Published:Updated:

64 பழங்குடிகளும்...நில அபகரிப்பும்! - வேதாந்தாக்கள் விலைபேசிய கதை!!

64 பழங்குடிகளும்...நில அபகரிப்பும்! - வேதாந்தாக்கள் விலைபேசிய கதை!!
64 பழங்குடிகளும்...நில அபகரிப்பும்! - வேதாந்தாக்கள் விலைபேசிய கதை!!

64 பழங்குடிகளும்...நில அபகரிப்பும்! - வேதாந்தாக்கள் விலைபேசிய கதை!!

ஒரு காடு உருவாக அடிப்படையாக அங்கே ஒரு நீர்நிலை தேவைப்படுகிறது. அதுவே காடுகள் அழிக்கப்படுவதற்கு...?

கடந்த 25 வருடங்களில் மட்டும் ஆயிரம் கால்பந்து மைதானங்கள் அளவு வீதம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு காடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..இந்திய அளவில் எடுத்துக்கொண்டால், கடந்த 2014 முதல் 2017-ஆம் ஆண்டுவரை அழிக்கப்பட்ட காடுகளின் எண்ணிக்கை 63 கால்பந்து மைதானங்களின் அளவு எனலாம். ஒரு கால்பந்து மைதானத்தின் சராசரி அளவு 1.32 ஏக்கர் (தகவல்: தி குவிண்ட்).

காடுகளைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் வளர்ச்சி என்கிற பெயரிலேயே அழிக்கப்படுகின்றன. கிழக்குத்தொடர்ச்சி மலைகளையும், அதன் காடுகளையும் நீங்கள் வரைபடங்களில் கவனித்தது உண்டா?. 1930-ல் தொடங்கி 2013-ஆம் ஆண்டுவரை அந்தக் காடுகளின்  பரப்பளவு சுருங்கியதற்கான சாட்சியங்களை நீங்கள் கீழே இருக்கும் வரைபடங்களில் காணலாம்.

(நன்றி:தொலைதூர உணர்திறன் மற்றும் விண்வெளித் தகவல் அறிவியல் சர்வதேசக் காப்பகம், ஹைதராபாத்) 

காடுகள் வறுமைக்கோடுகளுக்கான தீர்வாக அழிக்கப்படுகின்றன. ஆனால், நமக்கு வறுமைக்கோடாகத் தெரிவதுதான் அவர்களின் வாழ்க்கை. அப்படி அழிக்கப்பட்டுவரும் ஒரு காட்டின் கதை இது.

அப்புறப்படுத்தப்பட்ட கோந்த் குடிகள்!

மொத்தம் 64 வகையான பழங்குடிகள் வசிக்கும் நாட்டின் மிக அடர்த்தியான கிழக்கு ஒடிசா காட்டுப்பகுதி அது. சரியாக 2002-ஆம் வருடத்தில்தான் அங்கே அந்தப் பிரச்னையும் தொடங்கியது. ஏற்கெனவே, அங்கே 'இம்பா க்ரோம்' தொழிற்சாலை, 'நால்கோட்டி' பாக்ஸைட் சுரங்கத் தொழிற்சாலைகள் என மலைகளின் மீது இயந்திரங்களும் கட்டடங்களும் இயல்பாக நிரம்பி வழிந்துகொண்டிருந்த சூழலில்தான், நியம்மாலி (மலை என்பது ஒடிசாவில் மாலி எனப்படுகிறது) மலைப்பகுதியில் வேதாந்தா நிறுவனம் பாக்சைட் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பதற்காக அடியெடுத்து வைத்தது. நியம்மாலி மலைப்பகுதியை ஒட்டிதான் 'கோந்த்' எனப்படும் ஆதி பழங்குடியின மக்கள் வசித்து வந்தார்கள். இவர்கள், ஒரு சினைத்தேள் இறந்தால்கூட அதற்காகக் கண்ணீர் விடும் கருணை உடையவர்கள். வேதாந்தா வந்தபோது, அவர்களுடைய கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். "எங்கள் வயிற்றுக்கான ஒருநாள் சாப்பாட்டுச் செலவை ஒன்றரை ரூபாய்க்குள் நாங்கள் முடித்துவிடுவோம். நாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் எங்கள் பசிக்குப் போதுமானதாக இருக்கிறது. எங்களது ஆடு, மாடுகள் எங்களுக்கான பொருளாதாரச் செலவை ஈட்டுகின்றன. இதையும் மீறி எங்களுக்கு என்ன வறுமைக்கோடு இருந்துவிடப் போகிறது?" என்பதுதான்.

'குட்டியா கோந்த் மற்றும் டோங்கிரியா கோந்த்' என இரண்டு வகையான கோந்த் பழங்குடிகள் இருந்த அந்த மலைப்பகுதி, முழுவதும் பாக்ஸைட்டால் உருவானது என்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆர்.சந்தான கோபாலன். அவர், "அந்த மலைப்பகுதியில் 1,000 அடிக்கு மேல் நல்ல பாக்ஸைட் கிடைக்கும். அந்த மலையில் தண்ணீர் தேங்காது. ஒரு புல்பூண்டுகூட அந்த மலையில் முளைக்காது. அங்கு மக்கள் யாரும் வசிக்க முடியாது என்பதால் மலையடிவாரத்தில்தான் குட்டியா கோந்த் மற்றும் டோங்கிரியா கோந்த் பழங்குடிகள் வசித்து வந்தார்கள். வேதாந்தா நிறுவனத்துக்கு அங்கிருந்த பெரும்பான்மையான குட்டியா கோந்த் பழங்குடி மக்களை அப்புறப்படுத்துவது எளிதாக இருந்தது. அவர்களுக்கான நிவாரணத்தையும் கொடுத்தார்கள். ஆனால், டோங்கிரியா கோந்த் இன மக்கள், 'அந்த மலை தங்களுடைய வழிபாட்டுப் பகுதி' என்று தெரிவித்து அங்கிருந்து போக மறுத்தார்கள். மேலும் குட்டியா கோந்த் பழங்குடிகளுக்குத் தந்தது போலவே, தங்களுக்கும் நிவாரணம் கேட்டார்கள். வேதாந்தா நிறுவனமும் அந்தப் பகுதியை விட்டுத் தருவதாகத் தெரியவில்லை. இல்லையென்றால் அருகில் இருக்கும் சம்பல்மாலி பகுதியில் அவர்கள் பாக்ஸைட் தாது எடுப்பதாக இருந்தார்கள். ஆனால், சம்பல்மாலி காட்டுக்கு மிகவும் உள்ளே இருந்தது. அங்கே சுரங்கத் தொழிற்சாலை அமைக்கும் நிலையில், இயற்கை இழப்பீடுகள் அதிகம் ஏற்படும். நியம்மாலி காட்டுக்கு வெளியே இருந்ததால் இழப்பு அவ்வளவாக இருக்காது என்பது அவர்கள் நிலைப்பாடு.

மேலும் அங்கேயே சுரங்க வேலைக்கான அனுமதி அளித்தால் உற்பத்திச் செலவும் மிகவும் குறையும். ஆனால், மக்கள் தடுத்தார்கள். பிரச்னை உச்ச நீதிமன்றம்வரை சென்றது. நியம்மாலி போராட்டம் நியம்கிரிப் போராட்டமானது. உச்ச நீதிமன்றம் வழிநடத்த மக்களே முன்நின்று வேதாந்தாவின் சுரங்கவேலைகளைத் தடுத்து நிறுத்தினார்கள்.

பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. சுரங்கம் அமைக்கவில்லை என்றாலும், பாக்ஸைட்டில் இருந்து பெறப்படும் அலுமினியத்துக்கான சுத்திகரிப்பு நிலையம் அங்கேதான் நியம்கிரி மலை அடிவாரத்தில் லாஞ்ச்கர் என்னும் இடத்தில் இயங்கிவந்தது. அங்கே பழங்குடிகளுக்கான வேலைவாய்ப்பைத் தருவதாக வேதாந்தா சொல்லியிருந்தது. ஆனால், அங்கு வேலைசெய்யும் அளவிற்கான படிப்புத் தகுதி பழங்குடிகளிடம் இல்லை. வேதாந்தா யூனிட்டுடன், சிறுசிறு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் திறமையும் அந்த மக்களுக்கு இல்லை.

அதனால் வெளியில் இருந்து வேலையாட்கள் தருவிக்கப்பட்டார்கள். வெளியாட்கள் பழங்குடி நிலங்களை வாங்கத் தொடங்கினார்கள் வெளியாட்களுக்கும், பழங்குடிகளுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவதுண்டு.மற்றொரு பக்கம் பழங்குடிச் சமூகத்துக்கான CSR எனும் நலத்திட்ட கடமைகளைப் பட்டியலிட்டிருந்த வேதாந்தா, அவர்களுக்காக நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக மேற்கே புவனேஷ்வரில் மேற்கொண்ட நலத்திட்ட உதவிகளை கிழக்கே பழங்குடிகளுக்குச் செய்ததாக கணக்கு காண்பித்தார்கள். யூனிட் தொடங்கிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட  பழங்குடிகள் அல்லாத மக்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இந்தக் காடு ஒன்றும் வாழ்வோடு இணைந்தது இல்லை என்பதால் அவர்களை அப்புறப்படுத்துவது எளிதாக அமைந்தது. அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வேதாந்தா அங்கிருந்து அப்புறப்படுத்தியது.

சிவப்பு நிறத்தில் குளம்!

ஆனால் அங்கே யூனிட்டில் இருந்து வெளியேறிய “ரெட் மட்” என்னும் சிவந்த மண் போன்ற திரவக் கழிவுகளையும் சாம்பல் கழிவுகளையும் மலையடிவாரத்திலேயே நிரப்பினார்கள்.அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கோ அல்லது மறுசுழற்சி செய்வதற்கோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தின் அருகிலேயே 30 டோங்கிரியா கோந்த் குடும்பங்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதை அடுத்துதான், அந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். போராட்டத்தின் வீரியத்தால் மாநில மனித உரிமை ஆணையம் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தை விசாரணைக்கு அழைத்தது. ஆனால், விசாரணை மேற்கொள்ளப்பட்ட சில நாட்களில் அந்த மக்கள் அமைதியானார்கள். எவ்விதப் போராட்ட எழுச்சியும் அவர்களிடமிருந்து ஏற்படவில்லை. காரணம் கேட்டதற்கு போராட்டக் குழுவின் தலைவருக்கு அந்தத் தொழிற்சாலைக்கான போக்குவரத்து கான்ட்ராக்டை வேதாந்தா தந்ததாகச் சொன்னார்கள்.

பல வருடங்களுக்கு முன்பே ஒடிசாவிலிருந்து வெளியேறி விட்ட சந்தானகோபாலனுக்கு அந்தக் கழிவுகளின் தற்போதைய நிலைபற்றி தகவல்கள் எதுவும் சரிவரத் தெரியவில்லை. போராட்டக்காரர்களில் முக்கியப் பங்கு வகித்தவரும் ஒடிசா மாநில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பக்தசரண் தாசிடம் அந்தக் கழிவுகளின் தற்போதைய நிலைபற்றிக் கேட்க வாய்ப்பு கிடைத்தது..

அந்தக் கழிவுகளின் தற்போதைய நிலை என்ன?

“அந்தச் சாம்பல் கழிவுகள் அப்போதே மறுசுழற்சி செய்யப்பட்டு விட்டது. திரவக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான மாற்றுவழிகளை வேதாந்தா தற்போது மேற்கொண்டுவிட்டது. பழங்குடி மக்கள் அதே பகுதியில்தான் வசித்து வருகிறார்கள். ஆனால், சற்று பொறுங்கள்...நாட்டின் மிகப்பெரும் காட்டுப் பகுதியான இங்கே வேதாந்தா மட்டுமல்லாமல் 90% தொழிற்சாலைகள் இருக்கின்றன. காடுகளில் எதற்காகத் தொழிற்சாலைகள்?. இந்த அடிப்படைக் கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இங்கே தொழிற்சாலைகள் இருப்பதால் மக்களின் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்பட்டு வருகின்றன. காடுகள் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்த அரசே அபகரிப்பையும் துணிந்து செய்வதுதான் இதில் இருக்கும் சோக முரண். இந்தச் சிக்கல்கள் வேதாந்தாவோடும் வெறும் ஒடிசா காடுகளோடும் முடிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்தியப் பழங்குடிகள் மொத்தமுமே இதற்கான இலக்குதான். வேதாந்தா இதில் வெறும் தொடக்கப்புள்ளிதான்” என்கிறார்.

வேதாந்தாக்களைத் தேடுவோம்!

அடுத்த கட்டுரைக்கு