Published:Updated:

``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி செய்வோர்மீது சட்டநடவடிக்கை தேவை" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

இ.கார்த்திகேயன்
``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி செய்வோர்மீது சட்டநடவடிக்கை தேவை" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
``ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சி செய்வோர்மீது சட்டநடவடிக்கை தேவை" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

``அரசின் கொள்கைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது அரசு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்” என  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பி.ஆர்.பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழ்நாட்டில் திட்டமிட்டு தமிழக அரசே வறட்சியை உருவாக்கி உள்ளது. கிடைத்த நீரை சேமித்து வைக்கவும், பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் தமிழக அரசும் பொதுப்பணித்துறையும் தொடர்ந்து தவறி வருகிறது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவற்றைச் சேமித்து வைக்காததால் வீணாகக் கடலில் கலந்தன. இதனால், தற்போது தாமிரபரணி பாசனக் கால்வாய்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

ஏரி, குளங்களில் உள்ள மணலை அள்ளி விற்பனை செய்வதற்காக, திட்டமிட்டே தமிழக அரசு தண்ணீரை சேமித்து வைக்க திட்டம் தீட்டாமல் உள்ளது. மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டதன் விளைவே, தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு காரணம். 8 வழிச்சாலை குறித்து கருத்து சொன்னாலே கைது நடவடிக்கைப் பாய்கிறது. இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசே அரசாணை வெளியிட்டு சீல் வைக்கப்பட்டு மூடியுள்ளது. ஆலை குறித்து ஆய்வு செய்ய பசுமைத் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்ட குழு ஆய்வை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி செயல்பட்டு வரும் ஆலை நிர்வாகம், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஆலையைத் திறக்க முயற்சி செய்பவர்கள் ஆகியோர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். மணல் கொள்ளையைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். மணல் இறக்குமதியை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், இந்த இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு கூட நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கும் விரோதமாகவே செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவில் சென்றுகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயரும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 35 ரூபாய்க்கு கிடைக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உலகநாடுகளைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசு காரணம் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. இதன் விலையைக் குறைத்திட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.