Published:Updated:

காவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்!

காவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
காவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்!

காவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்!

டீசல் விலை உயர்வால் லாரி வாடகை 25 சதவிகிதம் வரை எகிறி, விலைவாசி உயர்ந்திருக்கிறது. ‘பெட்ரோல் விலை எகிறுகிறதே’ என்று புலம்பினால், ‘‘எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுங்கள்’’ என ஆலோசனை தருகிறார்கள் ஆட்சியாளர்கள். தமிழக அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத் திடீரென உற்பத்தி பாதிக்கப்பட்டது. கூடங்குளத்திலிருந்து அணுசக்தி மின்சாரம் பல மாதங்களாகக் கிடைக்கவில்லை என தமிழக அரசு வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது. இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒற்றைத் தீர்வு, சூரியசக்தி மின்சாரம். ஒரு நல்ல செய்தி... இந்த விஷயத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா மாறியிருக்கிறது. 

‘நிலக்கரியைப் பயன்படுத்தி அனல்மின்சாரம் தயாரிப்பதும், அணு உலைகளை நிறுவி அணுமின்சாரம் தயாரிக்கப்படுவதும், இந்த பூமியைப் புதைகுழியில் தள்ளுவதற்குச் சமமான சுற்றுச்சூழல் சீர்கேடு’ என்று சூழலியலாளர்கள் குரல் கொடுக்கின்றனர். ‘ஏதோ ஒரு வழியில் மின்சாரம் கிடைத்தால் போதும்’ என்ற நிலையிலிருந்து, ‘பூமியை பாதிக்காமல் மின்சாரம் எடுக்க வேண்டும்’ என்ற நிலைக்கு இப்போது உலகம் மாறியிருக்கிறது. எனவே, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் களமிறங்கியிருக்கின்றன.

சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (IRENA-International Renewable Energy Agency) ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ‘2017-ம் ஆண்டில் குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியா முதல் இடத்தை நோக்கி முன்னேறி இருக்கிறது’ என இந்த ஆய்வறிக்கை சொல்கிறது. சூரியசக்தி மின்சாரத்துக்கான சூரிய மின் தகடுகள், உலகிலேயே சீனாவில்தான் அதிகம் தயாரிக்கப்பட்டன. ஆனால், சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தகுந்த ஆற்றல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா முன்னணிக்கு வந்திருக்கிறது.

காவிரி டெல்டாவைக் காப்பாற்ற... சூரியசக்திக்கு மாறுவோம்!

இந்த விஷயத்தில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதாக, IEEFA என்கிற சர்வதேச ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சக்தியில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு (18.5%) தமிழகத்தில் உற்பத்தியாகிறது. தமிழகத்தின் மின் கட்டமைப்பையும் ஆற்றலையும் மேலும் ஆய்வு செய்து சமீபத்தில் ஓர் அறிக்கை வந்துள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• மின் உற்பத்தி செலவைக் குறைத்துப் புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கி நகர்வதில், தமிழகம் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

• தமிழகத்தில் தற்போது நிலக்கரியைப் பயன்படுத்தி அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வெறும் 62 சதவிகிதத் திறனுடன்தான் இயங்குகின்றன. வரும் ஆண்டுகளில் இது 45 சதவிகிதமாகக் குறையக்கூடும். இதனால், மின் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்து, மின் கட்டணம் அதிகமாக உயரக்கூடும்.  

• காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம் முன்னோடியாக இருந்தாலும், இங்கே உள்ள ஆலைகள் 20 வருடங்களுக்கும் மேலானவை. பழைய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இந்த ஆலைகளை மேம்படுத்தினால், காற்றாலை உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்கலாம்.

• தீர்க்கமான முறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிப் பயணித்தால், 2026-27-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 56 சதவிகித மின்சக்தியை, காற்றை மாசுபடுத்தாத வளங்கள் மூலம் பெற முடியும்.

• கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மின்சார வாரியம், இன்னும் ஒருசில ஆண்டுகளில் லாபத்தை நோக்கி நகர்ந்துவிடும். ஆனால், மீண்டும் நிலக்கரி சார்ந்த மின் திட்டங்களைச் செயல்படுத்தினால், அது நிதிச்சுமையை அதிகரிக்கும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை, கூடங்குளம் அணு உலை துவங்கப்பட்டதிலிருந்து இன்று வரை சூழலியல் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி சார்ந்த புதிய மின்திட்டங்கள் மக்களின் ஆதரவோடு நிறைவேற்றுவது கடினம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சக்தியில் தமிழகம் முன்னோடியாக இருக்கும் சூழலில், மக்களைச் சிரமத்துக்கு உள்ளாக்கி, காற்றையும் மாசுபடுத்தி வரும் திட்டங்கள் தேவையா என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் திட்ட வல்லுநர்களும் சிந்திக்க வேண்டும்.

நெடுவாசல் தொடங்கி கதிராமங்கலம் வரை ஹைட்ரோகார்பனை நோக்கிப் பெரு நிறுவனங்கள் படையெடுக்கின்றன. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு உணவை அளிக்கும் காவிரிப் படுகையை ஹைட்ரோகார்பனுக்காகப் பலி கொடுப்பது தற்கொலைக்குச் சமம். ஹைட்ரோகார்பனுக்காக விவசாய பூமியைப் பெயர்த்தெடுப்பது உலக வரைபடத்தில் இதுவரை எங்கும் நடக்காத ஒன்று.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டாயமாக சூரிய மின் தகடுகள் பதித்து, சூரியசக்தி மின்சார உற்பத்தி செய்ய வேண்டும்’ என்கிற நல்ல திட்டத்தை 2015-ம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். அது, இன்றுவரையில் நடைமுறைக்கு வராமல் உள்ளது. இதை தமிழக அரசு உடனடியாகச் சட்டமாக்க வேண்டும். 

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்தியதைப் போல, அடுக்குமாடிக் குடியிருப்புகள், மாடிவீடுகள் மற்றும் பரந்த மொட்டை மாடிகளைக் கொண்ட அலுவலகங்களில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்சார்புடன் மின்சாரத்தை அவரவர் இடங்களிலேயே உற்பத்தி செய்துகொள்ள வழி இருக்கும்போது நிலக்கரிக்கான தேவையோ, ஹைட்ரோகார்பனுக்கான தேவையோ, மீத்தேனுக்கான தேவையோ இருக்கப்போவதில்லை. ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தேவை இருக்காது.

இப்போது, சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் செலவு என்பது ஒரு யூனிட்டுக்கு மூன்று ரூபாய்க்கும் கீழே வந்துவிட்டது. ஹைட்ரோகார்பன் மூலம் எடுக்கப்பெறும் மின்சாரம் என்பது இந்த மூன்று ரூபாயைவிட அதிகத் தொகையாக இருக்கும் பட்சத்தில், வர்த்தக ரீதியாக அது சாத்தியம் இல்லாததாகிவிடும். அப்போதுதான், பெரு நிறுவனங்களின் பார்வை காவிரி டெல்டாவை விட்டு அகலும். காவிரி, நெல் விளையும் பூமியாகவே தொடரும்.

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள சூரிய மின்சக்தி வரைவுக் கொள்கை, தொலைநோக்குப் பார்வையுடன் உள்ளது. இப்போது, தமிழகத்தில் 2,221 மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இதை 8,884 மெகாவாட்டாக உயர்த்துவது அரசின் திட்டம். முன்பெல்லாம் ஒருவர் தன் வீட்டு மொட்டை மாடியில் சூரிய மின்சக்தி தகடுகளைப் பதித்து மின்சாரம் தயாரித்தால், அதை மின் வாரியத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளன. வீடுகள், சிறு கடைகள், சிறு தொழிற்சாலைகள் ஆகியவை தாங்கள் தயாரிக்கும் மின்சாரத்தில், தங்கள் பயன்பாட்டுக்குப் போக மிச்சம் உள்ளதை மின் வாரியத்துக்கு விற்கலாம். இதற்காக நெட் மீட்டர் பொருத்தப்படும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருக்கும் மின் நுகர்வோர் பலரும் இணைந்து மின்சாரம் தயாரித்துப் பகிர்ந்துகொள்ளவும் வழி செய்யப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் பெரும் தொழிற்சாலைகள், தாங்கள் தயாரிக்கும் சூரியசக்தி மின்சாரத்தை முழுவதும் தாங்களே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விதி இருந்தது. கூடுதலாக அவர்கள் தயாரிக்கும் மின்சாரம் வீணாகிவிடும். இப்போது அவர்களும் தாங்கள் கூடுதலாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மின் வாரியத்துக்கு விற்க முடியும். இதனால், பெரும் தொழிற்சாலைகளின் கூரைகளிலும் வளாகங்களிலும் இனி சூரியசக்தி தகடுகளைப் பார்க்க முடியும்.

இந்த மாற்றத்தை அரசு மட்டுமே செயல்படுத்த முடியாது. மக்களும் இணைந்தால்தான் இது சாத்தியப்படும்.

- பொன்ராஜ் தங்கமணி