Published:Updated:

`செடிகளுக்குத் தீ வைத்த மர்ம நபர்கள்!'- கிராமத்தை பீதியடையவைத்த 10 அடி நீள மலைப்பாம்பு!

க.சுபகுணம்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில், குடியிருப்புப் பகுதிக்குள் வந்த 10 அடி நீள மலைப்பாம்பு, 'ஊர்வனம்' குழுவினரால் மீட்கப்பட்டது.

இந்திய மலைப்பாம்பு
இந்திய மலைப்பாம்பு ( savethesnakes.org )

மதுரை அருகே, நாகமலை புதுக்கோட்டை குடியிருப்புப் பகுதியிலிருந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டு, நேற்று வனப்பகுதியில் விடப்பட்டது. அந்தப் பகுதி வழியாக வைகை ஆறு கடக்கிறது. அதனால், அங்கிருக்கும் நாகமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மலைப்பாம்புகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஓடைக்கு அருகே, யானைத்தட்டை போன்ற செடிகளுக்கு யாரோ தீ வைத்திருக்கிறார்கள். அதனால், உள்ளேயிருந்த பாம்பு வெளியே வந்துவிட்டது.

மீட்கப்பட்ட மலைப்பாம்பு
மீட்கப்பட்ட மலைப்பாம்பு
ஊர்வனம் குழு

பின்னர் அந்தப் பாம்பு, கீழத்தெருவின் குடியிருப்புப் பகுதியின் பக்கமாக வந்துவிட்டதால், மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறை அதிகாரிகள், வன உயிரினங்களைப் பாதுகாக்கும் அமைப்பான ஊர்வனம் குழுவிற்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஊர்வனம் அமைப்பைச் சேர்ந்த சகாதேவன், விஷ்வா, பாஸ்கர், சாம்சன் கிருபாகரன் ஆகியோர் கீழத் தெருவுக்கு விரைந்துசென்று குடியிருப்புக்குள் தஞ்சம் புகுந்த மலைப்பாம்பை மீட்டு, பத்திரமாக வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர். மீட்கப்பட்டது இந்திய மலைப்பாம்பு என்றும் அதன் நீளம் 10 அடிகள் இருந்ததாகவும், அதைப் பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டுவிட்டதாகவும் ஊர்வனம் குழு தெரிவித்தது.

Vikatan