Published:Updated:

குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!
குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!

குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!

பிரீமியம் ஸ்டோரி

க்களின் குணத்துக்கு அடுத்த படியாக கோவையை எல்லோரும் விரும்புவது இங்கு நிலவும் குளிருக்காகத்தான். பருவநிலை மாற்றம்... தொழில்பெருக்கம்... சுற்றுச்சூழல் மாசு... இயற்கை அழிப்பு... இத்தியாதி இத்தியாதி காரணங்களால் பல வருடங்களாகத் தன் இயல்பை இழந்து ‘கொதித்த’ கோவையைப் பார்த்துத் துடித்த நெஞ்சங்கள் ஏராளம். கோவையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது, அவ்வப்போது இங்கு வந்துபோகிறவர்களும் கூட, ‘கோயம்புத்தூர் முன்ன மாதிரி இல்லப்பா...’ என்று மனதுக்குள் ‘புழுங்கிச்’ சென்றனர். பல வருடங்களாக அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் ஆஸ்தான கிரிக்கெட் ப்ளேயர் திடீரென்று மீண்டுவந்து பந்துகளை விளாசுவதைப்போல, இந்த ஆண்டு ஜில் குளிரில் நடுங்குகிறது கோவை. அதிகாலையில் ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வாக்கிங் போகிற மனிதர்களை வீதிகளில் பார்க்க முடிகிறது. மலையேறி ஊட்டிக்குப் போக வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது.

கோவையைப் பற்றி பல புத்தகங்களளை எழுதியுள்ள சி.ஆர்.இளங்கோவனிடம் பேசினோம். ‘‘60 வருஷங்களுக்கு முன்பெல்லாம் கோவையில் வாழ்றவங்களுக்கு பெரும்பாலான மாதங்களில் கண்டிப்பா ஸ்வெட்டரும் மப்ளரும் தேவைப்பட்டுச்சு. அந்த அளவுக்குக் குளிர் இருக்கும். பாலக்காடு கணவாய் வழியா வீசும் அரபிக்கடல் காற்றால இங்கிலாந்துக்கு இணையான க்ளைமேட் இருந்துச்சு. ஏ.சி இல்லாத அந்தக் காலத்துலேயே இங்கே பஞ்சாலைத்தொழில் வளர்ந்ததுக்குக் காரணம் அந்த க்ளைமேட்தான். காற்றில் உள்ள ஈரப்பத்தை வைத்தே பஞ்சு ஒட்டி நூலா மாறுச்சு.

குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!

காலப்போக்குல சூழல் மாறுச்சு. கொஞ்சம் கொஞ்சமா கோவை தன் இயல்பைத் தொலைச்சுக்கிட்டே வந்துச்சு. அதிகரித்துவிட்ட தொழிற்சாலைகள், கட்டடங்கள், வாகனங்கள்னு இதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இத்தனை வருஷமா தொலைஞ்சுபோயிருந்த கோவையோட இயல்பு மீண்டும் வந்திருக்கு. சிறு தூறலுடன்கூடிய தென்றல் இப்போ வந்திருக்கு. 30 வருஷங்களுக்கு முன்னால கோவையின் இந்தச் சூழலை அனுபவிச்ச  ஆள்கள், இப்போ தங்கள் பிள்ளைகள்கிட்ட ‘பழைய கோயம்புத்தூர் இப்படித்தான்டா இருக்கும்’னு பரவசத்துடன் சொல்றாங்க. இதை நினைச்சு மக்கள் சந்தோஷப் பட்டுக்கலாமே தவிர, பெருமைப்பட்டுக்க ஒண்ணும் இல்லை. ஏன்னா, வளர்ச்சிங்கிற பேர்ல முன்பைவிட வேகமா மரங்களை அழிச்சுட்டு வர்றோம். இயற்கையை மாசுபடுத்திட்டு வர்றோம். இயற்கையா பார்த்து மீண்டும் அந்தக் குளிர்ச்சியைக் கொடுத்திருக்கு. இந்த இதமான சூழலைத் தக்கவச்சுக்க நம்மால முடிஞ்சதை கண்டிப்பா செய்யணும்’’ என்பவரின் குரலில் அவ்வளவு ஈரம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் பன்னீர்செல்வம், ‘‘கோவையில கோடைக்காலம் மார்ச் மாசம் ஆரம்பிச்சு மே மாசம் முடிஞ்சிரும். அதுதான் இங்கு உள்ள ஸ்பெஷல். கோவைக்குக் கிடைக்கவேண்டிய மழைநீர் பெரிதாகக் குறைஞ்சதில்ல. ஆனா, மழை நாள்கள் குறைஞ்சுது. வருஷத்துக்குக் கிடைக்க வேண்டிய 56 மழை நாள்கள், சமீபகாலமாக 44 நாள்களாகக் குறைஞ்சு போச்சு. இதனாலதான், கோவையின் க்ளைமேட் பல வருஷங்கள் காணாமல்போச்சு. இந்த வருஷம் அப்படி இல்லை. மே மாசத்துல சாதாரணமாக 66 மி.மீ கிடைக்க வேண்டிய மழையின் அளவு, இந்த வருஷம் 259 மி.மீ அளவுக்குக் கிடைச்சிருக்கு. சுமார் 110 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கு. மழை அளவு மட்டுமல்ல, மழை நாள்களும் அதிகரிச்சிருப்பதுதான் அதிசயம். மே மாதத்தில் மிஞ்சிப்போனா நான்கு மழை நாள்கள் கிடைக்கலாம். ஆனா இந்த வருஷம், 12 நாள்கள் மழை பெய்தது. ஜூனில் மூன்று நாள்கள் மழை பெய்தால் பெரிய விஷயம். இந்த முறை ஏழு நாள்கள் மழை பெய்தது. ஜூலை மாதம் 68 மி.மீ மழை கிடைக்கணும். ஆனால், முதல் 12 நாள்களுக்குள்ளாகவே 45 மி.மீ மழை கிடைச்சிருச்சு. தொடர்ந்து மழை பெய்தபடி இருக்கு. 

குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!

மழையின் ஈரம் நகரைச் சுற்றி இருப்பதால், எவ்வளவு வெயில் அடிச்சாலும் வெளியில தெரியலை. இங்கே இருக்கிற சோலையாறு, ஆழியாறு, சிறுவாணி என எல்லா நீர்நிலைகளும் நிரம்பி, மண்ணையும் காற்றையும் ஈரமாக்கிருச்சு. அதனாலதான் கோவையில் பழைய க்ளைமேட் கிடைச்சுருக்கு. குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை நார்மலா 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கணும். ஆனால், இப்போ 22 டிகிரியா குறைஞ்சிருக்கு. அதேபோல, பகல்நேர வெப்பநிலை சாதாரணமா 30 - 31.5 டிகிரி இருக்கும். இப்போ 25 டிகிரியா குறைஞ்சிருக்கு. அதனாலதான், இந்த வருஷம் கோவைக்கு கோடையே இல்லாமப் போயிருச்சு’’ என்கிறார் சந்தோஷம் பொங்க.

குளிருது கோவை... ஊட்டி போல ஸ்வெட்டர் தேடும் மக்கள்!

குளிரைத் தேடி அவ்வப்போது இமயமலைக்குப் பயணம் செல்பவர் மகேஷ். அவர், ‘‘எனக்குச் சொந்த ஊரு திருநெல்வேலி. கோயம்புத்தூர் க்ளைமேட்டுக்காகவே இங்க வந்து செட்டில் ஆனவன். ஆனால், கடந்த  வருடங்களெல்லாம் பெருத்த ஏமாற்றம். இந்த வருஷம் வட்டியும் முதலுமா சேர்த்துக் கொடுத்துருச்சு இயற்கை. மழைதான் காரணம். இப்போ நொய்யல் ஆறு நிரம்பி ஓடுது. ஆங்காங்கே செக் டேம் கட்டியிருந்தால், அந்தத் தண்ணீரைச் சேமிச்சுருக்க முடியும். அதைச் செய்ய யாரும் இல்லை. எல்லோருக்கும் கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கணும். ஏன்னா இது நாம வாழுற பூமி; வாழவைக்கிற பூமி; நம்ம சந்ததிகள் வாழப்போற பூமி. அதை நாமே கெடுத்துரக்கூடாது’’ என்று கூலாகச் சொன்னார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு