Published:Updated:

2019-ல் பிளாஸ்டிக் தடை... என்ன செய்யவிருக்கின்றன ஃபுட் டெலிவரி ஆப்ஸ்?

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிக அளவில் உள்ள உணவகங்கள் என்ன செய்ய போகின்றன? அதைத் தவிர்க்கும் வகையில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எல்லாம் இந்த உணவு செயலிகள் செயல்படுத்த இருக்கின்றன? 

2019-ல் பிளாஸ்டிக் தடை... என்ன செய்யவிருக்கின்றன ஃபுட் டெலிவரி ஆப்ஸ்?
2019-ல் பிளாஸ்டிக் தடை... என்ன செய்யவிருக்கின்றன ஃபுட் டெலிவரி ஆப்ஸ்?

ளிகைக்கடைகளுக்கும் உணவகங்களுக்கும் பொருள்களை வாங்க துணிப்பைகளையும் பாத்திரங்களையும் பயன்படுத்திக்கொண்டிருந்த 90-களின் ஆரம்பத்தில் இந்தியாவில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிளாஸ்டிக்கானது அடுத்த சில ஆண்டுகளிலேயே தனக்கான இடத்தை ஆக்கிரமித்தது. மலிவானதும் எடை குறைவானதுமான பிளாஸ்டிக்கில் எளிதில் நீர் உட்புகாது என்பது ஒருபுறம் என்றாலும் மண்ணில் மக்குவதற்குக் கிட்டத்தட்ட 100 முதல் 1,000 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. நச்சுத்தன்மையுள்ள பல வேதிப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் காற்று, நீர் என இயற்கை வளங்களை மாசாக்குகிறது. மண்ணில் மக்காத்தன்மையாலும், மனித அலட்சியங்களாலும் வடிகால்களை அடைக்கும் பிளாஸ்டிக்கால் கடல்வாழ் உயிரினங்களும், பேரிடர் காலங்களில் மனித வாழ்வும் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றன.

அரசின் பிளாஸ்டிக் தடை

இந்தச் சூழலில்தான் வரும் 2019 ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒற்றைப் பயன்பாடு, பிளாஸ்டிக் பயன்பாடு அறவே இருக்காது என தமிழக அரசு கடந்த ஜூன் மாதம், சுற்றுச்சூழல் தினத்தன்று அறிவித்தது. எனினும் பால் பாக்கெட்டுகள், எண்ணெய், மருந்துப்பொருள்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளித்துள்ளது. மக்கள் அன்றாடம் புழங்கும் மளிகைக் கடைகள் போன்றவற்றில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பிளாஸ்டிக் குறைவாக உள்ள பைகள், துணிப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், உறிஞ்சுக் குழல் எனப் பலவற்றுக்கும் தடை விதித்து அதற்கு மாற்றாக, வாழை இலை, பாக்குமட்டை, தாமரை இலை போன்றவற்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு செயலிகள்

ஆன்லைன் உணவு செயலிகள் மூலம் மட்டும் உணவு வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் கணிசமாக உயர்ந்துள்ளது. தென்னிந்தியாவின் பெரு நகரங்களில் ஸ்விக்கி போன்ற, ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் செயலிகளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆப்கள் மூலமாக ஒரு மாதத்தில் மட்டும் தோராயமாக 1.4 கோடி பேர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்கின்றனர். இந்தியாவில் மட்டும் 45 நகரங்களில் செயல்படும் இந்தச் செயலிகள் கிட்டத்தட்ட 45,000 உணவகங்களுடன் கைகோத்துள்ளன. உணவு டெலிவரி செய்யும் வேலையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். குறைந்த காலத்தில் பெரு வளர்ச்சியைக் கண்டுள்ள இதுபோன்ற ஆன்லைன் செயலிகள் விரைவில் சிறு நகரங்களையும் எட்டிப் பார்க்கும். டெலிவரி செய்யப்படும் உணவுகள் பிளாஸ்டிக்கில் பேக் செய்யப்படுகின்றன. புது வருடம் பிறப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிக அளவில் உள்ள உணவகங்கள் என்ன செய்ய போகின்றன? அதைத் தவிர்க்கும் வகையில் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எல்லாம் இந்த உணவு செயலிகள் செயல்படுத்த இருக்கின்றன? 

நடவடிக்கை என்ன?

பெங்களூரு, புனே, மும்பை போன்ற நகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி அந்தந்த நகரங்களில் ஏற்கெனவே 'Swiggy Packaging Assist’-ஐ அறிமுகம் செய்துள்ளது. சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையிலான காகிதப் பொருள்கள், எளிதில் மக்கும் வகையிலான ஸ்டார்ச் கொண்டு தயாரிக்கும் பொருள்கள் போன்றவற்றை உபயோகித்து உணவுகள் பேக் செய்யப்படுவதற்கு உதவுவதுதான் இதன் நோக்கம். தற்போது இந்தத் தடையின் மூலம் சென்னையிலும் இதை நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதன்மூலம் உணவகங்கள் பிளாஸ்டிக் தடையைக் கொஞ்சம் சிரமமின்றி எதிர்கொள்ளும். 

தமிழகத்தில் அமல்படுத்தவுள்ள பிளாஸ்டிக் தடையை வரவேற்றுள்ள ஜொமேட்டோ நிறுவனம், இதற்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. ``சூழலுக்கு உகந்த வகையில் உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் அல்லாத பொருள்களைப் பயன்படுத்தி பேக் செய்யத் திட்டமிட்டுள்ளோம். மாற்றுப் பொருள்களுக்கு விரைவில் அதிகளவில் தேவை உருவாகும் பட்சத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தி பேக் செய்ய ஆகும் செலவைவிட நிச்சயம் குறைந்த செலவே ஆகும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதேபோல பிற நிறுவனங்களும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்களை, தங்களுடன் கைகோத்துள்ள உணவகங்களுக்குப் பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளன. இந்த முயற்சி வாடிக்கையாளர்களின் கட்டணத்தில் எதிரொலிக்குமா என்பது இன்னும் சில நாள்கள் கழித்தே தெரியும்.