Published:Updated:

``சுற்றுலாதலமாக்காமல் இருப்பதே காடுகளுக்கு நல்லது!" சொல்கிறார் வனவிலங்குகளின் தோழி

``சுற்றுலாதலமாக்காமல் இருப்பதே காடுகளுக்கு நல்லது!" சொல்கிறார் வனவிலங்குகளின் தோழி
``சுற்றுலாதலமாக்காமல் இருப்பதே காடுகளுக்கு நல்லது!" சொல்கிறார் வனவிலங்குகளின் தோழி

``சுற்றுலாதலமாக்காமல் இருப்பதே காடுகளுக்கு நல்லது!" சொல்கிறார் வனவிலங்குகளின் தோழி

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற சென்னை, கோவை, சேலத்தைச் சேர்ந்த 37 பேர், அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். அதில், 10 பேர் அந்தக் காட்டுத்தீயில் சிக்கிப் பலியாயினர். மீதியிருந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்த 27 பேரில், தற்போதுவரை சிகிச்சை பலனளிக்காமல் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீதான் கடந்த வாரம் முதல் இன்றுவரை பேசும் பொருளாக இருக்கிறது. மலையேற்றத்துக்கு ஒருங்கிணைத்தவர்கள் முறையான அனுமதியின்றி காட்டுக்குள் சென்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இப்போது அரசாங்கமும் காட்டுக்குள் செல்வதற்கும், மலையேற்றத்துக்கும் தற்காலித் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ‘ஒளி விழிப்புஉணர்வு இயக்க’த்தின் தலைவரும் முனைவருமான கற்பகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இன்று எல்லோரும் காடுகளுக்குள் செல்வது ஏன்?”

“காடுகள் என்பது ஓர் அரண். அதை நாம் பாதுகாக்க வேண்டுமே தவிர, சுற்றுலாவுக்காகத் திறந்துவைப்பது மிகமிகத் தவறான ஒன்று. காலங்காலமாக நம் முன்னோர்கள் காடுகளுக்குள் அமைந்திருக்கும் கோயில்களுக்குள்ளும் வழிபடச் சென்றுள்ளனர். அப்படிச் செல்லும்போதெல்லாம் அவர்கள் செல்போன்களையோ... பிளாஸ்டிக் பொருள்களையோ பயன்படுத்தியது இல்லை. அங்கு செல்பவர்களும் சத்தம் எழுப்பாமல், அமைதியாகச் சென்று வழிபட்டுவிட்டு வந்தனர். மக்கள்தொகையும் குறைவாக இருந்த காரணத்தினால், அது சாத்தியமானது. ஆனால், இப்போது மலையில் இருக்கும் கோயில்களுக்குச் செல்வதும் ஆடம்பரமாக மாறிவிட்டது”. 

“எதற்காகக் காடுகளுக்குள் செல்கிறார்கள்?”

“மலையேறச் செல்பவர்கள் எல்லோரும் காடுகள் மீதும், மரங்கள் மீதும் ஆர்வம்கொண்டு மட்டுமே செல்கிறார்களா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. வார இறுதிகளைச் செலவழிக்கக் காடுகளுக்குச் செல்வது இப்போது ஒரு வழக்கமாக மாறிவருகிறது. ஏற்கெனவே, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல இடங்களை அழித்துவிட்டனர். மாமல்லபுரத்துச் சிற்பங்களின் மேல் கிறுக்கியும் சேதப்படுத்தியும் உள்ளனர். கோயில்கள், தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களையும் பாழாக்கியுள்ளனர். இப்போது மிச்சம் இருப்பது காடுகள் மட்டுமே”. 

“உங்களுடைய மலையேற்றப் பயணம் குறித்து?”

“எங்களது குழுவினரும் தொடர்ந்து மலையேற்றம் போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் பயணம் அங்கிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கும், மிருகங்களைக் கணக்கெடுப்பதற்கும் மட்டும்தான். செல்போன், பிளாஸ்டிக் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிட்டுத்தான் நாங்கள் செல்வோம். மாணவர்களை அழைத்துச் சென்றாலும், ஐந்துக்கும் குறைவான நபர்களை மட்டுமே அழைத்துச் செல்வோம். அதுமட்டுமல்லாமல், கட்டுக்குள் செல்லும்போது, வனக் காவலர்கள் எங்களுடன் இருப்பார்கள்”. 

