Published:Updated:

பாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...

பாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...
பிரீமியம் ஸ்டோரி
News
பாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...

ஞா.சுதாகர் - படம்: பா.காளிமுத்து

சென்னைக்கு ஓர் அபாய மணியை அடித்திருக்கிறது இந்திய அரசின் நிதி ஆயோக். இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற இந்தியாவின் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீராதாரங்களை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டு வெறும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இந்த அறிக்கை சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை.

என்ன சொல்கிறது நிதி ஆயோக்?

இந்திய மாநிலங்களின் நீர்மேலாண்மை தொடர்பான தரவுகள் அனைத்தையும் ஒப்பிட்டு, ஆய்வுசெய்து Composite Water Management Index அறிக்கையை வெளியிட்டிருக்கிறது நிதிஆயோக்.  இதில் 24 மாநிலங்களின் தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. காஷ்மீர், மிசோரம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் போதிய தரவுகள் இல்லாததால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மதிப்பீடு செய்யப்பட மீதி 24 மாநிலங்களும், நீராதாரங்கள் மறுசீரமைப்பு, நீர் மேலாண்மைக்கான அரசின் கொள்கைகள், நிலத்தடிநீர் மேலாண்மை, குடிநீர் விநியோகம் உட்பட மொத்தம் 9 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன. 2016-17 நிதியாண்டுக்கான புள்ளிவிவரங்களைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டதில் சிறந்த நீர்மேலாண்மை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடத்தையும், ஜார்கண்ட் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்திற்கு இந்தப் பட்டியலில் 7-வது இடம்.  இதுதவிர்த்து சில அதிர்ச்சிதரும் புள்ளிவிவரங்களும் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சில.

பாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...

1. தற்போது சுமார் 60 கோடிப்பேர் தண்ணீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் இன்றி உயிரிழக்கின்றனர்.

2.
2050-ல் இந்தியாவின் ஜிடிபியில் 6 சதவிகிதம் அளவுக்குத் தண்ணீர்ப் பிரச்னையால் பாதிப்பு ஏற்படலாம்.

3. இந்திய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு 2030-ல் குடிநீர் கிடைக்காது.

4.
2020-ல் தேசத்தின் 21 பெரிய நகரங்களில் நிலத்தடி நீர் முழுவதுமாகக் குறைந்துவிடும்.

சென்னையின் நீராதாரமாக இருந்த ஏரிகள், தண்ணீர் செல்லும் வழித்தடங்கள், சதுப்பு நிலங்கள் போன்ற அனைத்துமே இன்று ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்கிவிட்டன. வெளியூர்களிலும், வெளிமாநிலத்திலும் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர், கடலிலிருந்து குடிநீராக்கப்படும் தண்ணீர் ஆகியவை மட்டும்தான் இன்று சென்னைக்கு இருக்கும் முக்கிய நீராதாரங்கள். இவற்றைத் தவிர்த்து சென்னையின் நீர்த்தேவையைத்  தீர்த்துவைப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது நிலத்தடிநீர்தான்.

குறைவான மழைப்பொழிவு, பெய்யும் மழையையும் சேமித்துவைக்க இயலாத நிலை, தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் நீர் மாசுபாடு, தேவைக்கு அதிகமான தண்ணீர்ப் பயன்பாடு, வீணாக்கப்படும் நீர் ஆதாரங்கள், நிலத்தடி நீரை முறையாகப் பராமரிக்காதது போன்றவைதான் ஒரு நகரத்தின் வறட்சிக்கு முக்கியக்காரணங்கள். இதில் முதல் ஒன்றைத் தவிர்த்து, மீதியிருக்கும் எல்லா லட்சணங்களும் சென்னைக்கு அப்படியே பொருந்தும். எல்லா நீராதாரங்களையும் நாம் கைவிட்டுவிட்ட நிலையிலும், நமக்குக் கைகொடுத்துக் கொண்டிருப்பது மழை மட்டும்தான்.

