Published:Updated:

`ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் பனிப்படலங்கள்!' - இயற்கையின் எச்சரிக்கை மணி

பனியானது கோடைக்காலத்தில் உருகுவதும், குளிர்காலத்தில் உறைவதும் இயல்பாக நடந்து வரும் ஒன்றுதான். ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்னால் இயல்புக்கு மாறாகப் பனிப் படலங்கள் உருக ஆரம்பித்தன.

ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் அளவு பனிப்படலங்கள்
ஒரே நாளில் உருகிய 11 பில்லியன் டன் அளவு பனிப்படலங்கள் ( AP )

காலநிலை மாற்றத்தைக் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் என நேரடியாகவே எச்சரிக்கத் தொடங்கியிருக்கிறது இயற்கை. மனிதனிடம் நீண்ட காலமாக இருக்கும் பிரச்னை ஒன்று உண்டு. இயற்கையின் மொழிகள் அவனுக்குப் புரிவதில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்த போது மனிதனுக்கும் இயற்கைக்கும் இருந்த பிணைப்பு இப்போது முற்றிலும் தொடர்பில்லாமல் போய் விட்டது.

``பழங்குடிகளால் காலநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும்!" - சர்வதேச காலநிலை மாற்றக் குழு

மனிதர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ இயற்கை எப்போதும் எச்சரிக்கை செய்து கொண்டுதானிருக்கிறது. தற்சமயம் கிரீன்லாந்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் இதுபோன்ற ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

`ஒரே நாளில் இவ்வளவு பனி உருகியதில்லை' அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்

'ஒரே நாளில் இவ்வளவு பனி உருகியதில்லை '
'ஒரே நாளில் இவ்வளவு பனி உருகியதில்லை '
AP

உலகிலிருக்கும் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று கிரீன்லாந்து. இதன் பரப்பளவில் 82 சதவிகிதம் அளவு பனிதான். பனியானது கோடைக்காலத்தில் உருகுவதும் குளிர்காலத்தில் உறைவதும் இயல்பாக நடந்து வரும் ஒன்றுதான். ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன்னால் இயல்புக்கு மாறாகப் பனிப் படலங்கள் உருக ஆரம்பித்தன.

Vikatan

அதற்குக் காரணம் தற்சமயம் கிரீன்லாந்தில் மையம் கொண்டிருக்கும் வெப்ப அலைதான். கடந்த மாதம் முழுக்கவே ஐரோப்பாவில் வானிலை என்பது இயல்பாக இல்லை. தாறுமாறாக அதிகரித்த வெப்பநிலையால் மக்கள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாயினர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. உச்சக்கட்டமாக பிரான்சிலும் ஜெர்மனியிலும் இயங்கிக் கொண்டிருந்த அணு உலைகளை நிறுத்தி வைக்கும் நிலைமை வரை சென்றது. அதனால் மின்சார உற்பத்தியும் குறைந்தது.

கிரீன்லாந்து பனி
கிரீன்லாந்து பனி
AP

ஐரோப்பா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய வெப்ப அலை அடுத்ததாகத் தாக்கிய இடம் கிரீன்லாந்து. அதன் காரணமாகவே பனிப்படலங்கள் உருகுவது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் கடந்த புதன்கிழமையன்று ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டன் அளவுக்கு பனிப்படலங்கள் உருகியிருக்கின்றன.

இது 4.4 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பப் போதுமானதாக இருக்கும். ஒரே நேரத்தில் பனி அதிகளவில் உருகுவதால் நீரானது காட்டாற்று வெள்ளம் போல கடலில் கலக்கிறது. அதை ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட அது உலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

`கடல் மட்டம் உயரும் அபாயம்'

நிச்சயமாக இதன் பாதிப்பு என்பது உலகம் முழுக்க இருக்கப் போகிறது. இதனால் கடல்நீர் மட்டம் உயரும். கிரீன்லாந்தில் ஜூலை மாதம் முழுவதும் கணக்கிட்டால் இதுபோல உருகிய பனியின் அளவு கிட்டத்தட்ட 197 பில்லியன் டன்களாக இருக்கலாம் என்கிறார் ரூத் மோட்ரம். டேனிஷ் வானிலை ஆராய்ச்சி அமைப்பைச் சேர்ந்த இவர் ஆய்வு செய்து வருபவர். பனிப்படலங்கள் உருவாவதால் கடல் நீர்மட்டத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்குகிறார்.

'ஐஸ்லாந்தில் உருகும் ஒவ்வொரு 100 டன் பனியும் கடல் மட்டத்தை 0.01 இன்ச் வரை உயர்த்தும். இதே நிலை தொடர்ந்தால் 2100-ம் ஆண்டு கடல் நீர் மட்டம் 2 முதல் 13 இன்ச் வரை உயரும். ஒரு வேளை கிரீன்லாந்தில் இருக்கும் ஒட்டுமொத்த பனியும் உருகினால் கடல் நீர் மட்டம் 23 அடிகள் வரை உயரும். ஆனால், இதுபோல் நிகழ பல நூற்றாண்டுகள் ஆகும் என்பதே இப்போதைக்கு ஆறுதல் தரும் ஒரு விஷயம்.

`கால நிலை மாற்றம்தான் முக்கிய காரணம்'

தற்போது ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்திய வெப்ப அலை வட அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருக்கிறது. அதுவே நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகவும் காரணமாக அமைந்தது. சமீபகாலமாக பூமியின் வடக்கு அரைகோளப்பகுதிகளில் குறிப்பாக ரஷ்யாவில் காட்டுத்தீ அதிகளவில் ஏற்படுகிறது. அதற்கு வழக்கத்துக்கு மாறான வெப்ப அலையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

"இது போன்ற வெப்ப அலைகளும் வானிலை மாற்றங்களும் இயற்கையில் நடக்கும் இயல்பான ஒரு நிகழ்வுதான். ஆனால் அதற்கான இடைவெளி குறைந்ததற்கும் தாக்கம் அதிகரித்திருப்பதற்கும் காரணம் புவி வெப்பமயமாதல்தான் என்பதையே ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன" என்கிறார் ஐ.நா சபையின் வானிலை ஆய்வு மையத்தின் மைக் ஸ்பாரோவ்.

Vikatan

இயற்கையின் முன்னெச்சரிக்கைகளில் ஒன்றுதான் கிரீன்லாந்தில் தற்போது நடந்த பனிப்படலங்கள் உருக ஆரம்பித்த நிகழ்வும். அதைப் புரிந்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு இப்போது இருக்கிறது. மறுத்தால் இதை விடவும் தீவிரமான பாதிப்புகளை எதிர்காலத்தில் உலகம் எதிர்நோக்க வேண்டியிருக்கலாம்.