Published:Updated:

கஜா துயரத்திலும் பட்டுப்போகாத 100 ஆண்டுகால ஆலமரம்! -மீண்டும் நிமிர்த்தப் போராடும் ஒரத்தநாடு

ஒரத்தநாட்டில் கஜா புயலில் விழுந்து சாய்ந்துகிடக்கும் 100 ஆண்டு பழைமையான இரண்டு ஆலமரங்களை வேறு இடத்தில் நட்டு அதன் உயிர்களைக் காக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆலமரம்
ஆலமரம்

ஒரத்தநாட்டில் கடந்த வருடம் வீசிய கஜா புயலில் 100 வருடம் பழைமையான இரண்டு ஆலமரங்கள் விழுந்துவிட்டன. ஒரு வருடமாகியும் அவை இப்போதும் உயிரை வேரிலும் கிளையிலும் பிடித்துக்கொண்டு துளிர் விட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த மரங்களை மீட்டு வேறு இடத்தில் நட்டு அதன் உயிர்களைக் காக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆலமரம்
ஆலமரம்

ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே செயல்பட்டு வருகிறது சார்பதிவாளர் அலுவலகம். இந்த வளாகத்தின் முன்புறமும் பின்புறமும் 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரங்கள் இருந்தன. அவை கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் வேரோடு சாய்ந்துவிட்டன. இந்தநிலையில் ஒரு வருடமாகவே உயிரைப் பிடித்துக்கொண்டு துளிர்த்துக்கிடக்கிறது. மாவட்ட நிர்வாகமும் வனத்துறை நிர்வாகமும் இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த ஆலமரங்களை அரசுக்குச் சொந்தமான ஒரு பொது இடத்தில் நட்டு மரங்களின் உயிர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``ஒரத்தநாடு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது சார்பதிவாளர் அலுவலகம். இதன் வளாகத்துக்குள் 100 ஆண்டுகள் பழைமையான இரண்டு ஆலமரங்கள் பரந்து விரிந்து குடை போல் இருந்து நிழல் தந்துகொண்டிருந்தன. அதிலும் ஒரு மரத்தின் அகலம் மட்டும் 30 அடியும் அடிப்பகுதி சுமார் 50 அடிக்கும் குறையாமல் இருக்கும். இந்த மரங்கள்தான் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் பலருக்கு உட்காருவதற்கும் இளைப்பாருவதற்கும் உதவி வந்தன.

ஆலமரம்
ஆலமரம்

அத்துடன் இரண்டு சக்கர வானகங்கள் நிறுத்துவதற்கும் உதவின. பத்திர எழுத்தர்கள் பலர் மரத்தின் அடியில் அதன் நிழலில் அமர்ந்துகொண்டு பத்திரம் எழுதி வந்தனர். பலர் அந்த மரத்தால் பிழைத்து வந்தனர். பிரமாண்டமாகக் காட்சி தந்த அந்த ஆலமரங்கள், ஒரத்தநாட்டின் அழகைக் கூட்டியதுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் ஒருவித கம்பீரத்தை கொடுத்தன. 50-க்கும் மேற்பட்ட விழுதுகளுடன் இளவரசனை போல் இருந்தன அந்த மரங்கள்.

கஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா? #DoubtOfCommonMan #OneYearOfGaja

இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி நள்ளிரவு வீசிய கஜா புயலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த இரண்டு ஆலமரங்களும் வேரோடு சாய்ந்தன. கஜா புயல் சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றாலும் ஆலமரங்கள் விழுந்ததை நினைத்துப் பலர் கண்ணீர்விட்டனர். அதன் பிறகு ஆலமரங்களின் கிளைகள் மற்றும் விழுதுகளை கஷ்டப்பட்டு வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினர்.

ஆலமரம்
ஆலமரம்

அந்தச் சமயத்திலேயே மரத்தை அடியுடன் அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நடலாம் எனப் பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் அதைச் செய்யவே இல்லை. இப்போது விழுந்த இடத்திலேயே மரங்கள் கிடக்கின்றன. கஜா புயல் அடித்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், இப்போதும் வேர் பகுதிகள் நிலத்தின் அடியில் இல்லை என்றாலும் மரம் பட்டுப்போகாமல் துளிர்த்துக்கொண்டே இருக்கின்றன. அந்த இடத்தில் புல் பூண்டு செடிகளும் முளைத்து பசுமையாக இருக்கின்றன. சொல்லப்போனால் நம்மை யாராவது காப்பாற்ற மாட்டார்களா, நாம் நிமிர்ந்துவிட மாட்டோமா என ஏங்கி தன் உயிரைப் பிடித்துக்கொண்டு பூமித்தாயின் மடியில் சாய்ந்து கிடக்கிறது.

ஒரு பெரிய ஆலமரம் உருவாக வேண்டுமென்றால் சுமார் 20 வருடங்களாவது ஆகும். ஆனால், இந்த ஆலமரங்கள் தலைமுறைகளைக் கடந்து இருந்தன. இப்போது எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. பல இடங்களில் மரங்களை வேருடன் பிடிங்கி வேறு இடத்தில் வைத்து பிழைக்க வைத்துள்ளதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் இதை வெறும் மரம்தானே என்று நினைக்காமல் நம்முடைய அடையாளம், பாரம்பர்யம் என்பதையும் உணர்ந்து அரசு உடனடியாக இந்த மரங்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலமரம்
ஆலமரம்

ஒரத்தநாட்டில் அரசு பொது இடங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒரு இடத்தைத் தேர்வு செய்து மரங்களின் நிலையையும் ஆய்வு செய்து இயந்திரங்களைக் கொண்டு அப்படியே தூக்கிச் சென்று நட வேண்டும். அப்படிச் செய்தால் மீண்டும் அந்த ஆலமரங்கள் உயிர் பிழைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதுபோன்ற ஒரு மரம் உருவாக நூறு வருடம் காத்திருக்க வேண்டும். உருவாகி நூறு வருடங்கள் ஆன இந்த மரத்தைக் காப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எளிது. எனவே, இரண்டு மரங்களின் உயிர்களைக் காக்க அதிகாரிகள் இப்போதே களத்தில் இறங்க வேண்டும்" என்கின்றனர் வேதனையான குரலில்.