிவசங்கரி

அப்போ நான் வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டும்தான். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் சமூகப் பணிகளில் பங்கெடுத்துக்கிறது, பொதுக் கூட்டங்களுக்குப் போறதுன்னு நான் தீவிரமா செயல்பட ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு, தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறையின் தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கினார் சீமான் அண்ணன். அதுவே எனக்கு ஆச்சர்யம்தான். திடீர்னு கூப்பிட்டு இந்தத் தேர்தல்ல வாய்ப்பு கொடுத்துட்டார். என்கிட்ட அவங்க கேட்ட ஒரே கேள்வி, 'தேர்தல்ல நிக்கிறதுல உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையில்ல தங்கச்சி?' என்பது மட்டும்தான்.

நான் வேட்பாளரா வாக்கு கேட்டுப் போனபோது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைச்சது. வண்டியில போய்கிட்டிருந்த ஒரு அக்கா வண்டியை நிறுத்தி செவ்வாழை வாங்கிக்கொடுத்து சாப்பிட்டுட்டு தெம்பா பிரசாரம் பண்ணும்மான்னு சொல்லிட்டுப் போனதாகட்டும்... இப்போ ஒருத்தவங்க போன் பண்ணி, வழக்கமா நான் வேறொரு கட்சிக்குத்தான் ஓட்டு போடுவேன் இந்தமுறை உங்களுக்குப் போட்ருக்கேன். 50 பேரை உங்களுக்கு ஓட்டுப் போட வெச்சிருக்கேன்.

பெண்களுக்கான உரிமைன்னு பேசுற கட்சிகளே பெரியளவுல பெண் வேட்பாளர்களை நிறுத்தாதப்போ உங்க கட்சியில சரி பாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தி ஆச்சர்யப்படுத்தியிருக்கீங்க. பெண்கள் நிறைய பேர் அரசியலுக்கு வரணும்னா இப்படியான மாற்றங்களைக் கொண்டுவரணும்'னு பேசினதாகட்டும் ஒவ்வொரு நாளும் நெகிழ்வான அனுபவமா இருந்துச்சு. பெண்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு எல்லா துறையிலும் பெண்கள் முன்னுக்கு வர்றது மாதிரி அரசியல்லயும் பெண்கள் நிறைய பேர் பவருக்கு வரணும்" என்கிறார்.