Published:Updated:

தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
தெர்ல மிஸ்

தெர்ல மிஸ்

“உலகில் எத்தனை சுவைகள் உள்ளன?”

- ஜெ.தரூன், நாச்சிக்குளம்

தெர்ல மிஸ்

“சுவைகள் என்றால் அது ஆறு சுவைதான். இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு (காரம்), துவர்ப்பு என அறுசுவை உணவுகளைச் சாப்பிட்டால்தான் நோயின்றி வாழ முடியும். நம் உடலில் காரம் 80 சதவிகிதமும் அமிலம் 20 சதவிகிதமும் இருக்கும். நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தே அமிலம், காரத்தன்மையின் அளவு கூடவோ குறையவோ செய்யும். சிலவகை சுவைகளைச் சாப்பிடாமல் தவிர்ப்பதால் அமிலம், காரத்தன்மையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வால் வளர்சிதை மாற்றம் ஏற்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தெர்ல மிஸ்

அன்றாட உணவில் அறுசுவையும் இருக்க வேண்டும். முற்காலத்தில் வாரம் ஒருமுறையாவது பாகற்காய் உள்ளிட்ட கசப்புத்தன்மை உள்ள உணவுகளை உண்டோம். அதேபோல் வெற்றிலையுடன் பாக்கு சேர்த்துப் போடுவதால் துவர்ப்புத் தன்மையை நாம் சேர்த்துக்கொண்டோம். ஆனால் அதன்பிறகு வெற்றிலை பாக்குடன் புகையிலை சேர்ந்ததால் வெற்றிலை போடுவது தவறு என்று அதை நிறுத்திவிட்டோம். இயற்கை உணவுகளை விட்டு, செயற்கை உணவுகளைச் சாப்பிடுவதால் உப்பு, புளிப்பு, இனிப்புச் சுவைகள் மட்டுமே கிடைக்கும். இன்றைக்கு நாம் உண்ணும் காய்கறிகள் பெரும்பாலும் கலப்பினத்தைச் சேர்ந்தவை என்பதால் அவற்றில் சத்துகளும் இல்லை, சுவைகளும் இல்லை. ஆக சுவைகள் இல்லாத உணவுகளையே உண்டுகொண்டிருக்கிறோம்.”

- யசோதரை கருணாகரன், உணவியல் நிபுணர்

“மெல்லிய பிளாஸ்டிக் கேரிபேக் மக்காத நிலையில் 50 மைக்ரானுக்கு மேற்பட்ட கனமான பைகள் எவ்வாறு மக்கும்?”

- முருகன், வேலூர். 

தெர்ல மிஸ்

“பொதுவாக எந்தப் பிளாஸ்டிக்குமே மக்காது. ஐம்பது மைக்ரானுக்கும் கீழுள்ள பிளாஸ்டிக் பொருள்களை விற்கவோ, வாங்கவோ, உற்பத்தி செய்யவோ கூடாது என்பதுதான் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை. அதைச் சில இடங்களில் 40 மைக்ரானாகக் குறைத்தும்விட்டார்கள். இந்த வரையறைக்குக் கீழே இருக்கும் பிளாஸ்டிக்குகள் மிகவும் மெல்லியவை. அவற்றை மறுசுழற்சி செய்வது மிகவும் கடினம். முன்பு மறுசுழற்சி என்று ஒரே வார்த்தையில் சொல்லிக்கொண்டிருந்தோம். வளர்ந்துவரும் அறிவியல் யுகத்தில் அதையே இரண்டாகப் பிரிக்கலாம். உயர்சுழற்சி (UpCycle), தாழ்சுழற்சி (DownCycle). பயன்படுத்தப்பட்ட பொருளை எடுத்து அதன் தரத்தை மீண்டும் உயர்த்தி மறு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுவதை உயர்சுழற்சி என்பார்கள். அதுவே தரம் தாழ்த்தப்பட்டு முன்பைவிடக் குறைவான பயன்பாட்டுக்கு அனுப்புவதைத் தாழ்சுழற்சி என்போம். ஐம்பது மைக்ரானுக்கு மேலிருக்கும் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்யும்போது அவற்றை மீண்டும் நமது பயன்பாட்டுக்கு உகந்த தரத்தோடு உற்பத்தி செய்யமுடியும். உதாரணத்துக்கு, ஒரு நெகிழி வாளியை மறுசுழற்சியின் மூலம் வாளியாகவோ அல்லது அதைப் போன்ற வேறேதேனும் பொருளாகவோ மாற்றிப் பயன்படுத்தலாம். ஆனால், ஐம்பது மைக்ரானுக்குக் கீழுள்ள பிளாஸ்டிக்குகளை அப்படிச் செய்யமுடியாது. பாலித்தீன் கவர்கள் போன்ற மெல்லிய பிளாஸ்டிக்குகள் மட்டுமே ஐம்பது மைக்ரானுக்குக் கீழேயிருக்கும். அவை பெரும்பாலும் ஆங்காங்கே வீசப்படுகின்றன. அவையே சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கின்றன. அவற்றை உயர்சுழற்சி செய்யமுடியாது. அவை மிகவும் மெல்லியதாக இருப்பதால் எவ்வளவு முயன்றாலும் தாழ்சுழற்சியே ஆகும். அதாவது அதன் தரம் குறைந்துகொண்டுதான் போகும்.”

