Published:Updated:

25 ஏக்கர் ஏரி... 5,000 பனைவிதை... கரூரில் அசத்திய மக்கள் பாதை அமைப்பினர்

25 ஏக்கர் ஏரி... 5,000 பனைவிதை... கரூரில் அசத்திய மக்கள் பாதை அமைப்பினர்
25 ஏக்கர் ஏரி... 5,000 பனைவிதை... கரூரில் அசத்திய மக்கள் பாதை அமைப்பினர்

கரூர் மாவட்டத்தில் தூர்ந்து கிடந்த 25 ஏக்கர் ஏரியை தூர் வாரியதோடு, 5,000 பனைவிதைகளை விதைத்து அசத்தி இருக்கிறார்கள் மக்கள் பாதை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள். ஐ.ஏ.எஸ் சகாயம் வழிகாட்டுதலோடு இயங்கும் அமைப்புதான் மக்கள் பாதை.


 கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது வாழ்வார்மங்கலம். கரூர் மாவட்ட தென் எல்லையில் இருக்கும் வறட்சி மிகுந்த கிராமங்களில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் மலை பெய்தால்தான் விவசாயம் என்ற மானாவாரி நிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சரியான மழை பெய்யாததால்,விவசாயம்

நடக்கவில்லை. இங்கு வசிக்கும் மக்களுக்கு இதனால் குடிநீரும் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த கிராமத்திற்கு நீராதாரமாக விளங்கிய 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெள்ளக்குளம் என்ற ஏரி தூர் வாரப்படாமல் தூர்ந்து கிடப்பதுதான். இந்த கிராம மக்கள் அந்த ஏரியை தூர் வார சொல்லி தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இவர்களின் அல்லல் நிலையை உணர்ந்து இவர்களுக்கு உதவ முன்வந்தது சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் பாதை இயக்கம்.

மேற்கொண்டு நடந்தவை பற்றி பேசிய மக்கள் பாதை அமைப்பின் கடவூர் ஒன்றிய பொறுப்பாளர் இராமசாமி, "எங்க கவனத்திற்கு இந்த கிராம மக்களின் இந்த பிரச்னை வந்தது. உடனே தலைமைக்கு தகவல் சொல்லி, எங்க செலவில் இந்த ஏரியை தூர் வார அனுமதி வாங்கினோம். ஒரு லட்சம் செலவு செய்து எட்டு நாள்களாக பொக்லைன் வைத்து, இந்த ஏரியை தூர் வாரினோம். ஏரிக்குள் முளைத்துக் கிடந்த கருவேலம் மரங்களை வேரோடு பிடிங்கி அப்புறப்படுத்தினோம். ஒருபக்கம் கரையே இல்லாமல் உடைஞ்சு கிடந்துச்சு. அங்கே கரை அமைத்தோம். அஞ்சடி ஆழத்திற்கு மண்ணை ஏரியில் எடுத்துள்ளோம். மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. இதை பார்த்ததும், ஊர்மக்கள் எங்க அமைப்பை பாராட்டினாங்க. இன்னைக்கு தூர் வாரும் பணி முடிந்ததால், எங்க அமைப்பைச் சேர்ந்த இருபது பேர் இரண்டு மாதங்களாக சேகரித்த 5,000 பனைவிதைகளை இந்த வெள்ளக்குளத்தைச் சுற்றி கரைகள் மற்றும் ஊர் சாலை ஓரங்களில் நடவு செய்தோம். இந்த பனைவிதைகள் முளைத்து மரமானால், வெள்ளக்குள கரைகள் பலப்படும். இந்த குளம் நன்றாக இருந்தால், அதை நம்பி சுத்தியுள்ள பத்துக் கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த ஏரியை தொடர்ந்து எங்க அமைப்பு சார்பில் பராமரிப்போம்" என்றார்.