Published:Updated:

`உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம் வேண்டும்’ - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தல்!

`உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம் வேண்டும்’ - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தல்!
`உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம் வேண்டும்’ - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தல்!

``ஆரம்ப சுகாதாரம், ஆரம்பக் கல்வி, கால்நடை மேம்பாடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் செயல்படத் தொடங்கினால் தான் அடிப்படை வசதிகள், சுகாதாரம் என அனைத்தும் தமிழகத்தில் சீராகும்'' என ஊட்டியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டியளித்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ``நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களால் 1843-ம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள் மரவகையான, ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாக கொண்ட `மிர்டேசியே' குடும்பத்தைச் சேர்ந்த தாவரமான கற்பூர மரம் (யூகலிப்டஸ்) சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப்பட்டது. அந்த மரங்களிலிருந்து உதிரும் இலைகளை உலர வைத்து தைலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மிக உயரமாக, அபாயகரமாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வளர்ந்து நிற்கும், பயனற்ற கற்பூர மரங்களை முற்றிலுமாக இவற்றை அகற்றுவது கடினம், எனவே படிப்படியாக வெட்டி அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு கற்பூர மர நர்சரிகள் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கற்பூர மர நர்சரிகள் செயல்படும் பட்சத்தில் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் கற்பூர மரங்களைப் போல, கொடைக்கானலில் தோல் பதனிடப் பயன்படுத்தப்படும் வேட்டில் மரங்கள் அதிகம் உள்ளன. அவற்றையும் அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரங்களை அகற்றி விட்டு இந்திய பாரம்பர்ய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட வேண்டும்.

அதே போல அந்நிய நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்ய தடை விதிக்க வேண்டும். 
வன வளம், புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு முக்கிய காரணம் மக்கள் தொகை பெருக்கம் தான். பசுமைப் புரட்சி கொண்டு வந்தபோதே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பசுமைப் புரட்சியின் காரணமாக நெருப்பைத் தவிர நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஆளும் அரசுகள் கண்டு கொள்வதில்லை. சீனாவைப் போல  சில சட்ட திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குறைந்த பட்சம் முதல் குழந்தைக்கு மட்டும் தான் அரசு சலுகைகள் என அறிவித்தால்கூட போதும். 

1967-ம் ஆண்டுக்கு முன்பு ஆரம்ப சுகாதாரம், ஆரம்பக் கல்வி, கால்நடை மேம்பாடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் இயங்கின. ஒரு பள்ளி ஆசிரியரை நியமிக்கக் கூடிய அதிகாரம் ஊராட்சி ஒன்றியக் குழுவிடம் இருந்தது. ஒன்றிய அளவில் ஒரு சிறிய முதல்வரைப் போல இந்த அமைப்பு செயல்பட்டு வந்தது. 1967-க்குப் பிறகு அப்போதைய தி.மு.க., அரசு மாநில சுயாட்சி வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டு, போராடியும் பெற முடியவில்லை. அதனால், ஊராட்சி அமைப்பின் அதிகாரங்கள் அனைத்தையும், பறித்துக்கொண்டு. அதிகாரங்கள் அனைத்தையும் மாநில அரசின் கீழ் வரப்பட்டது. இதற்குப் பிறகு தான் சுகாதார சீர்கேடு அதிகரித்துவிட்டது.

இதன் எதிரொலியாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ சுகாதார சீர் கேடுதான் முக்கிய காரணமாக உள்ளது. பழையபடி  ஆரம்ப சுகாதாரம், ஆரம்பக் கல்வி, கால்நடை மேம்பாடு, வேளாண்மை உள்ளிட்ட துறைகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்பின் கீழ் செயல்படத் துவங்கினால் தான் அடிப்படை வசதிகள், சுகாதாரம் என அனைத்தும் சீராகும். 
நிலத்தில் பாடுபடும் விவசாயியைத் தவிர  திரைப்பட நடிகர், அரசியல்வாதி, விளையாட்டு வீரர், வணிகர் என யார் விவசாயம் செய்தாலும் லாபம் கிடைக்கிறது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் எனத் தெரிந்தும், நிலத்தைத் தரிசாக வைத்துவிட்டு, சில அதிகாரிகளைக் கவனித்து, பயிர் சாகுபடி செய்ததாக அடங்கலில் கொண்டு வருவதால் லாபம் அடைகின்றனர்.  

மேலும், விவசாயத்துக்கு வருமான வரி இல்லாததால், அவர்களது பிரதான தொழிலில் ஈட்டும் கறுப்பு பணத்தை இதன் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்கிறார்கள். 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி,  விவசாயக் கமிஷன் நடை முறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், ஆட்சி நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பணக்காரர்கள் கறுப்புப் பணத்தை, வெள்ளைப் பணமாக மாற்றுவதற்காகத்தான் விவசாயத்துக்கு வருமான வரி இல்லை. விவசாயக் கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்டால், சாகுபடி செய்யப்படும் பயிருக்குச் செலவாகும் தொகையுடன், கூடுதலாகச் 50 சதவிகிதத்தைச் சேர்த்து நெல், பருத்தி, கரும்பு, பால் என ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்யப்படும். விவசாய கமிஷனை நடை முறைப்படுத்திவிட்டு, விவசாயத்துக்கு வருமான வரி, இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்துக்குப் பதில் கமர்ஷியல் மின் கட்டணம் நிர்ணயம் செய்துவிட்டு, விவசாயக் கடன், கடன் தள்ளுபடி, மானியம் என அனைத்து சலுகைகளையும் அரசு நிறுத்திக் கொள்ளட்டும்.“

இவ்வாறு அவர் கூறினார்.