முனைவர் ஆர்.ராஜமாணிக்கம் MSc., Ph.D, திடக்கழிவு மேலாண்மை ஆலோசகர்.

“நாட்டில் எத்தனை வகையான நீதிமன்றங்கள் இருக்கின்றன, எவ்வகையான வழக்குகளை எந்த நீதிமன்றம் விசாரிக்கும்?”

 - ந.சரண் நந்தகோபால், திண்டுக்கல்.

தெர்ல மிஸ்

“இந்தியாவில் நீதிமன்றங்களை அதிகாரவரம்புப்படி  நடுவர்  நீதிமன்றம், சார் நீதிமன்றம், மாவட்ட  (அ) செஷன்ஸ்  நீதிமன்றம்,  உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என வரிசைப்படுத்தலாம்.  இது தவிர தொழில்தகராறு, மோட்டார் வாகனவிபத்து, வணிகவரி, வருமானவரி, கலால் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கப் பல்வேறு தீர்ப்பாயங்கள் (Tribunals) இருக்கின்றன.

தனிநபர்களுக்கு இடையிலான சொத்து மற்றும்  உரிமையியல் வழக்குகளை  முதலில் தாலுகா அளவிலான முன்சீப் நீதிமன்றங்கள் விசாரிக்கும். இதற்கிணையான அதிகாரம் படைத்த  ‘குற்றவியல்  நடுவர் நீதிமன்றம்’ மூன்றாண்டுகள் வரை  தண்டனை விதிக்கக் கூடிய குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும். அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும்  குற்ற வழக்குகளை மாவட்ட (அ) செஷன்ஸ்  நீதிமன்றம் நேரடியாக விசாரிக்கும்.

இவை தவிர, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கவென அரசு, உயர், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களும்  இருக்கின்றன. கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வரிசையாக மேல்முறையீடு செய்யலாம். 

உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களுக்கு மேல்முறையீட்டு அதிகாரவரம்புடன், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் நேரடியாக வழக்குகளை விசாரிக்கும் அசல் அதிகாரவரம்பும் உண்டு. மாநிலங்களுக்கு இடையிலான வழக்குகளை உச்ச நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க இயலும். நீதிபதிகளின் பெயர்கள் நீதிமன்றங்களின் அதிகார வரிசைக்கேற்ப  நடுவர் அல்லது மாஜிஸ்திரேட், சார் நீதிபதி, மாவட்ட அல்லது செஷன்ஸ்  நீதிபதி, உயர் அல்லது உச்சநீதிமன்ற நீதியரசர்கள் என வேறுபடும்.” 

- ராஜகோபால், வழக்கறிஞர்.

வாசகர்களே... உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் therlamiss@vikatan.com க்கு அனுப்புங்க!