“சென்னையின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 1007 மில்லிமீட்டர். இதில் இயற்கையின் மாற்றங்களால் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகிறதே தவிர, பெருமளவில் வித்தியாசங்கள் இருப்பதில்லை” என்கிறார் சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன். இதனால்தான் பெருமழை பெய்யும் ஆண்டுகளில் மட்டும் தண்ணீர்ப் பஞ்சமின்றி சென்னையால் தப்பிக்கமுடிகிறது; முறையாக மழைநீரைச் சேமிக்க முடியாததால், அதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் பயன்படுத்த முடிவதில்லை. இப்படிப்பட்ட நகரத்துக்கு நம்பிக்கையளித்துக் கொண்டிருந்த ஒரே விஷயம் நிலத்தடிநீர். தற்போது அதற்கும் சிக்கல் வந்துவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பாலைவனம் சென்னைக்கு மிக அருகில்...சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஜனகராஜன், “2020-ம் ஆண்டுக்குள் சென்னையின் நிலத்தடி நீர் பூஜ்யத்தைத் தொட்டுவிடும் என்கிறது நிதி ஆயோக் அறிக்கை. இதனை முற்றிலும் சரியெனச் சொல்லமுடியாது. இங்கே நாம் நிலத்தடி நீரை எடுக்க எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக கடல்நீர் உள்ளே வந்துகொண்டிருக்கிறது. இப்போதே சென்னையில் பல இடங்களில் கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. அப்படியிருக்கையில் நம்மால் நிலத்தடி நீர் அளவு பூஜ்யத்தைத் தொட்டுவிடும் எனச் சொல்ல முடியாது. ஆனால், அந்த அறிக்கை கொடுத்திருக்கும் எச்சரிக்கை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிஜம். நிலத்தடி நீரைப்பொறுத்தவரை நாம் எடுக்க எடுக்க, உள்ளே நீர் சென்றுகொண்டே இருக்கவேண்டும். இந்தச் சுழற்சி சரியான முறையில் இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், இப்போது நாம் நிலத்தடி நீரை எடுத்துக்கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். அதனை மீண்டும் புதுப்பிக்க எதுவும் செய்வதில்லை. இப்படியே செய்துகொண்டிருந்தால் மண்ணிலிருக்கும் ஈரப்பதம் முழுவதும் குறைந்து பாலைவனமாக மாறிவிடும். சென்னை மட்டுமன்றி, தமிழகமே தற்போது இந்த நிலைமையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இது முக்கியமான சூழலியல் பிரச்னைகளில் ஒன்று. இந்தியாவில் இன்று 70 சதவிகித விவசாயம் நிலத்தடி நீரை நம்பித்தான் இருக்கிறது. 80 சதவிகித மக்கள் குடிநீர்த் தேவைக்காக நிலத்தடி நீரை நம்பித்தான் இருக்கின்றனர். 90 சதவிகிதம்  தொழிற்சாலைகள் நிலத்தடி நீரைச் சார்ந்திருக்கின்றன. ஆனால், எத்தனை சதவிகித நீர் மீண்டும் நிலத்திற்குள் செலுத்தப்படுகிறது?

சென்னையின் குடிநீர்த்தேவைக்காக தற்போது கடல்நீரைக் குடிநீராக்கும் மையங்கள் இரண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மையங்கள் கட்டுவதற்கான பணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இவை அத்தனையும் முடிந்தால் சென்னைக்கு ஒருநாளைக்கு 750 MLD தண்ணீர் கிடைக்கும். ஆனால், இந்தக் கடல்நீரைக் குடிநீராக்குவது என்பது சரியான தீர்வல்ல; இதன்மூலம் ஒவ்வொருநாளும் அதிகளவிலான உப்புநீரைக் கடலில் வெளியேற்றுவோம். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்கும்.

தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையையும் சேர்த்தால், இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 4000 ஏரிகளாவது இருக்கும். இவற்றை ஒழுங்காகப் பராமரித்தாலே போதும்; நம்மால் ஒழுங்காக நீரைச் சேமித்துவைக்க முடியும். 2015-ல் சென்னை வெள்ளம் வந்தபோது 300 டி.எம்.சி நீர் கடலில் விடப்பட்டது. சென்னையின் ஒரு மாதக் குடிநீர்த் தேவை ஒரு டி.எம்.சி. ஒரு வருடத்திற்கு 12 டி.எம்.சி. அந்த 300 டி.எம்.சி.யில் கொஞ்சம் நீரையாவது ஏரிகளில் சேமித்திருந்தால், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்காவது சென்னைக்கான நீர் இருந்திருக்கும்.  ஆனால் அதனை ஏன் அரசு செய்வதில்லை? பெரிய கட்டடங்கள் எத்தனை  வேண்டுமானாலும் இவர்களால் கட்டிவிட முடியும். ஆனால், ஒரே ஓர் ஏரியை இவர்களால் உருவாக்க முடியுமா?

உலகின் பெருநகரங்கள் அனைத்தும் இதுபோன்ற பஞ்சங்களால் பாதிக்கப்படுவதற்கு காரணம், குறுகியகாலத்திற்காகத் தீட்டப்படும் திட்டங்கள்தான். நீண்டகால அடிப்படையில் நன்மை தரும் திட்டங்களை அவர்கள் கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. வளர்ச்சி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சியாக மட்டுமே இருந்தால் இதுபோன்ற சிக்கல்கள் வரத்தான் செய்யும். எனவே பொருளாதார வளர்ச்சியும் வேண்டும்; அதேசமயம், நம் இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படவேண்டும். இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் நமக்கு நன்மைதரும். அதற்கான திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்” எனச் சென்னையின் சிக்கலைத் தெளிவாக எடுத்துரைக்கிறார் ஜனகராஜ்.

“இன்னும் 17 ஆண்டுகளில் நம் நகரத்தின் மொத்த நீரும் தீர்ந்துவிடும்” - 1990-ம் ஆண்டு கேப்டவுனில் வெளிவந்த ஒரு பத்திரிகையின் தலைப்புச்செய்தி இது. இதைப் புரிந்துகொள்ள கேப்டவுன் அரசு எடுத்துக்கொண்ட காலம் 28 ஆண்டுகள்; நம் சர்க்காருக்கும் ‘சாமி’க்கும் இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமோ?