Published:Updated:

பிளாஸ்டிக்குக்குப் பதில் மாற்றுப் பொருள்கள் இருக்கு! - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் புதுமுயற்சி

பிளாஸ்டிக்குக்குப் பதில் மாற்றுப் பொருள்கள் இருக்கு! - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் புதுமுயற்சி
பிளாஸ்டிக்குக்குப் பதில் மாற்றுப் பொருள்கள் இருக்கு! - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் புதுமுயற்சி

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்குத் தடை விதித்திருக்கிறது தமிழக அரசு. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பிளாஸ்டிக் பொருள்களால் இந்த மண்ணுக்கு ஏற்பட்டு வரும் அதீத ஆபத்தைத் தடுப்பதற்கும் அரசு முன்னெடுத்திருக்கக்கூடிய இந்த முயற்சியைப் பொதுமக்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். 

ஆனால், அன்றாட வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியாக வேண்டிய சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் தேவை பயன்பாட்டுடன் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பொருள்களை, உடனடியாக விட்டுவிட்டு அதற்குப் பதிலாக எவற்றை நாம் பயன்படுத்துவது என்கிற குழப்பமும் தற்போது பொதுமக்களிடையே அதிகரித்துக்காணப்படுகிறது. இதற்குத் தீர்வு காணவும், அதேசமயம் பொதுமக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உள்ள பொருள்கள் குறித்த கண்காட்சியை திருப்பூரில் தொடங்கி நடத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியில், ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருள்களுக்கு மாற்றாகச் சந்தையில் கிடைக்கக்கூடிய பொருள்களை மக்களின் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம் அதுகுறித்த விழிப்புஉணர்வை அடைவதுடன், இயற்கைக்கும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்காத இம்மாதிரியான பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கும் பொதுமக்கள் முன்வருவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். மேலும், இன்று முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கண்காட்சியின் மூலம், பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்களைப் பற்றித் தெரிந்துகொள்வதுடன், குப்பை மேலாண்மை குறித்த தகவல்களையும் பொதுமக்கள் சேகரித்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது'' என்றனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த முயற்சிக்குப் பொதுமக்கள் மத்தியிலும் வெகுவாகப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.