“காட்டில் பாதுகாப்பு மற்றும் வனத்துறையினர் செயல்பாடு எப்படியிருக்கும்?”

“வனம் என்பது மிகப்பெரிய பகுதி. அதற்குப் பணியமர்த்தப்படும் காவலர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. காட்டைச் சுற்றி ஒருசில பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்படுகிறது. அந்த வழியில் அனுமதிக்கப்படாதவர்கள், வேறொரு வழியில் காட்டுக்குள் செல்கிறார்கள். இப்படிச் சென்றால், ஆபத்து நேரும் காலத்திலும் காப்பாற்ற யாரும் இருக்கப்போவதில்லை என்பதை மறந்து விடுகிறார்கள். ஏற்கெனவே, காட்டுத் தீ இருந்த பகுதிக்குச் சென்றது இவர்களின் தவறு. 

“காட்டுத் தீ ஏற்படுவது பற்றி?”

“மழை இல்லாததாலும், வெயில் அதிகமாக இருப்பதாலும், மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், காடுகளுக்குள் செல்லும் மக்களில் சிலர் புகை பிடிப்பது, சமைப்பது எனத் தீயச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன்மூலமும் காட்டுத் தீ பரவுகிறது. இவர்களை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினாலும், அவர்களுக்குத் தெரியாமல் இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள்”. 

“மலையேற்றம் செல்பவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா?”

“நிறைய பேர் பின்பற்றுவதே இல்லை. 20 பேர் மட்டும்தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தும் 30 அல்லது 40 பேருக்கு மேல் செல்கின்றனர். மலையேற்றக் குழுக்கள் அனைத்தும் பதிவுசெய்து செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறிதான். மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்பவர்களிடமும் முறையான அனுமதி இருக்கிறதா என்று மலையேறுபவர்களும் கேட்பதில்லை. ஒரு குழு சென்று வந்து, சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிரும்போது, அதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு அங்கு செல்கிறார்கள்”.

“காட்டுக்குள் இருக்கும் மிருகங்கள் பற்றி?”

“இப்போது ஏற்பட்டிருக்கும் விபத்து (குரங்கணி), காட்டுத் தீயால் ஏற்பட்டது. அது எதிர்பாராத ஒன்று. ஆனால், விலங்குகளின் இடமான காட்டுக்கு மக்கள் செல்வதால், அவர்களைத் தாக்கக்கூடும். காட்டுக்குள் வருபவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா, சுற்றுலாப்பயணிகளா என்று அவை பார்க்காது. அவற்றைத் தொந்தரவு செய்வதாகத் தெரிந்தால், அவை நிச்சயம் நம்மைத் தாக்கும்”.

“நீங்கள் சொல்லும் காரணங்களால் இனி, மலைகளுக்கும் காடுகளுக்கும் செல்வது தவறா... அப்படிச் செல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?”

“ஏற்கெனவே, காட்டுக்குள் செல்லும்போது விதிமுறைகளை மீறினால் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அது பெரும் அளவில் யாரையும் விழிப்புஉணர்வோடு செயல்பட வைக்கவில்லை. இப்போதைக்குக் காட்டுப் பகுதிக்குள் செல்ல   அரசாங்கத்தால் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், எதிர்காலத்தில் அனுமதி வழங்குவதாக இருந்தால், என்னென்ன மாதிரியான விதிமுறைகளும், அபராதமும் வழங்கப்பட வேண்டும் என்பதைப் பல துறையினருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதன்பிறகு, பதிவு செய்யப்பட்ட, உரிய அனுமதி பெற்று செல்லும் ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். காடுகளுக்குள் செல்பவர்களுக்கு உரிய பயிற்சிகளும் வழங்க வேண்டியது அவசியம்”. 

“காடுகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?”

“காடுகளைச் சுற்றுலாத்தலமாக மாற்றாமல் இருப்பதுதான் காடுகளுக்கும் மிருகங்களுக்கும் நல்லது”.

அடுத்த கட்டுரைக்கு