Published:Updated:

"மரணம் எங்களைச் சுற்றிச் சுழன்றது!?’’ - கஜா புயலில் சிக்கி தப்பிய திக்..திக்.. நிமிடங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"மரணம் எங்களைச் சுற்றிச் சுழன்றது!?’’ - கஜா புயலில் சிக்கி தப்பிய திக்..திக்.. நிமிடங்கள்
"மரணம் எங்களைச் சுற்றிச் சுழன்றது!?’’ - கஜா புயலில் சிக்கி தப்பிய திக்..திக்.. நிமிடங்கள்

"சூறாவளிக் காற்று போல 5.30 மணிக்குப் புயல் காற்று சுழன்று, சுழன்று அடித்தது. முன்னைவிடக் காற்றின்வேகம் இரு மடங்கு இருந்தது. கணவரும் எழுந்துவிட்டார்.  ஜன்னலைத் திறந்தோம். காற்றில் ஜன்னல் தூக்கி அடிக்கப்பட்டது. சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சரிவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தோம்."

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கித் தவித்தவர்களின் கதைகளைப் பல புத்தகங்களாக உணர்ச்சிகளுடன் எழுதலாம். அந்தளவுக்கு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

``கதவைத் திறந்து வெளியேறுவதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் பலத்த சத்தத்துடன் வீட்டின் அருகில் இருந்த இலவம் பஞ்சு மரத்தின் கிளை ஒடிந்து கூரையில் விழுந்தது. அடுத்ததாக, மற்றொரு கிளை பீரோவில் விழுந்தது. பதற்றத்துடன் அவசர, அவசரமாகக் கதவைத் திறந்து வெளியேறி விட்டோம். அதில் ஒரு கிளை என் காலில் விழுந்தது. வீட்டைவிட்டு வெளியே வந்து ஐந்து நிமிடத்துக்குள் அருகே இருந்த மரத்தின் கிளைகள் முழுவதுமாக விழுந்து வீடே உருக்குலைந்து போய் விட்டது. சுதாரித்துக் கொண்டு, சில நிமிடங்களுக்குள் வீட்டைவிட்டு வெளியே வந்ததால், மரணத்தின் பிடியிலிருந்து தப்பி விட்டோம்" என்கிறார் பாதிக்கப்பட்ட சந்தானம் - முத்துலட்சுமி தம்பதி.

இருவர் மட்டுமே  தங்குவதற்காக மண் சுவரால் கட்டப்பட்ட விசாலமான கூரை வீடு அது. 15 வருடங்களாக அந்த வீட்டில்தான் புதுக்கோட்டை அருகே பூவரசக்குடியைச் சேர்ந்த சந்தானம்-முத்துலட்சுமி தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் 20 வருட வாழ்க்கையில், சேர்த்து வைத்திருந்த இரண்டு சொத்து, ஒன்று அந்த வீடு, மற்றொன்று வீட்டில் இருந்த ஒரு பீரோ. அவர்களின் இரண்டு சொத்தும் இப்போது அவர்களிடம் இல்லை. வீட்டின் அருகே இருந்த சுமார் 20 அடி உயரமுள்ள இலவம் பஞ்சு மரம் வீட்டில் விழுந்ததில் இரண்டு சொத்தும் நிலை குலைந்தது.

மரம் விழும் கடைசி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். முத்துலட்சுமிக்கு மட்டும் காலில் காயம். புயல் பாதித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள்  திரும்பவில்லை. அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் சலூன் கடை பெரியவர் தன் கடையில் தற்போதைக்கு ஒதுங்க இடம் கொடுத்திருக்கிறார். அந்தக் கடையும் புயலால் மேற்கூரை பாதிக்கப்பட்டிருக்கிறது. 

``அடித்த காற்றுக்கு 50 வருஷ மரம் சாய்ந்து விழுந்ததில், எங்கள் வீடு, பீரோ இரண்டு சொத்தும் இல்ல. உயிரும் போய் விடும் என்றுதான் நினைத்தேன். ஆனால், நான் கும்பிட்ட சாமிகள் எல்லாம் சேர்ந்து எங்களை காப்பாத்திருச்சு" என்று புயல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அந்த திக் திக் நிமிடங்களை நம்மிடம் விவரிக்கிறார் முத்துலட்சுமி.

இரவு படுக்கிறதுக்கு முன்னால், என் வீட்டுக்காரர், புதுக்கோட்டை மாவட்டம் புயல் பாதிப்பால், பாதிக்கப்படுமென்று காலையில் பேப்பர்ல படித்தேன் என்று சொன்னார். நம்ம ஊர எங்க, புயல் தாக்கப் போகுது’ என்று சொல்லிவிட்டு, தூங்கி விட்டார். அப்போது, நள்ளிரவு 12 மணி இருக்கும். வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக்கொண்டிருந்தார். முதலில், லேசா மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. வெளியே ஜன்னலைத் திறந்து பார்த்தேன். லேசான காற்று அடித்தது. தொடர்ந்து, லேசாக வீசிய காற்று பலத்த காற்றாக வீசத் தொடங்கி விட்டது. 50 வருஷமா நிற்கும் இலவம்பஞ்சு மரம் எங்கே வீட்டின் மீது விழுந்து விடுமோ என்ற பதற்றம், பயமும் எனக்குத் தொற்றி விட்டன. பிள்ளைகள் யாரும் இல்லை, இந்த வீட்டை விட்டால் எங்களுக்குச் சொந்தபந்தம் வேறு ஏதும் இல்லை. எங்கே போகிறது என்று தெரியவில்லை. வீட்டிலேயே இருந்து விட்டோம்.

பயத்துடனே 2 மணிநேரம் கழிந்தது. வீட்டின் கதவைத் திறந்தேன். லேசான காற்று வீசியது. கதவைச் சாத்திவிட்டுப் படுத்தேன். ஆனாலும், தூக்கம் வரலை. அதிகாலை, 3.30 மணிக்கு மீண்டும் ஒரு புயல் காற்று வீசத் தொடங்கியது. அந்தப் புயல் காற்றுதான் எங்கள் வீட்டையே சின்னா பின்னமாக்கியது" என்று கூறும் முத்துலட்சுமியின் முகத்தில், அன்றைய சம்பவத்தின் நினைவு அலைகள் ஓடின. தொடர்ந்து பேசினார், 

``சூறாவளிக் காற்று போல 5.30 மணிக்குப் புயல் காற்று சுழன்று, சுழன்று அடித்தது. முன்னைவிடக் காற்றின்வேகம் இரு மடங்கு இருந்தது. கணவரும் எழுந்துவிட்டார்.  ஜன்னலைத் திறந்தோம். காற்றில் ஜன்னல் தூக்கி அடிக்கப்பட்டது. சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சரிவதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தோம். அவர் என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்த்தேன். எங்களுக்குள் பயம் தொற்றிக் கொண்டது. உடனே, கதவைத் திறந்து வெளியே சென்றுவிட எண்ணி கதவைத் திறப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த இலவம் பஞ்சு மரத்தின் கிளை ஒடிந்து கூரையில் விழுந்தது. அடுத்ததாக, விழுந்த கிளை பீரோவில் விழுந்தது.

அவசரமாகக் கதவைத்திறந்து வெளியே வந்தோம். அதில் ஒரு கிளை என் காலில் விழுந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த 5 நிமிடத்தில் அருகே இருந்த மரம் முழுவதுமாக விழுந்து வீடே உருக்குலைந்தது. கடைசி சில நிமிடங்களில் வெளியே வந்ததால், மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டோம். ஆனால், 15 ஆண்டுகளாக நாங்கள் சேர்த்த இரண்டு சொத்தும் சேதமடைந்து விட்டது. நாங்கள் இதிலிருந்து மீண்டு வர இன்னும் 10 வருடங்கள் ஆகலாம்" என்றார் வேதனையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு