Published:Updated:

"உருள்பொட்டல்... ஜல நிரப்பு..!'' கேரள மக்களைத் துரத்திய துயரம்

"உருள்பொட்டல்... ஜல நிரப்பு..!'' கேரள மக்களைத் துரத்திய துயரம்
"உருள்பொட்டல்... ஜல நிரப்பு..!'' கேரள மக்களைத் துரத்திய துயரம்

"உருள்பொட்டல்... ஜல நிரப்பு..!'' கேரள மக்களைத் துரத்திய துயரம்

கனமழையையும், கடுமையான வெள்ளத்தையும் சந்தித்த கேரளா, தற்போது அதிலிருந்து மீண்டு அடுத்தகட்ட பணிகளில் வேகம் செலுத்திவருகிறது. 'உருள்பொட்டல்' என மலையாள மக்களால் வர்ணிக்கப்படும் நிலச்சரிவால் தகர்ந்துபோனது மலைகள் மட்டுமல்ல... மக்களின் மனங்களும்தான். 'ஜல நிரப்பு' உயர்ந்ததால் தண்ணீரில் தத்தளித்த மக்களின் கடந்தகால தவிப்புகள் இன்னும் மனதைவிட்டு மறையவில்லை.

இரண்டாம்கட்ட மழை தொடங்கிய சில நாட்கள் இடுக்கி அணையை நோக்கி அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. அந்தச் சமயத்தில் ஆலப்புழா மாவட்டம் செங்கனூர் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தது.  இன்றுவரை செங்கனூர் தாலுகா மக்கள் துயரத்தில் இருந்து மீண்டெழவில்லை. செங்கனூர் நகரத்துக்கு அருகே ஓடும் பம்பை ஆறும், 15 கிலோ மீட்டருக்கு அப்பால் பந்தளம் நகரத்தில் ஓடும் அச்சன்கோவில் ஆறும் ஒரே ஆறாக இணைந்து தனது பரப்பளவை விரித்தது. பம்பை ஆற்றில் ஓடிய வெள்ளம், இன்னும் செங்கனூர் மக்கள் கண்களில் இருந்து மாறவில்லை. பம்பை மற்றும் அச்சன்கோவில் ஆறுகளுக்கு இடைப்பட்ட கிராமங்களும், நகரங்களும் தண்ணீரில் மூழ்கி நசிந்துவிட்டன. 

"வெள்ளப்பெருக்கில் பந்தளம் நகராட்சியின் 33 வார்டுகளும் மூழ்கின. நகராட்சி சேர்மன் ஸதியின் வீடும், அனைத்துக் கவுன்சிலர்களின் வீடுகளும் பாரபட்சம் இல்லாமல் மூழ்கின. ஆகஸ்ட் 15-ம் தேதி எங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. எந்தப் பொருளையும் எடுப்பதற்குச் சமயம் கிடைக்கவில்லை. உடுத்திருந்த உடையுடன் வெளியேறினோம். மழை வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் கோழநடையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் குதித்து விளையாடினார்கள். அதில் அஸ்வின் என்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். பந்தளம் சிக்னல் பகுதியில் 12 அடி உயரத்துக்குத் தண்ணீர் நின்றது. பணத்தையும், பொருட்களையும் தண்ணீர் கொண்டுபோய்விட்டது. மாற்று உடை முகாமில்தான் கிடைத்தது" என்றார் பந்தளம் 10-வது வார்டு கவுன்சிலர் ஜான்சிபீகம்.

பந்தளம் என்.எஸ்.எஸ் பெண்கள் பள்ளி முகாமுக்கு முதலில் வந்த களைக்காடு அஜி, "மழைத் தண்ணீர்தான் வீட்டைச் சுற்றித் தேங்குகிறது என நினைத்தேன். திடீரென வெள்ளம் உயர்ந்துவிட்டது. சுகர் வியாதியால் இரண்டு கால்களையும் இழந்த தாய் லுபினா, விபத்தில் ஒரு கால் உடைந்த மனைவி ஷஜினா ஆகியோரைத் தூக்கிக்கொண்டு மேடான இடத்துக்கு ஓடினேன். எங்கள் குடும்ப உறுப்பினராகவே ஆகிவிட்ட பூஜை சூசியை என் மகன் அஜ்மல் தூக்கிக்கொண்டு ஓடினான். வெள்ளம் வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதால் ரெட் அலர்ட் விடப்பட்ட தகவலைத் தெரிந்துகொள்ள முடியாமல் போனது" என்று முகாம் அனுபவத்தை நினைவுகூர்ந்தார். 

அஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷஜனா, "பெருநாள் கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்த என் கணவர் அனீஸ் ஊருக்கு வந்தார். அவர் வந்த மூன்றாவது நாள் மழைவெள்ளத்தில் வீடு மூழ்கிவிட்டதால் முகாமுக்கு வந்துவிட்டோம். அவரது பாஸ்போர்ட் வெள்ளத்தில் சென்றுவிட்டது. அவர், வெளிநாட்டுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. பெருநாளும் கொண்டாட முடியவில்லை" என்றார்.

செங்கனூர் செறியநாடு, புலியூர் பஞ்சாயத்துகளின் மொத்த கிராமங்களிலும் தண்ணீர் வெளியேற முடியாமல் ஒரு வாரத்துக்கு மேல் தேங்கியிருந்தது. புலியூர் அரசுப் பள்ளியில் அமைந்திருந்த முகாமில் ஏரியா நர்ஸ் உஷாகுமாரியும், அவரது மகள் ஐஸ்வர்யாவும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு வீட்டில் இருந்து கஞ்சியும், ஓம வாட்டரும் கொண்டுவந்து கொடுத்தனர். செங்கனூரில் மேடான பகுதிகளில் உள்ள வீடுகளில் இடவசதிக்கு ஏற்ப கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளைத் தங்கவைத்து உதவியவர்கள் ஏராளம். புலியூர் சௌமியா வீட்டில் ஏழு நாள்கள் தங்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஷாகி, "முகாமில் இருப்பதற்கு என் உடலும், மனமும் ஏற்றதாக இல்லை. எனவே, முகாமுக்கு அருகில் இருந்த செளமியா குடும்பத்தில் ஒருவராக என்னைச் சேர்த்துக் கவனித்துக்கொண்டார். மழை நல்ல மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்துள்ளது" என்றார்.

பம்பை, அச்சன்கோவில் ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் தண்ணீருடன் வண்டலும் சேர்ந்தே நிறைந்தது. செங்கனூர் பாண்டநாடு முழுவதும் வீடுகளில் சில அடி உயரத்துக்கு மூடிக்கிடந்த வண்டல் அகற்றப்பட்டுவிட்டது. மொத்த ஊரையும் சுத்தப்படுத்துவதை இளைஞர் அமைப்புகள் சேவையாகச் செய்துவந்தனர். பாண்டநாடு மக்கள் செங்கனூர் கிறிஸ்தவ கல்லூரி முகாமுக்கு வந்து சேர்ந்ததே மிகப்பெரிய சோகக் கதை. பாண்டநாடு மித்திரமடத்தைச் சேர்ந்த மஞ்சு, "ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 11 மணிக்கு வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. எங்கள் பகுதியில் இருந்த ஒரு மொட்டை மாடியில் குடும்பத்தினருடன் தஞ்சம் புகுந்தோம். மொட்டை மாடியில் ஷீட் போட்டிருந்ததால் மழை நீர் உள்ளே வரவில்லை. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் கிடைக்காததால் குழந்தைக்கு மழைத் தண்ணீரைக் கைகளில் பிடித்து குடிக்கக் கொடுத்தேன். மூன்று நாட்கள் மொட்டை மாடியில் பசியில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே இருந்தோம். என் குழந்தையை நினைத்துதான் அழுதேன். நாங்கள் தஞ்சம்புகுந்த வீட்டினர் ஒரு பாக்கெட் பிஸ்கெட் தந்தார்கள். அதை மழைத் தண்ணீரில் நனைத்து குழந்தைக்குக் கொடுத்தேன். வானத்தில் ஹெலிகாப்டர் பறக்கும்போதெல்லாம், 'ரச்சிக்கணே' என்று என் குழந்தை கத்தினான். மேற்கூரை இருந்ததால் ஹெலிகாப்டர் வீரர்கள் எங்களைப் பார்க்க வாய்ப்பு இல்லை. மகன் கத்தியதைப் பார்க்கும்போது எங்களுக்கு அழுகைதான் வந்தது. மின்சாரம் இல்லை, டவர்கள் தண்ணீரில் மூழ்கியதால் செல்போன்கள் செயலிழந்துவிட்டன. மரண வேதனையை அனுபவித்தோம். 17-ம் தேதி மாலை 3 மணியளவில் மீனவர்கள் படகில் வந்து எங்களை மீட்டனர். கரைக்கு வருவதற்கு மொத்தம் 3 படகுகளில் மாறி மாறி பயணப்பட வேண்டியிருந்தது. இறுதியாகப் பெரிய டாரஸ் லாரியில் எங்களை இந்த முகாமுக்கு அழைத்துவந்தார்கள். ஒருநாள் தாமதமாக படகு வந்திருந்தாலும் நாங்கள் உயிர் பிழைத்திருக்கமாட்டோம்" என்றபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.

மழை வெள்ளத்துக்குத் தப்பிவந்தவர்களுக்குள் சோகக்கதைகள் அமிழ்ந்தே கிடக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு