Published:Updated:

கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!
கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!

கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!

பிரீமியம் ஸ்டோரி

வேலூரில் ஜெயில் மட்டுமல்ல, வெயிலும் பிரசித்தி பெற்றது. ஆனால், இப்போது வேலூரைப் பின்னுக்குத் தள்ளி அதிகம் வெயில் அடிக்கும் மாவட்டமாக கரூர் மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் ரெட் அலெர்ட் கொடுக்கிறார்கள். சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளே வந்து கரூரில் வெயில் பற்றி ஆய்வு செய்துவிட்டுப்போகும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

தமிழகத்தின் மையப் பகுதியான கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகள் ஓடினாலும், அந்த ஆறுகளை நம்பி செழுமையான விவசாயம் நடப்பதில்லை. இயற்கையாகவே இங்கு மானாவாரி நிலங்கள் அதிகம். இங்கு பல தொழிற்சாலைகள் உள்ளன. சுண்ணாம்பு மண் நிறைந்த மாவட்டம் என்பதாலும், இங்கு வெப்பம் அதிகம். சமீபகாலமாக, இங்கு குறைந்தபட்சம் 100 டிகிரியில் தொடங்கி அதிகபட்சம் 110 டிகிரி வரை வெயில் வாட்டி எடுக்கிறது. குறிப்பாக, இந்த மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி ஒன்றியப் பகுதிகளில்தான் அதிக வெப்பம் பதிவாகிறது. இதனால், மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். அதீத வெயிலினால் பலர் சுருண்டு விழும் நிகழ்வுகள், தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்துள்ளன.

கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!

இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் தீபம் சங்கரிடம் பேசினோம். ‘‘பொதுவாக ஒரு நிலப்பரப்பில் 33 சதவிகித மரங்கள் இருந்தால்தான், அந்தப் பகுதி செழிப்பாக இருக்கும். வெப்பம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்களைத் தாங்கும் தன்மையுடன் அந்தப் பகுதி இருக்கும். ஆனால், கரூர் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், வெறும் நான்கு சதவிகிதம்தான் மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. இதனால்தான், இங்கே வெப்பம் வேலூரைத் தாண்டி அதிகமாகியுள்ளது. 

இந்த மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்ததற்கு, இங்கு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதும் ஒரு காரணம். செட்டிநாடு சிமென்ட் ஆலையின் 2 யூனிட்கள், புகழூர் சர்க்கரை ஆலை, டி.என்.பி.எல் ஆலை என்று எல்லாமே இயற்கைச் சூழலைச் சிதைத்து, வெப்பத்தை அதிகரிக்க வைத்துவிட்டன.    உயர்மின் அழுத்த கோபுரங்கள் அதிகமாக இந்த மாவட்டம் வழியாக செல்கின்றன. அதுவும் வெயிலின் உக்கிரத்தைக் கூட்டுகிறது. க.பரமத்தி ஒன்றியத்தில்தான் அதிக வெயில் அடிக்கிறது. இந்த ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான கல்குவாரிகள் இருப்பதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. கடந்த வருடமே இங்கு 110 டிகிரி வெப்பநிலை பதிவாக, அதிர்ந்துபோன சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இங்கு வந்து, `அதிக வெப்பத்துக்குக் காரணம் என்ன’ என ஆய்வு செய்தார்கள்’’ என்றார்.

கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!

க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.வி.ராஜ்குமார், ‘‘மணல் கொள்ளைக்கு புகழ்பெற்றது கரூர் மாவட்டம்தான். அதற்கும் வெயிலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. இங்கு ஓடும் காவிரியில் கணக்குவழக்கில்லாமல் மணலை அள்ளி, நிலத்தடி நீரை அதலபாதாளத்துக்கு அனுப்பிவிட்டார்கள். அதுவும் வெப்பம் அதிகரிக்க முக்கியக் காரணம். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வெப்பநிலை, இப்போது வேலூரைத் தாண்டி முதலிடத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்த வருடங்களில் இது இன்னும் அதிகரித்து, இங்கு மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்படலாம். அப்புறம் கரூரைப் பாலைவனப் பகுதியாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இங்கு வெப்பம் அதிகரிப்பதை முன்கூட்டியே உணர்ந்த மாவட்ட நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மரங்கள் நடுவதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியது. அதன் பலனாகவே, மரங்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்தது. இல்லையென்றால், கரூரின் வெப்ப அளவு இன்னும் அதிகமாகியிருக்கும். இங்கு அரசு நிலங்களைவிடத் தனியார் நிலங்களே அதிக அளவில் தரிசாகக் காணப்படுகிறன. நீர் ஆதாரம் இல்லாததால்தான், இந்த நிலங்கள் தரிசாக உள்ளன. அதனால், அந்த இடங்களில் மரங்கள் நடுவதற்கு அரசே, வழிகாட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு மரங்கள் நடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தற்போது இருக்கும் தொழிற்சாலைகளைக் கணக்கிட்டால், மற்ற பகுதிகளைவிட இங்கே அதிக மரங்கள் வேண்டும். அப்போதுதான், இங்கு வெப்ப அளவு குறையும்’’ என்று எச்சரித்தார்.

கொதிக்குது கரூர்... வேலூரைத் தாண்டும் வெயில் மாவட்டம்!

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம். ‘‘கரூரில் வெப்பநிலை அதிகரிக்கவில்லை. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அடிக்கும் வெயில் போலத்தான் இங்கும் அடிக்கிறது. இதைக் குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ‘வீட்டுக்கு இரண்டு நொச்சி மரங்கள்’ என்ற திட்டம் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நொச்சி மரத்தை வளர்த்தெடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். அத்துடன் மாவட்டம் முழுக்க உள்ள குளம், குட்டை, கண்மாய், ஏரி மற்றும் ஆறுகளின் கரைகளில் லட்சக்கணக்கான பனை விதைகளைப் பதிக்கவிருக்கிறோம். கரூரைப் பசுமை மாவட்டமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம்’’ என்றார்.

கரூர் மாவட்ட வெயில் நிலவரம் தமிழகத்தின் ‘ஹாட்’ டாபிக்காக மாறுவதற்குள், வெப்பத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- துரை.வேம்பையன்
படங்கள்: நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு