Published:Updated:

`800 மாணவிகள்; 3 மணி நேரம்; ஒரு லட்சம் விதைப்பந்துகள்!’- கும்பகோணத்தில் களைகட்டிய திருவிழா

விதைப்பந்துகள்
விதைப்பந்துகள்

கஜா புயலின் தாக்கத்தால் இழந்த ஏராளமான மரங்களுக்கு ஈடாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த விதைப்பந்து திருவிழா.

கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விதைப்பந்து தயாரிக்கும் நிகழ்வை, `தான்தோன்றி' என்ற தன்னார்வ நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தியது. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு மூன்று மணிநேரத்தில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரித்தனர்.

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி

மரங்களை நடுவதால் கிடைக்கும் ஏராளமான பயன்களை மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்ப்பதற்காக, விதைப்பந்துகளைத் தயாரிக்கும் முன்னெடுப்பாக இதை வடிவமைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாட்டுச் சாணம், எரு மண் கலந்த கலவையில் விதைப்பந்துகளைத் தயாரிக்க நாட்டுமர விதைகளான பூவரசு, வாகை, சிலவாகை, கருவாகை, ஆணைகுண்டுமணி, இலுப்பை, பரம்பை, மூங்கில் எனப் பல வகைகள் பயன்படுத்தப்பட்டன.

உருவாக்கப்பட்ட ஒரு லட்சம் விதைப்பந்துகளை 15 நாள்கள் கழித்து கும்பகோணம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வீசப்போவதாக மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விதைப்பந்துகளை குளக்கரை, ஆற்றங்கரை மற்றும் ஏரிக்கரையோரங்களில் வீசப்போவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

விதைப்பந்துகள்
விதைப்பந்துகள்

இந்த நிகழ்வைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக, தான்தோன்றி அமைப்பின் நிறுவனர் கார்த்திக்கிடம் பேசிய போது, ``கஜா புயலின் தாக்கத்தால் இழந்த ஏராளமான மரங்களுக்கு ஈடாக மரங்களை வளர்க்க ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த விதைப்பந்து திருவிழா. அதன்படி அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விதைப்பந்து திருவிழா நடத்தி டெல்டாவில் இழந்த மரங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கினோம்.

பத்து லட்சம் விதைப்பந்துகளை இலக்காக கொண்டு இதுவரை இரண்டு பள்ளிக்கூடங்கள் மற்றும் ஒரு மகளிர் கல்லூரியின் உதவியோடு நான்கு லட்சம் விதைப் பந்துகளைத் தயாரித்துவிட்டோம்.

விதைப் பந்துகள் மூலம் நம்மால் எளிதாக மரம் வளர்க்க இயலும் என்பதை இளம் சமூகம் உணர்ந்துகொண்டது. தங்களைக் காத்துக்கொள்ளப் பல லட்சக்கணக்கான விதைப்பந்துகளைச் செய்து, பல்வேறு இடங்களில் வீசி தமிழகத்தைப் பசுமை நிறைந்த மாநிலமாக மாற்றுவதே எங்கள் இலக்கு" என்று கூறினார்.

தாந்தோன்றி அமைப்பு
தாந்தோன்றி அமைப்பு

தன்னைச் சுற்றியுள்ள சூழலைக் குளிர்ச்சியாக வைப்பதில் தொடங்கி, கரிமங்களைக் கிரகித்து புவி வெப்பமயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவருவது வரையிலான பல்வேறு சேவைகளைச் செய்யும் மரங்களைத் தமிழகத்தில் அதிகரிக்கும் முயற்சிகள் தொடரட்டும்!

அடுத்த கட்டுரைக்கு